• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரானைட் குவாரிக்காக நரபலிகள்… புராதான மலைகள் சிதைப்பு!: சகாயம் தோண்டிய பூதங்கள்

By Mayura Akilan
|

மதுரை: மலை தூரிக்கொண்டிருந்தது... ஐயா மழை பெய்யுதே எல்லாம் சேரும் சகதியுமா இருக்குமே இன்றைக்கு போகணுமா என்பது போல ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் முகத்தை பார்த்தனர் வருவாய்துறை அதிகாரிகள்.

அவர்களின் கேள்வியின் அர்த்தம் புரிந்தாலும் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் குவாரிகளில் இரண்டாவது நாளாக ஆய்வு செய்ய புறப்பட்டார் சகாயம்.

வேறு வழியின்றி அவரை தொடர்ந்தனர் அதிகாரிகள். முதல்நாள் ஆய்வின் போது சகாயம் செய்த எச்சரிக்கை அதிகாரிகளை தொடரவைத்தது. சகாயத்தின் இந்த வேகத்திற்காக காரணம் இல்லாமல் இல்லை. மனித பலிகளும், புராதான சின்னங்களை சிதைத்து நாசப்படுத்தியதும்தான் அவரது களஆய்வின் வேகத்திற்கு காரணமாக இருந்தது.

Monument escapes by a whisker from granite sharks

வயல்களின் வாய்க்கால்கள் வழியே சென்று மலைமீது ஏறி சகாயம் மேற்கொண்ட ஆய்வு சாதாரணமானதல்ல. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மலையை குளமாக மாற்றி கிரானைட் கற்களை வெட்டி ஏப்பம் விட்டுள்ளனர் குவாரி முதலைகள் என்பது ஆய்வில் தெரியவரவே சற்றே அதிர்ந்துதான் போனார் சகாயம்.

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறை கேடுகள் குறித்து இம்மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் முதற்கட்ட விசாரணையை முடித்த சகாயம், கடந்த 15ஆம் தேதியன்று 2ஆம் கட்ட விசாரணையை தொடங்கினார். அப்போதுதான் நரபலி புகார்களும் குவிந்தன.

சிறுமி நரபலி

தாமரைப்பட்டி கிராமத்தில் நடந்து வந்த பி.கே.எஸ் கிரானைட் குவாரியில் கடந்த 2008ஆம் ஆண்டு கோபிகா என்ற மூன்று வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டார் என்று புகார் கிளம்பியது. கோபிகா மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் போட்ட பழி

இதனையடுத்து ரவி என்ற லாரி டிரைவரைக் கைது செய்து மக்களின் வாயை அடைத்தது போலீஸ். அந்த லாரி டிரைவர் ரவி, கிரானைட் குவாரியில் டிரைவராகப் பணியாற்றியவர். சகாயத்திடம் மனு கொடுத்த அவர், கோபிகாவை நான் கொலை செய்யவில்லை. வழக்கை திசைதிருப்ப போலீஸ் என் மீது பழி போட்டுவிட்டனர். உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள் என்று கதறினார்.

பொய்வழக்கு

ரவி தனது புகார் மனுவில், ‘குவாரியில் சிறுமி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டார். இதில் அதிகாரிகள் தூண்டுதலில் என்மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு பதிந்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

உண்மை குற்றவாளி

உண்மையான குற்றவாளி யார் என்றும், நரபலி கொடுத்தது ஏன் எனவும் கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இவரைத் தொடர்ந்து குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக ஏராளமான புகார்கள் குவிந்தன.

நரபலிக்கு ஏஜென்டுகள்

பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் டிரைவராக பணியாற்றிய சேவற்கொடியோன் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருந்தவை அங்கு வந்திருந்த மக்களையும் அதிர்ச்சில் ஆழ்த்தியது. பிஆர்பி குவாரியில் 5 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றினேன். ஒடிசா, பிஹார், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தலித் சமூகத்தினரை மூட நம்பிக்கையின் அடிப்படையில் நரபலி கொடுத்தனர் என்று கூறியிருந்தார் சேவற்கொடியோன். இதற்கு தொழிலாளர்களை அழைத்துவரும் ஏஜெண்டுகள் உடந்தையாக செயல்பட்டனர்.

