For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு... மத்திய அரசு தலையிட ராமதாஸ், வைகோ வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை : என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

ramdass, vaiko

என்.எல்.சி.யில் பணியாற்றும் 12,000 நிரந்தர தொழிலாளர்களும், 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் சுரங்கப்பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் நிலையில் உள்ளவர்களைக் கொண்டு அனல் மின்நிலையப் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு செய்யப்படும் மின் உற்பத்தியின் அளவு 2890 மெகாவாட்டில் இருந்து 1700 மெகாவாட் ஆக குறைந்துவிட்டது. அனல் மின் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும்.

இத்தகைய சூழலில் வேலைநிறுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் இரு நாட்களுக்குப் பிறகு எந்த நேரமும் மின்உற்பத்தி முற்றிலும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு முடங்கினால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கிவிடும் ஆபத்து இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

தொழிலாளர்களுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண என்.எல்.சி. நிர்வாகம் தயாராக இல்லை என்பதால், இப்பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு பேசி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

இதன்மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இருளில் மூழ்குவதும் தடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொதுத்துறை நிறுவனமாக ‘நவரத்னா' தகுதியைப் பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் அலட்சியப்படுத்துவது மட்டும் அன்றி, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி வருவது வேதனை அளிக்கிறது.

தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் திருமாவளவன் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் ஏதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டிப்பதுடன் உடனடியாக தொழிற்சங்கத்தலைவர் மீதான பணி நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Ramadass and vaiko urges centre to intervene in NLC labour crisis
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X