For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்திட்டம் குறித்த என் 10 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் சொல்லட்டும் பார்ப்போம்: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

Power issue: Ramadoss slams ADMK government
சென்னை: தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என முதல்வர் கூறுவதை நம்புவதா? அல்லது அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என அவரது நம்பிக்கைக்குரிய நத்தம் விஸ்வநாதன் கூறுவதை நம்புவதா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படும் என்று கடந்த மே 27 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் மின்வெட்டு நீக்கப்பட்டதற்கு மூன்றாவது நாளே சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதையும், இதனால் மக்கள் அவதிப்பட்டதையும் கடந்த 7 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சட்டமன்றத்தில் மற்ற அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் தாமே அறிவிக்கும் ‘பெரிய மனம்' கொண்ட முதல்வர் ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பான எனது குற்றச்சாற்றுகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வாய்ப்பை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தாராள மனதுடன் வழங்கியிருக்கிறார். அவரும் இட்ட பணியை நிறைவேற்ற வேண்டுமே என்பதற்காக நான்கு பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதில் தமது தலைவியை குளிர்விப்பதற்காக ஆங்காங்கே ‘பச்சை தன்னலவாதி', ‘அரசியல் ஆதாரம் தேட நினைக்கிறார்', ‘அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுபவர்' என முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் வார்த்தைகளால் என்னை விமர்சித்து, அதை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், மின்வெட்டை போக்குவதற்காக அதிமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு மின்திட்டத்தைக் கூட உருவாக்கி செயல்படுத்தவில்லை என்ற எனது முதன்மைக் குற்றச்சாற்றுக்கு அறிக்கையின் முதல் பத்தி தொடங்கி கடைசி பத்தி வரை எங்குமே பதிலைக் காண முடியவில்லை. இப்போது கூடுதலாக உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படும் 2550 மெகாவாட் மின்சாரம் கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களிலிருந்து தான் கிடைத்தது என்பதையும் அவர் மறுக்கவில்லை. மாறாக, மின்வெட்டை போக்க ஜெயலலிதா பாடுபடுவதாக வெற்று வசனங்களை வீசியுள்ளார்.

மே 27 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘ நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்'' என்று முதல்வர் கூறியிருக்கிறார். இதன் மூலம் 3 ஆண்டுகளில் மின்வெட்டைப் போக்குவதாக அவர் உறுதியளித்திருந்ததைப் போலவும், அதை இப்போது செய்து காட்டியதன் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். இது பச்சைப் பொய் என்பது தான் எனது குற்றச்சாற்று. மின்வெட்டைப் போக்குவதற்காக ஜெயலலிதா பத்துக்கும் மேற்பட்ட முறை வாய்தா கோரியதை மக்கள் மறந்துவிடவில்லை. ஒருவேளை ஜெயலலிதா மறந்திருந்தால் அவர் எந்தெந்த தேதிகளில் வாய்தா கோரினார் என்பதை அவருக்கு நினைவூட்ட நான் தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஒரு மாதத்திற்குள் 10.06.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த ஜெயலலிதா, ‘‘ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்; விரைவில் மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்'' என்றார். பின்னர் 04.02.2012 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘‘2012 அக்டோபருக்குள் 2550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். 2013 ஆம் ஆண்டு மத்தியில் மின்வெட்டு அடியோடு நீக்கப்படும்'' என்று உறுதியளித்தார். தொடர்ந்து 29.03.2012 அன்று 110 விதியின் கீழ் பேரவையில் அறிக்கை வாசித்த போதும் இதே வாக்குறுதியை அளித்தார். ஆனால் இவற்றில் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

31.10.2012 அன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு நடந்த விவாதத்தின் போதும், 08.02.2013 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போதும், 25.04.2013 அன்று 110விதியின் கீழ் அறிக்கை படித்த போதும் 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு நீங்கும் என முதல்வர் கூறினார். அதுமட்டுமின்றி, 2013 இறுதிக்குள் 4385 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இவையும் நிறைவேற்றப்படவில்லை. 25.10.13 அன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டே இல்லை என்று அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே தமிழகம் இருண்டது. ஆனால், மத்திய அரசின் சதியே இதற்கு காரணம் என பழி போட்டு தப்பிக்க முயன்றார். கடைசியாக 03.02.2014 அன்று சட்டப்பேரவையில் பேசும் போதும், அதன்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதும் மின்வெட்டு விரைவில் விலகும் என்றார். இப்படி வாய்தா மேல் வாய்தா வாங்கி விட்டு, வாக்குறுதியை சரியாக நிறைவேற்றி விட்டேன் என்று கூறுவது தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற உயர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அழகா?

தமிழ்நாட்டில் மின்வெட்டைப் போக்க முதல்வர் ஜெயலலிதா அல்லும் பகலும் பாடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார். இது உண்மை என்றால் தமிழக மின்திட்டங்கள் தொடர்பான கீழ்க்கண்ட வினாக்களுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா?

1) அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 26.10.12 அன்று ஒப்பந்தம் கோரப்பட்டு, 31.03.2013க்கு முன்பாக ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுவிட்ட நிலையில், அதன் பின் ஓராண்டு கழித்து 27.02.2014 அன்று ஒப்பந்தம் வழங்குவது தான் அல்லும்பகலுமாக அரும்பாடுபடும் லட்சனமா? அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடைய வேண்டிய இத்திட்டப்பணிகள், 2 ஆண்டுகள் தாமதமாக 2017 செப்டம்பரில் தான் நிறைவடையும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு காரணம் யார்?

2) 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 26.07.2013 அன்றும், 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அதற்கு அடுத்த வாரமும் பிரிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 11 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த மின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படாதது ஏன்? மின்வெட்டைத் தீர்ப்பதற்காக மிகத் தீவிரமாக செயல்படும் அழகு இதுதானா?

3) கடந்த 29.03.2012 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை படித்த ஜெயலலிதா எண்ணூரில் இப்போதுள்ள பழைய 450 மெகாவாட் மின்நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 660 மெகாவாட் எண்ணூர் மாற்று அனல் மின் நிலையம் அமைக்கப்படும்; அதில் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என அறிவித்தார். அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அத்திட்டத்திற்காக சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்ததைத் தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லையே ஏன்?

4) தூத்துக்குடியில் என்.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கும் மின்திட்டத்தின் இரு அலகுகளில் முறையே 2013 ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் கெடு முடிந்து ஓராண்டாகியும் இதுவரை அங்கு மின் உற்பத்தி தொடங்காதது ஏன்?

5) அடுத்த ஆண்டு இறுதியில் மின்னுற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட 1600 மெகாவாட் திறன் கொண்ட இராமநாதபுரம் உப்பூர் மின்திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கூட இதுவரைக் கோரப்படாதது ஏன்?

6) மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றபின் முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தித் திறனை பெருக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். இதை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

7) செய்யூரில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. அதை செயல்படுத்த முந்தைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாற்றியிருந்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?

8) 2013 முதல் 2015 வரை ஆண்டுக்கு 1000 மெகாவாட் மீதம் 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சூரிய ஒளி மின்சாரக் கொள்கையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதுவரை ஒரு மெகாவாட்டாவது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்கிறதா?

9) தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், மின்வெட்டை சமாளிக்க அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்க நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார். தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என முதல்வர் கூறுவதை நம்புவதா? அல்லது அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என அவரது நம்பிக்கைக்குரிய நத்தம் விஸ்வநாதன் கூறுவதை நம்புவதா?

10) 2011 ஆம் ஆண்டில் அதிமுக அரசு பதவியேற்ற போது அறிவிப்பு நிலையில் இருந்த மின் திட்டங்களை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மின்னுற்பத்தியை பெருக்க அதிமுக அரசு புதிதாக உருவாக்கிய திட்டங்கள் எவை... அவற்றின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா தயாரா?

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதை நான் வாடிக்கையாக கொண்டிருப்பதாக விஸ்வநாதன் கூறியுள்ளார். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க பங்களிப்பு செய்ததில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த கட்சியும் போட்டியிட முடியாது. இந்தியாவே போற்றும் 108 அவசர ஊர்தி, சேலத்தில் ரூ. 139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் என்பதையும், தமிழகத்திற்கு தொடர்வண்டித் திட்டங்களே எட்டிப் பார்க்காத காலத்தில், தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்களாக பொறுப்பேற்ற பாமகவைச் சேர்ந்தவர்கள் தான் தமிழகத்திலுள்ள அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளையும் அகல ரயில்பாதைகளாக மாற்றினார்கள். அதே நேரத்தில் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை, ரூ.10,000 கோடி மதிப்புள்ள மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு வெளியில் தெரியாத காரணங்களுக்காக முட்டுக்கட்டைப் போட்டு வருபவர் ஜெயலலிதா தான். இதையெல்லாம் வரலாற்று ஏடுகளைப் படித்தோ அல்லது அவற்றைப் படிப்பவர்களிடம் கேட்டோ நத்தம் விஸ்வநாதன் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்த முதல் 5 ஆண்டுகளில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கி, இன்றைய மதிப்பில் ரூ.6000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்த ‘சிவப்பு பொதுநலவாதி' ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பாக தமிழக மக்கள் சார்பில் நான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது விளக்கம் அமைந்தால் மின்வெட்டு பற்றி விமர்சிப்பதை நான் நிறுத்திக் கொள்கிறேன். இல்லாவிட்டால், மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க முதல்வர் ஜெயலலிதா தயாரா? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss has slammed ADMK government over power issue. He is expecting answers from CM Jayalalithaa for ten questions which he mentions in his statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X