For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு: தமிழக மக்களை ஏமாற்ற விலாங்கு மீன் வேலை செய்யும் மோடி அரசு- வைகோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்ற விலாங்கு மீன் வேலை செய்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென்பாண்டி மண்டலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாய் திகழும் பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை ஐந்து மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், ஒரு கோடி மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கும் நீர் வழங்கும் கருவூலமாய் திகழ்கிறது.

Mullai Periyar row: Vaiko slams centre

999 ஆண்டுகளுக்கு சட்டபூர்வமான நீர் உரிமையை தமிழகத்துக்கு வழங்கிடும் வகையில் அன்றைய தமிழக அரசும், திருவிதாங்கூர் அரசும் செய்துகொண்ட ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது. 152 அடி உயரத்துக்கு அணையில் நீரைத் தேக்கிக்கொள்ளும் உரிமையை தமிழகம் பெற்றிருந்தது. 1979 இல் கேரள அரசு, பென்னிக் குக் அணை பலவீனமானது என்று பொய்யான பிரச்சாரத்தை முன் வைத்து ஏற்படுத்திய பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. 2006 பிப்ரவரி 27 இல் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், முதலில் 142 அடி வரையிலும், பின்னர் 152 அடி வரையிலும் தண்ணீரைத் தேக்கிக்கொள்ள தமிழகத்துக்கு உரிமை உண்டு என தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை காலில்போட்டு மிதித்துவிட்டு, முல்லைப் பெரியாறு பென்னி குக் அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் விரோதமாக கேரள அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது. பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தலைமை நீதிபதி லோதா அவர்கள் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு பென்னி குக் அணை பலமாக உள்ளது என்றும், முந்தைய மூன்று நீதிபதிகள் தீர்ப்பையே அங்கீகரித்து அணையில் தண்ணீர் மட்டத்தை தமிழகம் உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

இடைப்பட்ட காலத்தில் பென்னி குக் அணையை உடைக்க வேண்டும் என்று கேரள அமைச்சர்கள் பகிரங்கமாக கூறியதோடு, அரசியல் கட்சிகளின் துணையோடு அணையை சேதப்படுத்துகின்ற முயற்சியிலும் கேரளத்தினர் ஈடுபட்டனர்.

தமிழக மக்கள் முல்லைப் பெரியாறு உரிமை காக்க பல ஆண்டுகளாகப் போராடினர். மூன்று தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது என்று நிம்மதி அடைந்த நிலையில், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கேரள அரசு அநீதி செய்யத் துடிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் உதாசீனம் செய்துவிட்டு புதிதாக அணை கட்ட முயல்கிறது. அதற்காக மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டது. தற்போது மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகம் புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச் சூழல் ஆய்வு செய்ய கேரள அரசுக்கு அனுமதி கொடுத்திருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

கேரள அரசின் வஞ்சகத் திட்டம் யாதெனில், எவ்விதத்திலாவது பென்னி குக் அணையை உடைத்துவிட வேண்டும் என்பது தான். புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமான எந்த உரிமையும் இருக்காது. கேரள அரசிடம் மடிப்பிச்சை ஏந்தும் நிலையை உருவாக்க கேரளம் திட்டமிடுகிறது.

காவிரி பிரச்சினையில் மேகதாட்டு ராசிமணலில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மறைமுகமாக ஊக்கமளித்துக்கொண்டு இருக்கும் செயலில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று ஏற்கனவே நான் குற்றம் சாட்டி உள்ளேன்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகமும், பாலாற்றுப் பிரச்சினையில் ஆந்திரமும் தமிழகத்துக்குக் கேடு செய்ய முற்பட்டுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடிப் பெற்ற சட்டப்பூர்வமான உரிமையையும் அடியோடு இழக்கின்ற ஆபத்து கேரளம் புதிய அணை கட்டினால் ஏற்பட்டே தீரும்.

கேரளத்தின் இன்றைய முயற்சி ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதனை ஊக்குவிக்கின்ற நரேந்திர மோடி அரசின் போக்கு தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் மன்னிக்க முடியாத செயலாகும்.

மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் நியமித்த நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்று, அந்தக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசு புதிய அணை கட்ட ஆய்வுப் பணிக்கு அனுமதி வழங்கி முடிவெடுத்து இருக்கிறது. இந்தச் செய்தி வெளியானதால், தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் கண்டு எடுக்கப்பட்ட முடிவை எழுத்துபூர்வமாக கேரள அரசுக்கு அனுப்பி வைக்க இருந்த நிலையில், அப்படி ஒரு அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று நேற்று இரவில் தெரிவித்திருக்கிறது. ஆனால் கேரளத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் கொள்கை அளவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை தலைமைப் பொறியாளர் மகானுதேவன் கடந்த மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் "புதிய அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு பழைய அணையை ரூபாய் 663 கோடி செலவில் செயல் இழக்கச் செய்துவிடலாம்" என்று குறிப்பிட்டிருப்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பென்னி குக் அணை வலுவாக உள்ளது என்றும், அதன் மீது சட்டப்பூர்வமான உரிமை தமிழகத்துக்கு உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையிலும் பென்னி குக் அணையை உடைத்தே தீருவது என்ற கேரளத்தின் அராஜகத் திட்டம் அம்பலத்துக்கு வந்துவிட்டது. மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்ற விலாங்கு மீன் வேலை செய்கிறது.

தமிழகத்துக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் புதிய அணைக்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு அனுமதி வழங்க எடுத்த முடிவை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko has slammed the centre for cheating the people of Tamil Nadu in connection with the Mullai Periyar issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X