• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்தோ.. அனிதா உன்னுடன் சமூகநீதியையும் பறிகொடுக்கிறோமோ.. ஸ்டாலின் கண்ணீர் மடல்

|

சென்னை: அனிதாவுடன் சேர்த்து சமூக நீதியையும் பறி கொடுக்கிறோமோ என்று திமுக செயல் வீரரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்ணீர் மடல் விடுத்துள்ளார்.

திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள மடலில் இதுபோல உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். மத்திய மாநில அரசுகள் முறையாக செயல்பட்டிருந்தால் அனிதா இப்படி அசைவற்றுக் கிடப்பாரா என்று தனக்குள் கோபம் எழுவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடல்:

"அந்தோ.. அனிதா உன்னுடன் சமூகநீதியையும் பறிகொடுக்கிறோமோ!"

என் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் மடல்.

 அசைவற்ற நிலை...

அசைவற்ற நிலை...

அசைவற்ற நிலையில் கிடத்தப்பட்டிருந்த அரியலூர் மாணவி அனிதாவின் உடலைப் பார்க்க நேர்ந்தபோது, இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது என்றுதானே முடிந்தவரை போராடினோம். தி.மு.கழகத்துடன் தோழமை சக்திகளையும் இணைத்து களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். அத்தனை முயற்சிகளும் வீணாகிவிட்டனவே என்ற வேதனைக் கண்ணீர் வெளிப்பட்டது. அசைய வேண்டிய மத்திய-மாநில அரசுகள் முறையாக செயல்பட்டிருந்தால் மாணவி அனிதா இப்படி அசைவற்றுக் கிடப்பாரா என்ற கோபக் கேள்வி நெஞ்சில் எழுந்தது.

 மாணவர் சமுதாயம் பாதிப்பு

மாணவர் சமுதாயம் பாதிப்பு

நீட் தேர்வு எனும் கொடுமையால் கிராமப்புற-ஏழை-ஒடுக்கப்பட்ட மாணவ சமுதாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதையும் அதன் எதிர்கால விளைவாக, தமிழகத்தில் கடந்த 90 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கொள்கை தகர்க்கப்படுவதுடன், மாநிலங்களின் அதிகாரமும் பறிபோகும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டி வருகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் இந்த நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியாதவாறு அரண்களை ஏற்படுத்தினார். ஆனால், குதிரைபேர அ.தி.மு.க. அரசின் பினாமி முதல்வராக இருப்பவரும், இருந்தவரும் நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டைவேடம் போட்டு ஏமாற்றி, மத்தியில் ஆட்சி செய்யும் எதேச்சதிகார பா.ஜ.க அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு அடிபணிந்து நின்றதன் விளைவாக இன்று மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அல்ல.. அல்ல... நீட் எனும் கொடுங்கரத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 அனிதா என்னை சந்தித்தார்

அனிதா என்னை சந்தித்தார்

கடந்த ஜூலை 17ஆம் நாள் கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாணவி அனிதாவும் அவருடைய தோழமைகளும் என்னை சந்தித்து, நீட் தேர்வின் அபாயத்தையும் அதனால் கிராமப்புற-ஒடுக்கப்பட்ட மக்களான தங்களுக்குக் கிடைக்கக்கூடிய மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, தங்கள் இரத்தத்தினால் எழுதிய கடிதத்தைக் கொடுத்தனர். இளம் மனதில் எத்தனை வேதனை இருந்தால் இப்படி குருதியால் கடிதம் எழுதுவார்கள் என்பதை உணர முடிந்தது. உடனடியாக ஜூலை 20ந் தேதி மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீட் தேர்வினை எதிர்த்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி அறப்போராட்டம் பெருந்திரளான பங்கேற்புடன் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கழகத்தினருடன் தோழமை சக்தியினரும் மாணவ சமுதாயத்தினரும் அவர்தம் பெற்றோரும் கலந்துகொண்டதைப் பொதுவான ஊடகங்களே செய்தியாகப் பதிவு செய்தன.

