For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வரையும், அமைச்சரையும் டிஸ்மிஸ் செய்க.. ஆளுநருக்கு ஸ்டாலின் பரபர கடிதம்

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, ஜனநாயகம் மற்றும் மாநில நலன் கருதி, அதிமுக அரசில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் வித்தியாசாகர் ராவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபையின், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி 5.12.2016 முதல் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி காலியானது. அந்த தொகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினரை தேர்வு செய்யும் பொருட்டு, 12.4.2017 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது.

ஜெயலலிதாவின் மறைவின் விளைவாக அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு, அதிமுக (புரட்சி தலைவி அம்மா) என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், அதிமுக (அம்மா) என டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இந்த இரண்டு அணிகளும் தேர்தலில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தின. அதில் அதிமுக (அம்மா) அணிக்கு 'தொப்பி' சின்னத்தையும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணிக்கு 'மின் கம்பம்' சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

டிடிவி தினகரன் போட்டி

டிடிவி தினகரன் போட்டி

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும், பெரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனின் தலைமையின் கீழ் உள்ள அதிமுக (அம்மா) அணியை சார்ந்தவர்கள் என்பது அனைவரும் நன்கு அறிந்தது மட்டுமின்றி, ஊடகங்களிலும் தெளிவாக பதிவு செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் சார்பாக டி.டி.வி. தினகரன் நிறுத்தப்பட்டு, அவர் 23.3.2017 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ரூ.100 கோடி செலவு

ரூ.100 கோடி செலவு

இதையடுத்து, தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய டி.டி.வி.தினகரன், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார். தன்னுடைய கைப்பாவைகளான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்களோடு சேர்ந்து, குறிப்பாக விஜயபாஸ்கருடன் கைகோர்த்துக்கொண்டு, தொகுதியிலுள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருட்டு, ஊழல் பணத்திலிருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, இந்திய தண்டனைச் சட்டப்படி சதிக் குற்றத்தில் டி.டி.வி. தினகரன் ஈடுபட்டுள்ளார்.

வாக்காளருக்கு ரூ.10,000

வாக்காளருக்கு ரூ.10,000

டி.டி.வி. தினகரன் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து வீதி வீதியாக, வீடு வீடாக சென்று ஒரு வாக்காளருக்கு 10,000 ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும் என்றும், விளக்குகள்;புடவைகள்;வேட்டிகள்;பால் டோக்கன்கள்;மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் அவரின் கட்சியில் உள்ள தேர்தல் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு பணத்தினை எடுத்துச்செல்ல காவல்துறை வாகனங்கள், சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்ட அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மகிழுந்துகள் போன்ற மாநிலத்தின் நிர்வாக இயந்திரங்களை இவர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

தற்போது, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் 07.04.2017 அன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் மூலம் நம்பத்தகுந்த தகவல்கள் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. வருமான வரித்துறை சட்டம், 1961 பிரிவு 132-ன் கீழ், சி.விஜயபாஸ்கர் வீடு உட்பட சென்னையில் 21 இடங்களிலும், சென்னைக்கு வெளியே தமிழகத்தின் 11 இடங்களிலும் சோதனை செய்யப்பட்டு, ஆவணங்கள், பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சரத்குமார் வீட்டிலும் சோதனை

சரத்குமார் வீட்டிலும் சோதனை

சி.விஜயபாஸ்கருடன் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் மற்றும் நடிகர் சரத் குமார், முன்னாள் எம்.பி மற்றும் அதிமுக தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு சுகாதார சேவைகள் இயக்குனர் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.எஸ்.கீதா லக்ஷ்மி ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

முதல்வர், அமைச்சர்கள்

முதல்வர், அமைச்சர்கள்

விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.63 லட்சம் வாக்காளர்களில் 2.24 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் உலவிக் கொண்டிருக்கும் பல்வேறு ஆவணங்களில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜூ, எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி, வெள்ளமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மற்றும் ராஜ்ய சபா எம்.பி ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ன.

தகவல்

தகவல்

உண்மையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட தொகுதியினை 256 பாகங்களாக பிரித்து அமைச்சர்கள் செய்ய வேண்டிய பண விநியோக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

பாகங்கள் பிரிப்பு

பாகங்கள் பிரிப்பு

ஒரு அமைச்சருக்கு சில பாகங்கள் என்று பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 37,291 வாக்குகளுக்கு பணம் கொடுக்க அமைச்சர் வேலுமணிக்கு சுமார் ரூ.15 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளில் வெளி வந்துவிட்ட வருமான வரித்துறையினரின் ஆவணங்களை பார்க்கும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 33,193 வாக்குகளை வசப்படுத்த ரூ.13.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்ச்சர் செங்கோட்டையன் அவர்கள் 32,830 வாக்குகளைப் பெற ரூ13.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த ஏழு முக்கிய தேர்தல் பொறுப்பாளர்களுக்கு ரூ. 89,65,80,000 ( எண்பத்து ஒன்பது கோடியே அறுபத்தைந்து லட்சத்து எண்பதாயிரம்) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பண விவகாரம் வெளிவந்த பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை அழிக்க முயற்சி

ஆவணங்களை அழிக்க முயற்சி

வருமானவரிச் சட்டம், 1961- ன் பிரிவு 278டி மற்றும் 132-ன் கீழ் நடைபெறும் வருமானவரிச் சோதனையின்போது கைப்பற்றப்படும் எந்தவொரு ஆவணமும், கணக்கு புத்தகமும், பொருளும், அந்த 132-வது பிரிவின் உட்பிரிவு 4-A-ன்படி "யாரிடமிருந்து கைப்பற்றப்படுகிறதோ , அவருக்கு சொந்தமாக கருதப்பட வேண்டும்" என்று சொல்கிறது. மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 171-E-ன்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அபாரதத்துடன் கூடிய ஒரு வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். விஜயபாஸ்கர் மற்றும் பிறரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையிடும்போது தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளை விஜயபாஸ்கர் தடுக்க முனைந்தது தொலைக் காட்சிகளில் வெளியானது. அதோடு, அமைச்சர் அவர்கள் வருமான வரித்துறையினரை தடுக்க தன் வீட்டின் முன் கட்சிக்காரர்களை நிறுத்தியதோடு, முக்கிய ஆவணங்களை அழிக்க முனைந்துள்ளார்.

