For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் குடும்பம் ஏன் கோவில் கோவிலா போகுது.. சட்டசபையில் செல்லூர் ராஜு பேச்சு.. திமுக கொந்தளிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர், கோவில் கோவிலாக செல்வது ஏன் என்று அமைச்சர் செல்லுார் ராஜூ கூறியதற்கு, தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில், அமளி ஏற்பட்டது.

அமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பேரவை நடவடிக்கைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.

சட்டசபையில் இந்து சமய அறநிலையம், தமிழ் வளர்ச்சித் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. திமுக உறுப்பினர் கே.ராதாமணி புதன்கிழமை பேசினார். அப்போது அவர், " பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகைக் கண்டான். எதனைக் கண்டான் மதத்தைப் படைத்தான் என கண்ணதாசன் பாடினார். அவரே பத்து ஆண்டுகள் கழித்து, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என பக்திப் பாடலை எழுதினார். இப்படி, மனிதர்களின் பக்தியானது இன்பம், துன்பத்துக்கு ஏற்றாற்போன்று ஏறி ஏறி இறங்குகிறது. பங்குச் சந்தைகளில் ஏறுவதைப் போன்று என்று கூறினார்.

Minister talks about Stalin wife's religious belief in assembly

இதற்கு குறுக்கிட்டு பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உங்களது தலைவர், துணைத் தலைவர் வீடுகளில் கோயில், கோயிலாகச் செல்கிறார்கள். அவர்கள் எதற்காகப் போகிறார்கள். அவர்கள் போவதைப் போன்று மக்கள் போகிறார்கள். அதனை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது பேசிய பேரவைத் தலைவர் பி.தனபால், இதுபோன்ற விஷயங்கள் சபையில் ஏற்கெனவே பேசியுள்ளனர். அனைவரும் உட்காருங்கள் என்றார்.

ஆனாலும், திமுக உறுப்பினர்கள் சமாதானம் அடையாமல் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல் எழுப்பினர். அப்போது, எதிர்க்கட்சி கொறடா சக்ரபாணி பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டார். இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

எதிர்க்கட்சி கொறடா சக்ரபாணி பேசும் போது, அமைச்சர் எந்த சம்பந்தமும் இல்லாமல், வெளியே இருக்கக் கூடியவர்களைப் பற்றி பேசுகிறார். ஆதாரம் இல்லாததை பேசுகிறார். அதற்கான ஆதாரம் இருந்தால் பேசட்டும். இல்லாவிட்டால் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

அப்போது, சபாநாயகரின் இருக்கைக்கு அருகே வந்த திமுக உறுப்பினர் க.பொன்முடி, பேரவைத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் கே.ராஜு விளக்கமளிக்க முற்பட்டார். அதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதித்தார்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும் போது, நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. கோயிலுக்கு எல்லோரும் போகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரின் துணைவியாரும் கோயிலுக்குப் போகிறார். அது எதற்காகப் போகிறார் என்றே கேட்டேன். அதில் தவறேதும் இல்லை என்று கூறினார்.

அமைச்சரின் விளக்கத்தை ஏற்காத திமுக உறுப்பினர்கள், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். அமைச்சர் மீண்டும் அதே விளக்கத்தைக் கூறியபோதும் அவர்கள் அதை ஏற்கவில்லை.

அப்போது எழுந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதம், தெய்வத்தின் மீதான நம்பிக்கையை பங்குச் சந்தையுடன் ஒப்பிட்டு உறுப்பினர் பேசினார். எல்லோரும் கோயிலுக்கு போகிறார்கள். அவர்களது வீட்டிலும் போகிறார்கள். அவர்களுக்கு இன்பமா, மகிழ்ச்சியா என்றே அமைச்சர் கேட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் 100 நாள் சாதனையை உலகத்துக்கு எடுத்துச் சொல்ல விடாமல் அதனை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்றார்.

அப்போது பேசிய சபாநாயகர் தனபால், அமைச்சர் யாரையும் புண்படுத்துவது போன்று பேசவில்லை. அதற்கு அவர் விளக்கத்தை அளித்ததுடன், வருவாய்த் துறை அமைச்சரும் விளக்கியுள்ளார். அமைச்சர் அளித்த விளக்கம் ஏற்கப்பட்டது. இதுதான் எனது தீர்ப்பு என்று கூறினார்.

பின்னர் பேசிய ராதாமணி, ''நானும் சபரிமலைக்கு செல்பவன் தான். சபரிமலைக்கு போகும்போது, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில், கேரளா எல்லையில் பக்தர்களுக்கு தங்கும் வசதியும், தற்காலிக பஸ் நிறுத்தமும் அமைக்க வேண்டும்,'' என்றதும், சபையில் திடீர் சிரிப்பொலி எழுந்தது.

English summary
Minister Sellur Raju talked about opposition leader MK Stalin wife's religious belief in assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X