 தமிழகத்தை வஞ்சித்தன

தமிழகத்தை வஞ்சித்தன

இந்த முயற்சிகளெல்லாம் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதற்காகவும், குறைந்தபட்சம் தமிழகத்திற்காவது நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இதனை நிறைவேற்றித் தரவேண்டியது மத்திய பா.ஜ.க. அரசு. அதற்கான அரசியல் சட்டப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது தமிழகத்தை ஆளும் குதிரை பேர பினாமி அரசு. ஆனால் இரண்டு அரசுகளும் தமிழகத்தை ஏமாற்றின-வஞ்சித்தன.

 முழு ஒத்துழைப்புடன்...

முழு ஒத்துழைப்புடன்...

முன்னாள் பினாமி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தரவேயில்லை. இந்நாள் பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. முன்னாள் பினாமி முதல்வரும் இந்நாள் பினாமி முதல்வரும் அடிக்கடி பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார்கள். வேறு எந்த மாநிலத்தவருக்கும் நேரம் ஒதுக்காத மோடி அவர்கள் இவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கினார். அந்த நேரத்தில், தமிழகத்தின் நலன்குறித்தோ நீட் தேர்வு குறித்தோ உரிய முறையில் எடுத்துக்கூறி, விலக்கு பெறும் நடவடிக்கையை இரண்டு பினாமிகளும் மேற்கொள்ளவேயில்லை.

 ஏமாற்றும் செயல்

ஏமாற்றும் செயல்

தமிழக சுககாதாரத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., பினாமி அரசின் பிற அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் திரு.தம்பிதுரை உள்ளிட்ட பலரும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதாகக்கூறி டெல்லிக்குச் சென்று பல முறை பேட்டி கொடுத்தார்களே தவிர, உண்மையாக அவர்கள் இது தொடர்பாக இதயசுத்தியுடன் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தங்களின் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டுவிட்டு, தமிழக மாணவர்களை ஏமாற்றும் வகையில் கருத்துகளைப் பரப்பி வந்தார்கள்.

 மருத்துவக் கனவு தகர்ந்து விட்டது

மருத்துவக் கனவு தகர்ந்து விட்டது

மருத்துவக் கனவு தகர்வதால் தமிழக மாணவ-மாணவியரின் கோபம் கனலாக மாறுவதையும், தமிழக அரசியல் இயக்கங்களும்-சமூக நீதி அமைப்புகளும் போர்க்கோலம் பூண்டிருப்பதையும் உணர்ந்த மத்திய ஆட்சியாளர்களும் மாநில ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தவறான கருத்துகளைப் பரப்பி மாணவ சமுதாயத்திற்குப் பொய்யான நம்பிக்கையை அளித்து ஏமாற்றத் தொடங்கினர்.

 தமிழக மாணவர்கள் நம்பினர்

தமிழக மாணவர்கள் நம்பினர்

மத்திய அரசில் கேபினட் அமைச்சராக புதிய அந்தஸ்து பெற்றுள்ள நிர்மலா சீதாராமன் அவர்கள், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்களிக்கும் அவசர சட்டத்தை மாநில அரசு இயற்றினால் மத்திய அரசு அதனை ஏற்று ஆதரிக்கும் எனத் தெரிவித்தபோது, தமிழக மாணவர்கள் உண்மையாகவே நம்பினர். ஆனால், மத்திய அரசும் மாநில அரசும் உயர்நீதிமன்றத்தில் பெயரளவில் பதில் சொல்வதற்காக- தமிழக மாணவர்களை ஏமாற்றப் போடப்பட்ட நாடகம் இது என்பது உச்சநீதிமன்றம் அளித்த அதிர்ச்சித் தீர்ப்பின் மூலம் உறுதியாகிவிட்டது.

 மாணவி அனிதா உயிரிழப்பு

மாணவி அனிதா உயிரிழப்பு

மாநிலக் கல்வி முறையில் பயின்றவர்களுக்கு 85% இடஒதுக்கீடு என்கிற தமிழக அரசின் அரசாணையும், அவசர சட்டமும் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த மறுநாளே, நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது என்றால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் செயலாளரும் முன்கூட்டியே அதற்கேற்ப பட்டியலைத் தயார் செய்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது. இந்த மோசடித்தனத்தின் விளைவுதான், +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ இடத்திற்கான தரவரிசையில் 196.5 கட் ஆஃப் மார்க் பெற்ற மாணவி அனிதாவின் உயிர்ப்பறிப்பு.

