மதுரை ஆதீனத்தை கொல்ல சதி முயற்சியா? வதந்தி பரப்பினால் வம்புதான்.. கள்ளக்குறிச்சி போலீஸ் எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சி: மதுரை ஆதீனத்தை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுவதை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை கொலை செய்யும் நோக்கத்தில் உளுந்தூர்பேட்டை வாகன விபத்து நடந்ததாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கள்ளக்குறிச்சி போலீசார் எச்சரித்துள்ளனர்.
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமார்ச்சாரி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில தம்மை கொல்ல சதி முயற்சி நடந்ததாக பரபரப்பு குற்றம்சாட்டினார். இது தொடர்பாக ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமார்ச்சாரி கூறுகையில், சென்னையில் சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தேன். உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக வந்த கார், என் காரை இடித்து மோதியது. இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என கூறியிருந்தார்.

மதுரை ஆதீனத்தின் இந்த பகீர் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை, மதுரை ஆதீனத்தை கொல்ல நடந்த முயற்சி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், மதுரை ஆதீனம் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது உளூந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இது தற்செயலாக நடந்த விபத்துதான். இதில் சதித் திட்டம் எதுவும் இல்லை.
மேலும் இந்த புகார் தொடர்பாக் மதுரை ஆதீனம் தரப்பில் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் மதுரை ஆதீனத்தை கொல்ல நடந்த சதி என்பது போல சமூக வலைதளங்களில் பொய்யான தகவலைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