மனநோயாளிகளும் நரபலி

புதிய கிரேன், பொக்லைன், குவாரிகள் செயல்படும்போது கேரளத்திலிருந்து மந்திரவாதிகளை அழைத்துவந்து நரபலி கொடுப்பார்கள். வட மாநில தொழிலாளர்கள் விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி உடலை கொடுத்தனுப்பிவிடுவார்கள். இதில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனையடுத்து சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சாப்பாடு கொடுத்து அழைத்து வந்து நரபலி கொடுத்தனர்.

நானே கார் ஓட்டினேன்

நான் புதுக்கோட்டை பிஆர்பி குவாரியிலிருந்து வரும்போது மேலாளர் அய்யப்பன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த காரில் ஏற்றிவந்து நரபலி கொடுத்தார்.

கரூர் மாவட்டம் தோகைமலையில் இருந்து அனுமந்தன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த ஜீப்பில் ஏற்றி வந்து நரபலி கொடுத்தனர்.

தூத்துக்குடியில் இருந்து

அடுத்த 2 நாளில் தூத்துக்குடியிலிருந்து மனநலம் பாதித்த ஒருவரை அனுமந்தன் அழைத்துவந்தார். அவரும் நரபலி கொடுக்கப்பட்டார். மற்றொரு மேலாளர் ஜோதிபாசு புதுக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு மனநலம் பாதித்தவரை அழைத்துவந்து அன்னவாசல் குவாரியில் இருந்த முருகேசனிடம் காண்பித்தார்.

கொல்வதாக மிரட்டினார்கள்

இந்த விஷயம் வெளியே தெரிந்தால், உனக்கும் இதே நிலைமைதான் எனக்கூறி என்னை மிரட்டினார். கீழவளவு கல்லுதின்னி சேகர் என்பவர் மனநலம் பாதித்த ஒருவரை அழைத்து வந்து ஜோதிபாசுவிடம் ஒப்படைத்தார். இப்படி பலர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர், ஜனாதிபதிக்கும் புகார்

இது குறித்து நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் இயக்கம் சார்பில் உலக மனித உரிமை பாதுகாப்பு மையத்துக்கும், குடியரசுத் தலைவர், பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளோம். பொதுநலன் கருதி இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என சகாயம் கூறினார்.

எங்கும் சொல்வேன்

நரபலி குறித்து காவல் துறையினர் கேட்டாலும் தகவல் அளிக்க தயாராக உள்ளேன் என்றும் மனு கொடுத்த சேவற்கொடியேன் ஊடகங்களில் கூறியது குவாரி முதலைகள் வயிற்றில் நிச்சயம் கிலியை ஏற்படுத்தியிருக்கும்.

நேரடி ஆய்வு

அலுவலகங்களில் 300க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்ற சகாயம், புதன்கிழமையன்று நேரடியாக களமிறங்கினார். திருவாதவூர் பகுதி குவாரிகளை ஆய்வு செய்தார். அரிட்டாபட்டி, கீழவளவு ஆகிய இடங்களில் உள்ள புராதன சின்னங்கள், சமணர் குகைகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், அப்பகுதியில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்தார்.

சரித்திர சின்னங்கள்

அரிட்டாபட்டியில் வட்ட வடிவ பிராமி தமிழ் கல்வெட்டுக்கள், சமணர்கள் வசித்த குகைகள், புத்தர் சிலை, ஒரே கல் பாறையில் 10 அடி நீள அறை, அதில் 6 அடி உயர லிங்கம், விநாயகர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ள குடவரை கோவில் ஆகியவற்றை சகாயம் பார்வையிட்டார்.

மலை குளமானது எப்படி?

அரிட்டாபட்டியில் ஆய்வு செய்த பின்னர் கீழவளவில் உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு சகாயம் சென்றார். அங்கு சமணர்கள் வசித்த குடவரைகளை பார்வையிட்டு அங்கு புத்தர் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்து பிரமித்துப்போனார். இந்த மலையின் பரப்பளவு என்ன என கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டார். அப்போது அவர் வரைபடத்தை காண்பித்தார். அதில், 58 ஏக்கர் பரப்பளவு உள்ள ‘பஞ்சபாண்டவர் குளம்' என குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்த சகாயம், தொல்லியியல் துறையின் ‘புராதன பஞ்சபாண்டவர் மலை', அரசு பதிவேட்டில் ‘பஞ்சபாண்டவர்குளம்' என பதிவாகி, அதன் அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்.

