For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லையே.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு திமுக பொருளாளர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆசிரியர்கள், மாணவர்கள், சத்துணவு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. ஆகவே இந்த போராட்டத்தை கண்டு அஞ்சியாவது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கல்வித்துறைக்கு நிறைய செய்த கருணாநிதி

கல்வித்துறைக்கு நிறைய செய்த கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காலங்களில் ஆசிரியர்களுக்கும், கல்வி துறைக்கும் ஏராளமானவற்றை செய்திருக்கிறார். 2005-06 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கல்வித்துறைக்கு ரூ.4,348 கோடியே ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010-11 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.10,147 கோடியே 56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய திட்டம்

தொகுப்பூதிய திட்டம்

இதேபோன்று 2001-06 அதிமுக ஆட்சிக்காலத்தில் 45,987 ஆசிரியர்கள் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 2006 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 மடங்கு சம்பளம் உயர்த்தி காலமுறை ஊதியமாக வழங்கியவர் கருணாநிதி. சமச்சீர் கல்வி, உயர் கல்விக்கென தனி அமைச்சகம் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் கருணாநிதி. உங்கள் (ஆசிரியர்கள்) மூலமாக மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான ஆட்சி வந்தால் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நிச்சயம் மாற்றம் கிடைக்கும் என்றார் ஸ்டாலின்.

பேஸ்புக்கில்

பேஸ்புக்கில்

பின்னர் பேஸ்புக்கில் அவர் போட்ட கருத்து: ஆசிரியர்கள் முன் வைத்த அடிப்படை கோரிக்கைகளைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

15 அம்சக் கோரிக்கை

15 அம்சக் கோரிக்கை

15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு ஊதியம், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்குவது உள்ளிட்ட அந்த 15 கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக 2013-ம் வருடத்தில் இருந்து அ.தி.மு.க. அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், போராடியும் வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.

வருத்தம் தருகிறது

வருத்தம் தருகிறது

உலகம் முழுவதும் உள்ள அரசுகள் கற்றுக் கொடுப்பது ஒரு புனிதமான பணி என்று கருதி ஆசிரியர்களை மதித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிற போது, இங்குள்ள அதிமுக அரசு மட்டும் ஆசிரியர்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றிக் கொடுக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஆசிரியர்கள் மட்டுமா

ஆசிரியர்கள் மட்டுமா

இந்த ஆட்சியில் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சாலைப் பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என்று அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை.

படு மோசமான பாதிப்பு

படு மோசமான பாதிப்பு

அனைத்து தரப்பினரும் அதிமுக அரசின் பாராமுகத்தால் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் இன்றைய நிலைமை. ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று இந்த தருணத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் பேச்சு

ராமதாஸ் பேச்சு

டாக்டர் ராமதாஸ் பேசுகையில், மாற்றத்தை விரும்புபவர்கள் ஆசிரியர்கள், அதே சமயத்தில் மாற்றத்தினை உருவாக்குபவர்களும் ஆசிரியர்கள்தான். அவர்கள் நினைத்தால் சமூக, கல்வி மற்றும் ஆட்சி மாற்றத்தையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள்.

ஆசிரியர்கள் நினைத்தால்

ஆசிரியர்கள் நினைத்தால்

ஆசிரியர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டுவரமுடியும். எங்களுக்கு ஆசிரியர்கள்தான் முக்கியம். நிறைவேற்றப்படவேண்டிய அவர்களுடைய கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி காண்பிப்போம். ஆசிரியர்களின் போராட்டத்துக்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு என்றார்.

ஜி.ஆர்.

ஜி.ஆர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுக்கு போராட்ட மொழி மட்டும் புரிகிறது. ஆகவே அந்த வழியிலேயே நாம் போராடவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆசிரியர்களோடு இணைந்து அவர்களின் கோரிக்கைக்காக போராடும் என்றார்.

முத்தரசண்

முத்தரசண்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் பேசும்போது, ஆசிரியர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் தங்கள் கோரிக்கைகளுக்காக ஒன்றாக இணைந்து தொடர்ந்து போராடவேண்டும் என்றார்.

English summary
TN political leaders have extended their support to the teaching community in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X