For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகுண்டராஜனின் போட்டியாளருக்குச் சொந்தமான ரிசார்ட்டில் திடீர் வருமான வரி சோதனை....!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிரபலமான டி.எஸ்.எப் என்ற தனியார் நிறுவனத்தினர் கடல்மீன் ஏற்றுமதி மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட டி.எஸ்.எப் விடுதி உள்ளிட்டவற்றில் அதிரடி வருமான வரி சோதனைநடத்தப்பட்டது. இநத் சோதனைக்கு வைகுண்டராஜனின் தூண்டுதலே காரணம் என்று டிஎஸ்எப் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை பங்குதாரர்களாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தை டி.எஸ்.எப்.பால்பாண்டி நடத்தி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து தாதுமணல் ஆலை அதிபரான வைகுண்டராஜனின் ஆதரவாளரான தொழில்அதிபர் எஸ்.டி.கே.ராஜன் போட்டியிட்டார். இதில் ராஜன் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் தாதுமணல் கனிமவள கொள்ளை தொடர்பான பிரச்சனை முன்னாள் கலெக்டர் ஆஷிஷ்குமார் மூலமாக வெளிவுலகிற்கு தெரியவந்தது. இந்நிலையில் மணல் ஆலை அதிபரான தயாதேவதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கனிமவள கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று வழக்கு தொடுத்தார். இவர் வி.வி மினரல்ஸ் நிறுவனத்திற்கு போட்டியான நிறுவனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த வழக்கின் பின்னணியில் தூத்துக்குடி டி.எஸ்.எப் நிறுவனங்கள் இருப்பதாக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தினர் சந்தேகப்பட்டனர். இந்தநேரத்தில செயலாளர் தேர்தல் வர இவர்களுக்கு இடையே முன்விரோதம் அதிகமானது.

இந்தப் பின்னணியில், வி.வி.மினரல் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜனின் மூலமாக டி.எஸ்.எப் நிறுவனங்கள் நடத்தி வரும் கடல்மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இதற்கு ஆதரவாக கிராமங்களை சேர்ந்த சிலரும் போராட்டத்தில் குதித்தனர். மேலும், மாசு கட்டுபாட்டு வாரியத்திடமும் இதுதொடர்பாக வி.வி நிறுவனங்களின் மறைமுகத் தூண்டுதலின்பேரில் பொதுமக்கள் தரப்பில் புகார்களும் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடியிலுள்ள டி.எஸ்.எப் நிறுவனங்களின் அனைத்து ஏற்றுமதி நிறுவனங்கள், தங்கும் விடுதி மற்றும் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று வருமானவரித் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சோதனைக்கு வி.வி.மினரல்ஸ் ஆலை உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தூண்டுதலே காரணம் என்று டி.எஸ்.எப் நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கனிமவள கொள்ளை தொடர்பான சர்ச்சையால் தென்மாவட்ட கடலோர கிராமங்களில் அவ்வப்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் டி.எஸ்.எப் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்டுள்ள வருமானவரித்துறையின் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முற்றுப்பெறாமல் நடந்துவரும் இதுமாதிரியான மறைமுக மோதல் வரும் நாட்களில் பகிரங்கமான வன்முறை மற்றும் மோதலை உருவாக்கிடும் அபாயநிலையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
IT officials conducted raid in anti Vaikundarajan VIP's firms in Tuticorin yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X