For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாரத் திமிரில் ஆடியவர்கள் என்ன ஆனார்கள் தெரியுமா? மாணவர்கள் மீதான தடியடிக்கு சீமான் கண்டனம்!

தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் மீது தடியடி-வீடியோ

    சென்னை: தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரியில் சுமார் 169 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறையை மாற்றி தமிழில் தேர்வு எழுத தடை விதித்து அறிவித்திருந்தது.

    தேர்வுக் கட்டணங்களையும் பல்கலைக்கழகம் உயர்த்தி அறிவித்திருந்தது. இதற்கு 3 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த 9 ஆம் தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தடியடி தாக்குதலுக்குநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    [ வடமாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. சங்கர் மறைவிற்கு கொங்குநாடு ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல்! ]

    காட்டுமிராண்டித்தனம்

    காட்டுமிராண்டித்தனம்

    தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்; உயர்த்தப்பட்டுள்ளக் கல்விக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; வருகைப்பதிவு குறைந்த மாணவர்களுக்கான அபராதக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றையத் தினம் அறப்போராட்டம் நடத்தினர். கட்டணக்குறைப்புக் கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் தமிழில் தேர்வெழுத அனுமதி மறுத்துவிட்டதால், மாணவர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்ட கல்லூரி வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது ஈவிரக்கமற்று அவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடித் தாக்குதலைத் தொடுத்தது வன்மையானக் கண்டனத்திற்குரியது. மாணவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

    கொடுஞ்செயல்

    கொடுஞ்செயல்

    தாய்மொழியில் கல்வி கற்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும். அதனை முற்றாக மறுத்து மழலையர் கல்வி முதல் பட்டப்படிப்புவரை ஆங்கிலமயப்படுத்தப்பட்டு, தமிழைத் தமிழர்களிடமிருந்து அப்புறப்படுத்துகிற கொடுஞ்செயல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் மெல்ல மெல்ல நடந்தேறி வருகிறது. அதன் நீட்சியாகவே இக்கொடுஞ்செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

    அரசப்பயங்கரவாதம்

    அரசப்பயங்கரவாதம்

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வெழுதக் கோருவது என்பது மிக மிக நியாயமானது. அவர்களது கோரிக்கையில் இருக்கிறத் தார்மீகத்தைப் புரிந்துகொண்டு அவர்களுக்குரிய உரிமையை அளிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும். அதனை செய்ய மறுத்து அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஓர் அரசப்பயங்கரவாத நடவடிக்கையாகும்.

    உயிர் துறந்த சங்கரலிங்கனார்

    உயிர் துறந்த சங்கரலிங்கனார்

    தமிழர் நாட்டில் தமிழில் தேர்வெழுதக்கூடத் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படும் என்றால், இந்த இழிநிலையைச் சந்திக்கவா ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிப்போர் ஈகிகள் தங்கள் இன்னுயிரை இந்நிலத்தில் ஈந்தார்கள்? நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழூர் சின்னச்சாமியும் இத்தகைய நிலைத் தங்களது சந்ததிகளுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் உயிரீகம் செய்திட்டார்கள்? 76 நாட்கள் பட்டினிக் கிடந்தது தன் மெய்வருத்தி உயிரைப் போக்கிட்டப் பெருந்தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தது இத்தகைய நிலையைத் தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதற்காகத்தானா? எத்தனை தியாகங்கள்? எத்தனை எத்தனை ஈகங்கள்? எத்தனை அர்ப்பணிப்புகள்? எத்தனை போராட்டங்கள்? எத்தனை உயிரிழப்புகள்? அவையாவும் தாய்மொழி தமிழைக் காப்பதற்காகத்தானே இந்நிலத்தில் மேற்கொள்ளப்பட்டது.? அத்தகைய மொழிக்கே இந்நிலத்தில் முன்னுரிமை இல்லை என்றால் அதனை எப்படி ஏற்க முடியும்? மொழிப்போர் நடந்திட்ட மண்ணிலேயே அம்மொழிக்கு இடமில்லை என்பது எத்தகையக் கொடுமையானச் செய்தி?

    இங்கிலாந்தின் மாகாணமா?

    இங்கிலாந்தின் மாகாணமா?

    தமிழில் படிக்க முடியாது; தமிழில் தேர்வெழுத முடியாது; தமிழ் படித்தால் தமிழ்நாட்டில் வேலையும் கிடைக்காதென்றால், இது உண்மையில் தமிழ்நாடுதானா? அல்லது இங்கிலாந்து நாட்டின் இன்னொரு மாகாணமா? என்கிற கேள்வியும், கோபவுணர்ச்சியும் மேலிடுகிறது. இவ்வாறு தமிழைத் திட்டமிட்டு சிதைத்தழித்து அதற்கு மாற்றாக ஆங்கிலத்தைப் புகுத்தி, தமிழர்களை தமிங்கிலேயர்களாக இனமாற்றம் செய்வது என்பது பொறுத்துக்கொள்ளவே முடியாத பச்சைத்துரோகம். அன்னைத்தமிழுக்கு நேர்கிற இத்தகைய இன்னல்களைக் காண இருந்திருந்தால் பாரதியும், பாரதிதாசனும் குமுறிக் கொந்தளித்திருப்பார்கள்.

    தெரிந்துகொள்ள வேண்டும்

    தெரிந்துகொள்ள வேண்டும்

    தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி போராடியதற்காக மாணவர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாது, 10 மாணவர்கள் மீது பொய் வழக்கும் புனைந்திருக்கிறார்கள். காவல்துறையினர் கண்மூடித்தனமானத் தாக்குதலுக்கு மாணவிகளும் தப்பவில்லை. பெண்கள் என்றுகூடப் பாராது அவர்களையும் தாக்கியிருக்கிறார்கள். இதனால், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றனர். தமிழர்களின் வாக்கு நெல்லிக்கனியாய் தித்திக்கிற ஆட்சியாளர்களுக்கு தமிழர்களின் உரிமைகள் மட்டும் வேப்பங்காயாய் கசக்கிறதா? கொடுமைகள் பல நிறைந்த இச்சர்வாதிகார ஆட்சிமுறையும், மக்கள் மீது ஏவப்படும் இத்தகைய அடக்குமுறையும் ஒருநாள் வீழும் என்பது உறுதி. அதிகாரத் திமிரில் ஆட்டம் போட்டவர்களெல்லாம் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்கிற வரலாற்றினை ஆளும் ஆட்சியாளர்கள் ஒருமுறைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    எனவே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்டக் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காயம்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதியினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாணவர்களைத் திரட்டிப் பெரும்போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    NTK cheif co ordinator Seeman condemns for Latti charge on Manonmaniyam Sundaranar University students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X