ஓட்டுநர் ஓடிச்சென்றார்

ஓட்டுநர் ஓடிச்சென்றார்

உண்மையில், அதிகாரிகளினுடைய சோதனை நடைபெறும்போதே, அமைச்சரின் ஓட்டுநர் சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று காம்பவுன்டிற்கு வெளியே வீசியுள்ளார். அதை அங்கிருந்த கட்சியினர் உடனே எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் பல தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவந்துள்ளது. விஜயபாஸ்கரின் தடைகளையெல்லாம் மீறி, வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.5 கோடி பணத்தையும், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.24 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி வரை பணப்பட்டுவாடா செய்வதற்கு முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்ததற்கான முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட பொருள், பணம் உள்ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கை

அறிக்கை

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற வரலாறு காணாத தேர்தல் முறைகேடுகள் மற்றும் வருமான வரித்துறையினரின் சோதனையில் கிடைத்த முக்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து இந்திய தேர்தல் ஆணையம் 16.3.2017 அன்று வெளியிட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கான (எண்.11) இடைத்தேர்தலை ரத்து செய்து 9.4.2017 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மாநில அரசின் நிர்வாகத்தை பயன்படுத்தி முதலமைச்சர் மற்றும் அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் மட்டுமின்றி, வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் வேட்பாளர் தினகரன், முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சர்களால் வழங்கப்பட்ட பல சம்பவங்களை தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கைகளாக கிடைக்கப்பெற்றதால், ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. உண்மையில், ஆளுங்கட்சி மற்று இதர முக்கிய கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் சிறப்பு பார்வையாளர்-2 தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 வருடம் போட்டியிட தடை

6 வருடம் போட்டியிட தடை

தேர்தலில் லஞ்சம் கொடுப்பதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு123(1)ன் கீழ் வரும் தேர்தல் முறைகேடுகளும் "வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது" என்ற அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம். இது மாதிரி குற்றங்களில் ஈடுபட்டு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,/எம்.பி.,க்கள் மேற்கண்ட சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டாலே மக்கள் பிரநிதித்துவச் சட்டப் பிரிவு 8(1)ன் கீழ் குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பை சந்திப்பார்கள்.

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

எனவே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் திட்டமிட்டு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து இருப்பதற்கு ஆதாரங்கள் வெளிப்பட்டு, அவர்கள் தண்டனைக்கு உரியவர்களாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களாகவும் ஆகிறார்கள்.

ஆளுநர் விருப்பப்படும் வரைதான்

ஆளுநர் விருப்பப்படும் வரைதான்

இந்திய அரசியலமைப்புச்சட்டப் பிரிவு 164(1) ன்படி, கவர்னர் அவர்கள் தான் முதலமைச்சரை நியமிக்கிறார். அப்படி நியமிக்கப்படும் அமைச்சர்கள் ஆளுனர் அவர்களின் விருப்பம் தொடரும் வரைதான் பதவியில் நீடிக்க முடியும். ஆகவே தற்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்துள்ள குற்றம்சாட்டும் ஆதாரங்களின் மூலம் அவர்கள் அனைவரும் அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இருப்பதும், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதும் மற்றும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்தல் குற்றங்கள் புரிந்திருப்பதும் தெரிய வருகிறது. இதன் மூலம், அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளையும், அரசியலமைப்பின் அற நெறிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு தவறு இழைத்திருப்பதற்கான முகாந்திரம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிய வந்துள்ளது.

அமைச்சர்களை நீக்குக

அமைச்சர்களை நீக்குக

எனவே, கவர்னர் அவர்கள் உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும். அவர்கள் அப்படி செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

முதல்வரே முகவராக

முதல்வரே முகவராக

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும், பொறுப்பில் உள்ள முதலமைச்சரும், அமைச்சர்களும் கறைபடிந்த கைகளுடன் லஞ்சம் கொடுக்கும் முகவர்களாக செயல்பட்ட வெட்கக்கேடான இழிநிலை இருந்ததில்லை என்பதோடு, இது ஜனநாயகத்தை வேரறுக்கும் செயல் மட்டுமல்ல, தேர்தல் செயல்பாடுகளில் இத்தகைய நிலை வெளிப்படையாக அதிகரித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படிப்பட்ட வெளிப்படையான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்கப்படாமல் போனால், எத்தனை ஊழல் மற்றும் கொடிய செயல்களில் ஈடுபட்டாலும் எந்தவித பின்விளைவும் ஏற்படாது என்று மற்றவர்கள் கருத இடமளித்து விடும்.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுகல் சி சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், செல்லூர் கே.ராஜூ, எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோரை உடனடியாக அழைத்து, அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். தவறும் பட்சத்தில், அரசியலமைப்பின் மதிப்பையும், அற நெறிமுறைகளையும் பாதுக்காக்கும் வகையில் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். மேலும், ஜனநாயகம் மற்றும் மாநில நலன் கருதி, அதிமுக அரசில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
M.K.Stalin writes letter to the governor, asking he should order CM and Ministers to resign them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X