எங்கே போனது காவிரி நீர்? ஏமாற்றியதா கர்நாடகா? கேள்வி எழுப்பும் காவிரி உரிமை மீட்புக் குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மாதம் 30 ஆம் தேதி கர்நாடக அரசு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 4000 கன அடி அடி தண்ணீர் திறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 6,000 கன அடி திறந்துவிட்டதாக கர்நாடக அரசு அறிவித்தது.ஆனால், கடந்த 7ஆம் தேதிவரை புதிய நீர் வரத்து மேட்டூர் அணைக்கு வரவே இல்லை. வெறும் 37 கன அடி மட்டும் தான் வந்து கொண்டிருந்தது.

கடந்த 8 ஆம் தேதிதான் 1000 கன அடி தண்ணீர் வந்ததாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 Maniyarasan urges government to raise questions about Karanatak's Cauvery water release at SC

மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கே.ஆர்.சாகர், கபினி ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட்டால், வழக்கமாக மூன்று நாட்களில் மேட்டூர் அணைக்கு அந்த நீர் வந்து சேரும். இந்தத் தடவை ஏழு நாள் கழித்து, அதுவும் 1,000 கன அடி அளவில்தான் குறைவாகத் தண்ணீர் வந்த மர்மம் என்ன? காவிரி ஆறு காய்ந்து கிடப்பதால், அதன் மடு மற்றும் மணல் வெளி தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொள்ள இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டது என்று கூறப்பட்டது.

ஆனால், அது உண்மைக் காரணம் அல்ல என்றும் தமிழ்நாட்டுக்கு வந்த காவிரி நீரை வழிநெடுக கர்நாடக மாநிலத்தவர் ஆற்றுக்குள் வாய்க்கால் வெட்டி, கனரக மோட்டார் எந்திரங்களை வைத்து எடுத்துக்கொண்டுள்ளனர். தண்ணீரை எடுத்து தங்களுடைய வேளாண்மைக்கும் மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டதால்தான், காவிரி நீர் மேட்டூர் அணை வருவதற்கு இவ்வளவு தாமதமானது என்பதை ஊடகங்கள் சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளன.

காவிரியில் குறைவான நீர்வரத்து குறித்த உண்மையைத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கண்டறியவில்லை. கர்நாடக அரசு சட்டத்திற்குப் பணிந்தோ, மனித நேய அடிப்படையிலோ தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை. வரும் 11.07.2017 முதல், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு காவிரி நீர் வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கவுள்ளது. இந்த நிலையில், தன்னுடைய ஆணைப்படி கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டால், "இதோ திறந்துவிட்டோம்" என்று கணக்குக் காட்டுவதற்காகத்தான், நல்ல மனிதரைப் போல் நாடகமாடிட கர்நாடக முதலமைச்சர் சிறிது தண்ணீர் திறந்துவிட்டார். அந்தத் தண்ணீரையும் கர்நாடக எல்லையிலுள்ள கன்னட உழவர்களும் மற்றவர்களும் திருடிக் கொள்வது கர்நாடக அரசுக்குத் தெரிந்தாலும், அதைத் தடுக்காது என்பதால் தமிழக அரசு விழித்துக்கொள்ளவேண்டும்.

வரலாறு காணாத வறட்சியில் மாநிலம் சிக்கித்தவிக்கும் நிலையில், தமிழக அரசின் இப்படிப்பட்ட அக்கறையற்ற, அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர் வாழ்வுரிமையைப் பறிப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, அதைச் செயல்படுத்த மறுத்து நீதிமன்ற அவமதிப்பு செய்ததை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய அழுத்தத்துடன் கொண்டு சென்று நீதி கேட்க வேண்டும். அடுத்து, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட்ட தண்ணீரை களவாடிக் கொள்வதற்கு வாய்ப்பளித்த கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு கோர வேண்டும், என்று மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cauvery urimaigal Meetpu Kuzhu co-ordinator Maniyarasan urges government to fire karnataka at Supreme court
Please Wait while comments are loading...