For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் நலம்: டாக்டர்கள் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசத் தொடங்கினார். அவருக்கு வாய் வழியாக திரவ உணவு கொடுக்கப்படுகிறது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மும்பையை சேர்ந்தவர் கேப்டன் அஸ்பி பி மினோசேர்ஹோதி. கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அர்மைடி. இவர்களின் மகள் அவோவி (21). பி.காம். பட்டதாரியான இவர், இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். மாற்று இதயத்துக்காக காத்திருந்த அவோவி, சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டம் பழயனூரை சேர்ந்த பி.இ. பட்டதாரி லோகநாதன் சாலை விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தார். அவரது உறுப்புகள் தானம் செய்யப்படுவது குறித்த தகவல் ஹவோபியாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. டாக்டர் குழுவினர் லோகநாதனின் ரத்த பிரிவு, உடல் எடை போன்றவைகளை ஆய்வு செய்து, இவரது இதயம் ஹவோபியாவுக்கு பொருந்தும் என்பதை உறுதி செய்தனர்.

நலமடைந்த ஹவோபியா

அதைத் தொடர்ந்து லோகநாதனின் இதயம் மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஹவோபியாவுக்கு பொருத்தப்பட்டது. அவோவிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், செவ்வாய்க்கிழமை காலையில் அகற்றப்பட்டது. இப்போது அந்த பெண் பேசத் தொடங்கிவிட்டார். தற்போது அவருக்கு வாய் வழியாக திரவ உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் சிகிச்சை

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டரும், மலர் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவருமான டாக்டர் கே.ஜி.சுரேஷ் ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஹவோபியா 4 வருடங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, அவரது இதயம் வேலை செய்யும் வேகம் குறைந்து 15 சதவீதம் மட்டுமே ‘பம்பிங்' செய்து கொண்டிருந்தது. மும்பையில் உள்ள டாக்டர்கள் கைவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கு சென்றால் மாற்று இதயம் கிடைக்க 2 வருடம் ஆகும் என்பதால், சென்னை வந்து சிகிச்சை மேற்கொள்ள அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

நலமடைந்த ஹவோபியா

மூளைச்சாவு அடைந்த லோகநாதனின் இதயம் விரைந்து கொண்டுவரப்பட்டு, ஹவோபியாவுக்கு பொருத்தினோம். தற்போது, அவர் மயக்கம் தெளிந்து நன்றாக பேசுகிறார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக தேறி வருகிறது. இன்னும் 4 அல்லது 5 நாட்கள் அவசர சிகிச்சை வார்டிலும், தொடர்ந்து ஒரு வாரம் சாதாரண வார்டிலும் சிகிச்சை பெறுவார். பின்னர் அவர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார். எனினும், ஒரு மாத காலம் சென்னையில் தங்கியிருந்து, அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த பின்னரே மும்பைக்கு அனுப்பப்படுவார்.

உடல் உறுப்பு தானம்

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மூளைச்சாவு அடைகின்றனர். அவர்கள் அனைவரின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்படுவதில்லை. தற்போது தான் இதுபற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடையே சிறிதளவு ஏற்பட்டுள்ளது. இன்னும் அதிகளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

1கோடி இதயம் தேவை

இந்திய அளவில் சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மாற்று உறுப்புகள் இன்றி உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு 10 முதல் 20 லட்சம் ரூபாய் செலவாகிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் செய்தால் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நன்றி சொன்ன தாயார்

ஹவோபியாவின் தாயார் அர்மைடி கூறும்போது, ‘‘எனது மகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. மீளா துயரில் இருந்து மீண்டுள்ளேன். இதற்காக இதயம் கொடுத்த லோகநாதன், அவரது தாயார் ராஜலட்சுமிக்கும், தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும், தமிழக போலீசாருக்கும், இறைவனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகள் என்னுடன் நன்றாக பேசினாள்'' என்றார்.

7 பேரை வாழவைத்த லோகநாதன்

லோகநாதனிடம் இருந்து தானம் பெறப்பட்ட, இதயம், இரண்டு கிட்னிகள், மலர் மருத்துவமனைக்கும்; கல்லீரல் வேலூர் அரசு மருத்துவமனைக்கும்; இரண்டு கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும்; தோல், கீழ்ப்பாக்கம், 'ரைட்' மருத்துவமனைக்கும் தரப்பட்டுள்ளன.

மரணத்திலும் மகிழ்ச்சி

உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட லோகநாதனின் உடல் நேற்று பிரேதபரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லோகநாதன் இறந்தாலும், அவனது உறுப்புகள் மூலம் சிலர் உயிர் பெற்றது சோகத்திலும் மகிழ்ச்சியை தருவதாக அவரது பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர்.

English summary
A heart harvested from a 27-year-old road traffic accident victim was successfully transplanted in a 21-year-old woman from Mumbai, a senior doctor at Fortis Malar Hospitals in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X