7 மலைகள்

அங்குள்ள பஞ்சபாண்டவர் மலை, ராமன் ஆய்வு மலை, களிஞ்சமலை, கழுகுமலை, தேன்கூடுமலை, அகப்பட்டான்மலை, கூகைகட்டிமலை ஆகிய 7 மலைகள் உள்ளன. இந்த மலைகள் மீது பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கத் தொடங்கிய போது கிராம மக்கள் கிரானைட் கல் வெட்டுவதை தடுத்து போராடியதை தொடர்ந்து கிரானைட் கல் வெட்டும் வேலை நிறுத்தப்பட்டது.

காவல் தெய்வங்கள்

அந்த மலைகளை சகாயம் ஆய்வு செய்தபோது, அங்கு வந்த பெண்கள் மலைமீது ஏறி வந்து சகாயத்திடம் புகார் செய்தனர். அவர்கள், "இந்த மலைகளின் மீது இருந்து வரும் மழைத் தண்ணீரை கொண்டு ஆங்கிலேயர் காலத்தில் மழை நீர் தடுப்பு அணை கட்டப்பட்டது. கிராம மக்களின் காவல் தெய்வங்களாக இந்த 7 மலைகள் உள்ளன. மலையில் புராதன சின்னங்களும், கோவில்களும் உள்ளன. இங்கு கிரானைட் கல் வெட்டி எடுத்து அழிக்க முயன்றனர். இதனை தடுத்து காப்பாற்றுங்கள்" என தெரிவித்தனர்.

தொல்லியல்துறை

"இந்த மலைகள் வெறும் பாறைகள் இல்லை. இவை சமூகத்தின் வரலாறு. எப்படி கிரானைட் கல் வெட்டி எடுக்க அனுமதித்தனர்? இந்த மலையில் கிரானைட் குவாரிக்கு அனுமதித்தது ஏன்? தூரத்தில் உள்ள குடவரை கோவிலை மட்டுமே தொல்லியல் துறை கண்டுகொண்டது ஏன்?" என தொல்லியல் துறையினரிடம் சகாயம் கேட்டு அதற்கான விளக்கம் தருமாறு பதிவு செய்து கொண்டார்.

எந்த பதிவுமே இல்லையே

மலை மீதுள்ள மழைநீர் தடுப்பு அணையையும், அதில் இருந்து வெளிவரும் கால்வாயையும், சுனையையும் வருவாய்த்துறையினர் அரசு பதிவேடுகளில் ஏன் பதிவு செய்யவில்லை என ஆர்.டி.ஓ. செந்தில்குமாரியிடம் சகாயம் கேட்டார். அதற்கு விளக்கம் தருமாறு பதிவு செய்து கொண்டார். கிரானைட் குவாரிக்கு அனுமதி தருவதற்கு முன் இந்த மலையில் உள்ள புராதன சின்னங்களை கனிமவளத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பவே என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றனர் அதிகாரிகள்.

கீழவளவு பகுதியில் கண்மாய்கள் மண்மூடி மறைக்கப்பட்டுள்ளன.

நல்லிகண்மாயில் கிரானைட் குவாரி நடத்திவிட்டு அதில் பெரிய கற்களை போட்டு மூடி உள்ளனர். இது போல கீழவளவு பகுதியில் ஏராளமான கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. இத்தனை குவாரிகள் செயல்பட்டும் கீழவளவு ஊராட்சிக்கு வரவேண்டிய வரி வருவாய் வரவில்லை. இதனால் போதிய நிதி இல்லாமல் கிராமத்தில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை" என சகாயத்திடம் புகார் சொன்னார்கள் ஊராட்சி தலைவர்கள்.

எங்கே செல்லும் இந்த பாதை

கிரானைட் வெட்ட மலையை குளமாக்கிய கயவர்கள், கண்மாய்களை கற்களை கொட்டி மூடியுள்ளனர். சரித்திர புகழ்வாய்ந்த இடங்களை சிதைத்துள்ளனர். விலைமதிப்பில்லா உயிர்களை காவு கொடுத்துள்ளனர். கிரானைட் குவாரி தோண்டிய இடத்தில் தற்போது பூதங்களாக கிளம்பத்தொடங்கியுள்ளன. இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்களோ அதிகாரிகளும் ஆள்பவர்களும்.

 
 
 
English summary
During inspection, Mr. Sagayam found that the Melasunaikulam tank was filled with quarry waste with no trace of the existence of an irrigation tank. Similarly, its ayacut was also used as granite or granite waste dump. Quarrying activities had destructed Keezhasunaikulam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X