உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மூக்கு உடைபட்டும் திருந்தாத ஆளுநர் ரவி- சென்னை ஆர்ப்பாட்டத்தில் சீறிய வைகோ
சென்னை: "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி; பா.ஜ.கவின் ஏஜெண்டாக செயல்படும் ஆர்.என்.ரவியை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல், பாஜக கட்சி அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்" என்று சென்னை ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் வக்ஃபு (வக்பு) திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி பங்கேற்றார்.

இந்தப் போராட்டத்தில் வைகோ பேசுகையில், ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது சிறுபாமையினரை பாதுகாப்பதுதான். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மதங்களும் தங்களுடைய உரிமையை இழக்கும் நிலை ஏற்படும். இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படாது.
தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி பெயர்களை சட்டமன்றத்தில் உச்சரிக்க மாட்டேன் என்று சொல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பா.ஜ.கவின் ஏஜெண்டாக செயல்படும் ஆர்.என்.ரவியை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல், பாஜக கட்சி அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
முன்னதாக மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். எனவே அவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வக்ஃபு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் என்றும் மதிமுக நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்று மதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications