பெரிய பாண்டியன் கொலை எதிரொலி... சோகத்தில் சாலைபுதூர் கிராம மக்கள்!

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி கேட்டு அவரது சொந்த கிராமமான சாலைபுதூர் சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருநெல்வேலி : சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த செய்தி கேட்டு அவர் சொந்த ஊரான சாலைபுதூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. தங்கள் ஊர் கிராம மாணவர்கள் பள்ளிக் கல்வி பெற வேண்டும் என்பதற்காக 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியனுக்கா இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
சென்னை கொளத்தூரில் நகை கடையில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிப்பதற்காக சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளி பஞ்சாயத்து சாலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர்.
கல்லூரி படிக்கும் போதே போலீசில் சேர வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக காவல் துறை தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர். 2000ம் ஆண்டில் திருச்சி சிறப்பு காவல்படை பட்டாலியனில் பணியில் சேர்ந்தார். 2014ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது குடும்பத்தினர் ஆவடி, வசந்தம் நகர், நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.

ஆசிரியை மனைவி
இவரது மனைவி சென்னையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மூத்த மகன் சென்னை கல்லூரியிலும், இளைய மகன் பள்ளியில் படித்து வருகின்றனர்.

குடும்பத்தினரோடு பாசம்
இவருக்கு இரண்டு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் இருக்கின்றனர். இவருக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் என்றும், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் அன்று சகோதரர்கள் வீட்டுக்கு வருவது வழக்கம் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் கல்விக்காக
மூவிருந்தாளி கிராமத்தில் பள்ளிகள் இல்லை என்பதால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அமைக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தனது நிலத்தில் இருந்து 20 சென்ட் தானமாக வழங்கி உதவியுள்ளார். அங்கு தற்போது பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு குழந்தைகள் படித்து வருகின்றனர்.

கவலையில் கிராம மக்கள்
ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவரை இனி காண முடியாதே என்று உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். சுட்டு கொல்லப்பட்ட தகவல் சொந்த கிராமத்திற்கு தெரிய வந்ததால் அங்கு சோகம் சூழ்ந்துள்ளது. உறவினர்கள் அவரது வீட்டின் முன்பு கவலையுடன் திரண்டு துக்கம் விசாரித்து வருகின்றனர்.