குழந்தைக்காக 'காலிங் பெல்' அழுத்தாமல்.. பைப் மீது ஏறி சென்ற தந்தை.. ஒரே நொடியில்.. ப்ச்.. பரிதாபம்!
திருப்பத்தூர்: தனது குழந்தையின் உறக்கம் கலையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 'காலிங் பெல்' அழுத்தாமல் வீட்டின் பின்புறத்தில் இருந்த பைப் வழியாக ஏறிச் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை மீது இருந்த அளவுகடந்த பாசத்தால் அந்த இளைஞர் செய்த விபரீத செயல், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தைக்கு தந்தையே இல்லாமல் செய்துவிட்டது.
அவரது இறுதிச்சடங்கில் தந்தை இறந்துவிட்டார் என்று கூட புரியாமல் அந்தக் குழந்தை அவர் மீது ஏறி விளையாடிய காட்சி கல் மனதையும் கரைப்பதாக இருந்தது.

குழந்தையின் தூக்கத்திற்காக..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த தாயப்பார் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு (30). மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. தென்னரசு எப்போதும் வேலை முடிந்து இரவு தாமதமாகதான் வீட்டுக்கு வருவாராம். கடந்த சில வாரங்களாக காலிங் பெல் அடிப்பதால் குழந்தை தூக்கத்தில் இருந்து விழித்து வந்துள்ளது. இதனால் குழந்தையின் தூக்கம் கலையாமல் இருக்க, மனைவிக்கு போன் செய்து கேட்டை திறக்குமாறு கூறுவது தென்னரசின் பழக்கமாக மாறியுள்ளது.

பைப்பில் ஏறிய இளைஞர்
இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல தென்னரசு வேலை முடிந்து இரவு தாமதமாக வந்துள்ளார். பின்னர் கீழே உள்ள கேட்டை திறப்பதற்காக அவர் தனது மனைவி புனிதாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் புனிதா போனை எடுக்கவில்லை. பல முறை 'கால்' செய்தும் புனிதா போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போதாவது, அவர் காலிங் பெல்லை அழுத்தியிருக்கலாம்.ஆனால், குழந்தையின் உறக்கம் கலைந்து விடுமே என நினைத்த தென்னரசு, வீட்டின் பின்புறத்தில் உள்ள பைப் வழியாக 3-வது தளத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு அவர் ஏறியுள்ளார்.

தலையில் பலத்த காயம்
இதில் வீட்டின் பால்கனி வரவே அதில் கை வைத்து ஏற முயன்ற போது, திடீரென நிலைத்தடுமாறு தென்னரசு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மயக்கம் அடைந்துள்ளார். இந்நிலையில், நடு இரவில் தூக்கத்தில் இருந்து விழித்த மனைவி புனிதா, செல்போனில் கணவர் அழைத்திருப்பதை பார்த்து அவருக்கு திரும்ப அழைத்துள்ளார். ஆனால், தென்னரசு போன் எடுக்காததால் பயந்துபோன புனிதா, அருகில் வசிக்கும் தனது அண்ணனுக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார்.

பரிதாபம்
இதையடுத்து அங்கு வந்த புனிதாவின் அண்ணன், வீட்டின் அருகே நின்றபடி தென்னரசின் செல்போனை அழைத்தார். அப்போது வீட்டுக்கு பின்புறத்தில் இருந்து செல்போன் சத்தம் கேட்டுள்ளது. பின்னால் சென்று பார்த்த போது தென்னரசு ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்த புனிதாவின் அண்ணன், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தென்னரசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உறக்கத்தை கலைக்க விரும்பாமல், பைப் மீது ஏறிச் சென்று இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications