For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவசரப்பட்டு போய் விட்டார் நா. முத்துக்குமார்.. நக்கீரன் கோபால் உருக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் குறித்த நினைவுகளை நக்கீரன் ஆசிரியர் கோபால் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது:

தம்பி கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு, தமிழ்த் திரையுலகிற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

Nakkeran Gopal recalls his memories with Na Muthukumar

முதல்நாள் இரவுவரை என்னோடு பேசிய தம்பி நா.முத்துக்குமாரை, அநியாகமாகக் காலம் அள்ளிக்கொண்டு போய்விட்டது. நம் கவிதைப் புதையலை, காலம் கருணையில்லாமல் கொள்ளையடித்துக்கொண்டு போய்விட்டது.

தம்பி முத்துக்குமார், திரையுலகில் நுழைவதற்கு முன்பாகவே, நக்கீரன் குழும ஏடுகளான சிறுகதைக் கதிர், இனிய உதயம் போன்றவற்றில் நிறைய எழுதியவர். அவரது தன்னம்பிக்கை எழுத்துகளின் மேல், அலாதியான நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அவரது நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்துப் பகிர்ந்திருக்கிறேன்.
திரையுலகில், முத்திரை பதிக்கும் பாடல்களை அவர் எழுதிக்குவித்த போதெல்லாம், மனம் பூரித்து அவர் தோள்களைத் தட்டிக்கொடுத்து நானும் மகிழ்ந்திருக்கிறேன்.

ராம் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்'பாடலைக் கேட்டுவிட்டு, இதற்கு தேசியவிருது கட்டாயம் கிடைக்கும் தம்பி, என்று வாஞ்சையோடு வாழ்த்தினேன். 'நீங்கள் சொன்னதுபோல் கிடைத்து விட்டதண்ணே'என நெகிழ்ந்து நின்றார் முத்துக்குமார். அடுத்து, சைவம் படத்திற்காக அவர் எழுதிய 'அழகே... அழகே... எல்லாம் அழகே'பாடலைக் கேட்டபோதும், இதற்கு இன்னொரு தேசியவிருது கிடைக்கும் தம்பி' என்று நம்பிக்கையோடு வாழ்த்தினேன். எனது அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. கிடைத்தது. நன்றி சொல்லிப் பூரித்தார் முத்துக்குமார். இன்னும் நீண்டநாள் இருந்து, முத்துக்குமார் தன் சாதனைகளைத் தொடருவார் என்று நம்பினேன். அந்த எனது நம்பிக்கை மட்டும் பொய்த்துபோய்விட்டது.

விபரம் தெரியும் முன்பே, தன் அன்புத் தாயைப் பறிகொடுத்தவர் முத்துக்குமார். சில வருடங்களுக்கு முன்பு, தனது அறிவாசானாகத் திகழ்ந்த தந்தையையும் அவர் பறிகொடுக்க நேர்ந்தது. இப்படிப்பட்ட இழப்புகளால்தான், உறவுகளின் முக்கியத்தைத் தன் பாடல்களிலும் கவிதைகளிலும் தாங்கிப்பிடித்தார் முத்துக்குமார். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தை என உறவுகளின் உயர்வை அவரது எழுத்துக்கள் அதிகமாகவே படம்பிடித்தன.

அதேபோல் தன்னம்பிக்கை பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர் தம்பி முத்துக்குமார். அதற்கு ஒரு சான்று...

'பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்' என்ற பாடல். அந்தப் பாடலின் வரிநெடுக, அசாத்தியமான தன்னம்பிக்கை, கம்பீரமாக எதிரொலிக்கும்.

'எதை நீ தொலைத்தாலும்
மனதைத் தொலைக்காதே..
வளைவில்லாமல் மலை கிடையாது...
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா...'என்றெல்லாம் அவரது எழுத்துக்கள் அதில் தீபமாய்ச் சுடர்ந்ததை இப்போது நினைத்து நெகிழ்கிறேன்.

தம்பி முத்துக்குமார், நடக்கவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அதற்குள் அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

அவர் விடைபெற்றாலும், அவர் விதைத்துச் சென்ற கனவுகளும் நம்பிக்கைகளும் நமக்கிடையே எப்போதும் இருக்கும். அவரது ஈரம் காயாத நினைவுகளைப் போல்.

English summary
Nakkeran magazine editor Gopal has recalled his memories with Na Muthukumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X