 படுபாதக செயல்

படுபாதக செயல்

இந்தப் படுபாதகச் செயலலை செய்தது மத்திய அரசு. அதற்கு முழுமையாகத் துணை நின்றது மாநிலத்தை ஆளும் குதிரை பேர அ.தி.மு.க. அரசு. நீட் தேர்வு எனும் கொடுங்கரத்தால் அனிதா ‘படுகொலை' செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் அந்த உயிர்ப்பலியைக் கொச்சைப்படுத்திப் பேசிவருவது அவர்கள் எத்தகைய கொடுங்கோன்மை ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

 குருதியின் ஈரம் காய்வதற்குள்...

குருதியின் ஈரம் காய்வதற்குள்...

அரியலூர் மாணவி அனிதா தனது குருதியால் எழுதிய கடிதத்தின் ஈரம் காய்வதற்கு முன் உயிர்ப்பலியாகியிருப்பது நீட் தேர்வின் கொடூரத்தன்மைக்குச் சான்று. இந்த பேராபத்து இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அனிதாவின் உயிர்ப்பலி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மும்பையில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு அவசர அவரமாகத் தமிழகம் திரும்பி, அரியலூர் மாவட்டம் குழுமூரில் அனிதாவின் உடலுக்கு கண்ணீரால் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது உடல் எரியூட்டப்பட்ட இடம் வரை சென்றபோது நெஞ்சம் கனத்தது. என்னுடன் விடுதலைசிறுத்தைள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன் உள்ளிட்ட பலரும் வந்தநிலையில், ஓர் இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியாத கையறு நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டதே என்ற மனவேதனை அதிகரித்தது.

 கண்டன ஆர்ப்பாட்டங்கள்

கண்டன ஆர்ப்பாட்டங்கள்

நான் தமிழகம் திரும்புவதற்கு முன்பே கழக மாணவரணி சார்பிலும் மற்ற துணை அமைப்புகள் சார்பாகவும் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றதுடன், அறிவாலயம் தொடங்கி பல இடங்களிலும் கண்ணீர் அஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டன. மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தி.மு.கழகத்தின் சார்பில் 10 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நிவாரணம், அந்தக் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் ஏற்பட்டுள்ள நிரந்தர ரணத்தை ஆறச்செய்யாது. மத்தியில் சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசும் அதற்க அடிமைச் சேவகம் புரியும் மாநிலத்தின் குதிரை பேர பினாமி அரசும் நீடிக்கும்வரை சமூக நீதியும் மாநில உரிமைகளும் மாணவி அனிதாவைப் போலவே உயிர்ப்பலியாகும் என்பது திண்ணம்.

 சமூக நீதியை பாதுகாக்க...

சமூக நீதியை பாதுகாக்க...

திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கையான சமூகநீதியைப் பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்தின் ஆணிவேரான மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்து, நீட் உள்ளிட்ட கொடுங்கரங்களிலிருந்து மாணவ சமுதாயத்தை மீட்கவும், மாணவி அனிதாவின் நிலை தமிழகத்தில் இனி எவருக்கும் ஏற்படக்கூடாது என்ற நிலையை உருவாக்கவும் தோழமை சக்திகளுடன் இணைந்து தி.மு.கழகம் உறுதியுடன் பாடுபடும்.

 வேதனை நெஞ்சில் எரிகிறது

வேதனை நெஞ்சில் எரிகிறது

அந்தோ அனிதா.. உன்னைப் போலவே சமூகநீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனைத் தீ நெஞ்சில் எரிகிறது. அந்தத் தீயையே சுடராக்கி போராட்டக் களம் காண்போம். உன் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய - மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றும் பாதுகாப்போம் எனத் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவரும் சூளுரை மேற்கொள்வோம் என்று அந்த மடலில் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK working president M K Stalin has blasted both Centre and the TN Govt for the death of Ariyalur girl Anitha in the NEET issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more