For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்துக்கு வந்துள்ள ஆபத்தை பொறுப்பிலுள்ளவர்கள் தடுக்க வேண்டும்- கருணாநிதி வேண்டுகோள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா தீர்ப்புக்கு எதிராக தனியார் பள்ளிகள் நாளை செயல்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் ஒவ்வொரு பகுதியிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும், மனிதச் சங்கிலி என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக் கூடிய அளவில் முறைப்படி காவல் துறையினரின் அனுமதியைக் கூடப் பெறாமல் நடத்தி வருகிறார்கள்.

Pro Jayalalitha protests should not affect education: DMK chief Karunanidhi

அந்த வரிசையில் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் - மிரட்டலை அடுத்துப் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனியார் பேருந்துகள் - ஆம்னிப் பேருந்துகள் உரிமையாளர்களும், திரைப்படத் துறையினரும், கிரானைட் குவாரி உரிமையாளர்களும், வணிகர்கள் சார்பிலும் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு அவர்களும் ஒரு நாள் முழுவதும் வேலை நிறுத்தமோ உண்ணாவிரதமோ இருந்து வருகிறார்கள்.

இன்றையதினம் நாளேடுகளில் மேலும் ஒரு கட்டமாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என்று அந்த அமைப்பின் கூட்டமைப்புச் செயலாளர் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அமைச்சர்களும் இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தங்கள் துறை சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் துhண்டியும் அச்சுறுத்தியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்களின் படிப்பைப் பாதிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் நாளைய தினம் இயங்காது என்று அறிவித்திருப்பது கல்வியிலும் இந்த ஆட்சியாளர்களின் அரசியல் தலையீடு அதிகரித்து விட்டதற்கான ஆதாரமாகும். நீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்காக சட்ட விதிமுறைகள் வகுத்தளித்துள்ள நேர்வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இவ்வாறு ஆளுங்கட்சியினர் குறுக்கு வழிகளில் அனுதாபத்தைப் பெருக்கி நீதி மன்றத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்திட வேண்டுமென்பதற்காக இப்படிப்பட்ட போராட்டங்களில் ஈடுபடுவதையும்; குறிப்பாக மாணவர்களின் படிப்பைப் பாதிக்கின்ற அளவுக்கு தனியார் பள்ளிகள் நாளையதினம் இயங்காது என்று அறிவித்திருப்பதையும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவ மாணவியரும் சிறிதும் விரும்பவில்லை என்பதால் இத்தகைய கிளர்ச்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அரசின் நிர்வாகப் பொறுப்பிலே இருப்பவர்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எள்ளளவும் ஆதரிக்காமல், இவற்றைத் தடுத்து நடுநிலையாளர்கள் அனைவரும் நினைப்பதைப் போல தமிழக நிர்வாகம் ஸ்தம்பித்து விடவில்லை என்று நிரூபித்திடும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

நான் அறிந்த வரையில் இப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருப்பவர்களும் இந்தக் கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் பக்கப் பலமாக துணை நிற்கின்ற வகையில் செயல்படுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இத்தகைய ஆட்சி அவலங்களை அகற்றி விட்டு மக்கள் விரும்புகிற அமைதியான ஆட்சியை நிலைநாட்டப் பொறுப்புள்ள ஒரு அரசு முன்வராவிட்டால் சட்டம் ஒழுங்கு அனைத்தும் தலைவிரி கோலமாகி, தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்ற நிலை உருவாகி - நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது கடும்புலி வாழும் காட்டில் வாழ்கிறோமா என்ற கேள்விக் குறி தோன்றிவிடும்.

இப்படிப்பட்ட ஒரு நிலை தமிழ்நாட்டில் தோன்றுவதற்கு முன்பு, பொறுப்பிலே உள்ளவர்கள் முன் வந்து தமிழகத்திற்கு வந்துள்ள ஆபத்தை தடுத்திட - உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK chief Karunanidhi requested the Tamilnadu government that, the pro Jayalalitha protests should not be eneter in the education department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X