For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறில் அத்துமீறும் மலையாளிகளே எச்சரிக்கை..

By Mathi
Google Oneindia Tamil News

நீண்டகாலமாக மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணையில் - தமிழக அதிகாரிகளைத் தாக்கி வருகிறார்கள். 2011 நவம்பரில், முல்லைப் பெரியாறு அணைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் குடியிருப்புகளை மலையாளிகள் கல்லெறிந்து தாக்கினார்கள். அவர்களின் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குப் போக முடியவில்லை. அப்போது தமிழகப் பொறியாளர்கள் கேரளத்தைச் சேர்ந்த குமுளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். கேரளக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் தமிழகத்தின் குத்தகை உரிமைக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வுக்குச் சென்ற தமிழகப் பொறியாளர்களைத் திரும்பிப் போகவில்லை என்றால் சுடுவோம் என்று அச்சுறுத்தி கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பினார்கள். இதற்கு, தமிழக அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மையால் திரும்பத் திரும்ப மலையாளக் காவல்துறையினர், மலையாள வனத்துறையினர், மலையாள அரசியல்வாதிகள், மலையாள வன்முறைக் கும்பல் ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தமிழக அதிகாரிகளையும் ஊழியர்களையும் தாக்கி வருகிறார்கள்.

Maniyarasan warns Kerala on MUllai periyar dam row

20 ஆண்டுகளுக்கு முன் முல்லைப் பெரியாறு அணைக்கு இருந்த மின் இணைப்பைத் துண்டித்த கேரள அரசு, இன்றுவரை மீண்டும் மின் இணைப்புத் தர மறுத்து வருகிறது. கேரளத்தின் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளின் மலையாள இனவெறிக்கு - தமிழினப் பகை அரசியலுக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்? இந்த அநீதிகளை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் தி.மு.க. அரசோ, அ.தி.மு.க. அரசோ தமிழ்நாட்டில் செயல்பட்டதில்லை என்பதை தமிழர்கள் கவனிக்க வேண்டும்.

2006 - நவம்பரில் நடுவண் அரசின் உள்துறையைச் சேர்ந்த நுண்ணறிவுப் பிரிவின் பரிந்துரையைச் செயல்படுத்தத் தமிழக அரசு முன்வராதது ஏன்?

தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம், மேற்படி நடுவண் நுண்ணறிவுப் பிரிவின் பரிந்துரைப்படித் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி தமிழக உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 2011 இல் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கிடப்பில் போட்டுள்ளது. அந்த வழக்கைப் பயன்படுத்திக் கொண்டு, நடுவண் தொழில்துறைப் பாதுகாப்புப் படையை முல்லைப் பெரியாறு அணையில் நிறுத்தும் முயற்சியில் தமிழக அரசு முனையவில்லை.

2006லிருந்து செயலற்ற ஆட்சியாளர்கள் மாறி மாறித் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள். இப்பொழுது தலைமைச் செயலாளரை விட்டு கேரளத்திற்கு எழுதச் சொன்ன மடலும், மலையாள முரடர்களைத் தடவிக் கொடுப்பது போல் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் நிலையை எண்ணி, தமிழின உரிமைக்காப்பையும் தமிழர்கள் உயிர்க்காப்பையும் மையமாக வைத்து மாற்று அரசியல் முடிவுகளுக்கு வரவேண்டும். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசு ஆட்சிதான், கேரளத்தில் தமிழினப் பகை அரசியல் நடத்துகின்றது; அதேபோல் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் கேரளத்தில் தமிழினப் பகை அரசியல் நடத்துகின்றன.

இனிமேலும் தமிழ்மக்கள் இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம், சர்வதேசியம் பேசும் தமிழினத் துரோக அரசியலை ஏற்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்.

தமிழர்களின் தற்காப்புத் தேசியம் தமிழ்த்தேசியமே! இத் தமிழ்த்தேசியத்தையும் பதவி அரசியலுக்கு பயன்படுத்துவோரை அடையாளம் கண்டு பதவி, பணம், விளம்பரம் மூன்றையும் துறக்கத் துணிந்த மக்கள் எழுச்சித் தமிழ்த் தேசியத்தின் பக்கம் இளைஞர்கள், மாணவர்கள், அறிவுத்துறையினர், உழைக்கும் மக்கள் ஆகியோர் அணி சேர வேண்டும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் பின்வரும் கோரிக்கைகளையும் அறிவிப்புகளையும் முன் வைக்கிறது.

1. தமிழக அரசே, முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரியைத் தாக்கிய மலையாள வன்முறைக் கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை எடு!

2. நடுவண் உள்துறை நுண்ணறிவுப் பிரிவு கூறியபடி, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பிற்கு நடுவண் தொழில்துறைப் படையினரை நிறுத்த நடவடிக்கை எடு!

மலையாளிகளுக்கு வேண்டுகோளும் எச்சரிக்கையும்!

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி - முல்லைப் பெரியாறு அணையில் 142 அடித் தண்ணீர் தேக்குவதைத் தடுத்திட வதந்தி பரப்புதல் - தமிழக அதிகாரிகளைத் தாக்குதல் - வன்முறையில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் கேரள அரசும், கேரள அரசியல்வாதிகளும், மலையாள வன்முறைக் கும்பலும் ஈடுபட்டால், தமிழகத்திலிருந்து மலையாள நிறுவனங்களையும் மலையாளிகளையும் வெளியேற்றும் போராட்டம் உருவாகும் என்பதையும், கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்கும் போராட்டம் எழுச்சியுறும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.''

இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.

English summary
Tamizhar Periyakkam leader P. Maniyarasan warns Malaiyalis over Mullai Periyar dam row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X