For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் வேண்டுகோள்

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டுமென ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருகிற 21ம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. இருப்பினும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிய மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 ஜனநாயகத்தின் நிலை?

ஜனநாயகத்தின் நிலை?

ஆர்.கே நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அங்கு பண மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுக்க ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் வகுத்துள்ள திட்டங்கள் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைக் காணும் போது ஜனநாயகம் என்ன ஆகுமோ? என்ற ஐயம் எழுகிறது. இதில் அங்கு புதியதாக பல்வேறு பின்புலங்கள் கொண்ட தினகரனும் அங்கு களம் இறங்குவதால் அந்த ஐயம் இன்னும் அதிகரித்து உள்ளது.

 என்ன செய்கிறது தேர்தல் ஆணையம் ?

என்ன செய்கிறது தேர்தல் ஆணையம் ?

ஆளும் அ.தி.மு.க., தினகரன் ஆகியோர் சார்பில் ஓட்டுக்கு ரூ.20,000 வரை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சியினர் அவர்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஆர்.கே நகர் தொகுதிக்குள் பணத்தைக் கொண்டு சென்று வினியோகிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தொகுதிக்கு வெளியில் பணத்தை பதுக்கி வைத்துக் கொண்டு வாக்காளர்களை குழுக்களாக அழைத்துச் சென்று பணத்தை வழங்கி வருகின்றனர். இந்த பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 காவல்துறையின் ஒத்துழைப்பு

காவல்துறையின் ஒத்துழைப்பு

ஆர்.கே தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டு தற்போது பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டப் பிறகு விதிமீறல்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஓரளவு பயனும் கிடைத்துள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தமிழக அரசு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்காததால் அதைத் தடுக்க முடியவில்லை. பல இடங்களில் காவல்துறையின் ஒத்துழைப்போடே பணப்பட்டுவாடா நடக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை அதிக அளவு பணப்புழக்கம் அங்கு அதிகரித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.

 வேட்பாளர் தகுதி நீக்கம்

வேட்பாளர் தகுதி நீக்கம்

ஆர்.கே நகர் தொகுதியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம் ஆகும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட குற்றச்சாற்றின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டபோதே, ‘‘அது மட்டும் போதாது. ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று பா.ம.க. வலியுறுத்தியது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட தேர்தல் ஆணையம், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இடமில்லை என்று கூறிவிட்டது. அதன் விளைவு தான் அப்போது பணத்தை வாரியிறைத்த அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட்டு பண வெள்ளத்தைப் பாய விடுகின்றனர்.

 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்

கடந்த முறை ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், இந்த முறை அவர்கள் போட்டியிட்டிருக்க முடியாது. அதுமட்டுமின்றி, இப்போது புதிதாக போட்டியிடுவோருக்கும், ‘ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவோம்' என்ற அச்சம் இருக்கும் என்பதால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியும். இந்த யோசனையை பா.ம.க. பல முறை கூறியும் அதை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன்? என்பது தெரியவில்லை. எந்த ஒரு தொகுதியிலும் ஓட்டுக்காக பணம் கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தலை ஒத்தி வைக்கவும், பணம் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்க வசதியாக மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய அரசும், தேர்தல் ஆணையமும் முன்வர வேண்டும்.

 மத்திய அரசு நடவடிக்கை

மத்திய அரசு நடவடிக்கை

ஓர் இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒரு கட்சி ரூ.200 கோடி செலவழித்தால், அந்தப் பணத்தை மீண்டும் சம்பாதித்த எவ்வளவு ஊழலில் ஈடுபடும் என்பதையும், இதே நிலைத் தொடர்ந்தால் தமிழகத்தில் ஊழலை எவ்வாறு ஒழிக்க முடியும்? என்பதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்? அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படை தேர்தல் ஊழல் தான் என்பதால் அதை ஒழிக்க தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
PMK Founder Ramadoss Requests Election Commission to pass new laws on Candidate Behavior .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X