For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே ஆச்சரியம்! தலைமைச் செயலர் அறிக்கையில் ஒரு இடத்திலும் 'முதல்வர் ஆணைப்படி' இல்லையே!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்ட நீண்ட அறிக்கையில் முதல்வர் என்றோ அதிமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் பயன்படுத்தும் "முதல்வர் ஆணைப்படி" என்ற "துதி பாடல்" வாசகம் இடம்பெறாமல் அவ்வளவு 'கவனமாக' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு கவனமாக அறிக்கை தயாரிக்கப்பட்டதற்கு காரணம் இல்லாமலும் இல்லை...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முறையாக நீர் திறந்துவிடாமல் டிசம்பர் 1-ந் தேதி ஒரேயடியாக 29,000 கன அடிநீர் திறக்கப்பட்டதுதான் சென்னை பெருவெள்ளம், பேரழிவுக்கு காரணம் என்பது பொதுவான குற்றச்சாட்டு. நவம்பர் மாதம் இறுதியில் மழை பெய்யாத காலத்திலேயே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக நீரை திறந்துவிட்டிருந்தால் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் 29,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Questions on TN govt's clarification in Chembarambakkam issue

நவம்பர் மாத இறுதியிலேயே செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புக்கான அனுமதியை அதிகாரிகள் கேட்டதாகவும் ஆனால் தலைமைச் செயலகத்தில் இருந்து டிசம்பர் 1-ந் தேதி வரை உரிய உத்தரவு கிடைக்காத நிலையில் வேறு வழியே இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணித்த அதிகாரிகள் பெருமளவு நீரை திறந்துவிட நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் ரோசையாவை சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மனு கொடுத்திருந்தார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து ஒரு நீண்ட விளக்க அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையிலும் கூட ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அத்துடன் அதிமுக ஆட்சியில் பள்ளி திறக்கப்பட, மூடப்பட, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அட மழை பெய்வது குறித்து பேசினாலும் கூட "மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உத்தரவுப்படி" என காதில் ரத்தமே வந்துவிடும் அளவுக்கு இருக்கும் "துதி பாடல்" எந்த ஒரு இடத்திலும் இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்துக்குரிய ஒன்று.

மேலும் "முதல்வர்" என்கிற வார்த்தையும் எந்த ஒரு இடத்திலுமே வராமலும் மிக கவனமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தன்னுடைய இன்றைய அறிக்கையிலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தன்னுடைய அறிக்கையில், முதல் அமைச்சரின் பெயரை தலைமைச் செயலாளர் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறாரா?. அப்படியானால் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பது பற்றி முதல்வரின் அறிவுரை தான் கோரப்பட்டது, தம்முடைய அறிவுரை கோரப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கருணாநிதி.

மேலும் ஆணித்தரமான அடிப்படைகளுடன் விளக்கம் ஓரளவுக்கேனும் திருப்திகரமாக இருந்திருக்குமேயானால், அது குறித்த அறிக்கை எப்போதும் போல முதலமைச்சர் ஜெயலலிதா பெயரால் வந்திருக்கும். முதலமைச்சர் பதில் கூறாமல், தலைமைச் செயலாளரை விட்டு அறிக்கை கொடுத்திருப்பதில் இருந்தே விளக்கத்தில் உண்மை இல்லை- ஓட்டை உடைசல்கள் நிறைந்தது என்பதால் தான் முதலமைச்சர் பதில் அறிக்கை கொடுக்க முன் வராமல், தலைமைச் செயலாளரைப் பலிகடாவாக்கி இருக்கிறார்கள் என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது கீழ்மட்ட அதிகாரிகள் தங்களுக்கான பொறுப்பை செய்யாமல் இருந்துவிட்டார்கள் என "அனுமதி கோரி" காத்திருந்த "அப்பாவி" அதிகாரிகளை பலிகடாவாக்கும் முயற்சிதான் இது என்றே சொல்லப்படுகிறது...

English summary
TN govt's clarification statement on Chembarambakkam issue carefully avoided CM name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X