For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்க பத்திரத்துக்கு குறைவான வரி… ஆபரண தங்கத்திற்கு கூடுதல் சுங்க வரி… ராமதாஸ் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: தங்கத்தின் மீதான சுங்க வரியை, தங்கப்பத்திரத்திற்கு குறைவாகவும், ஆபரண தங்கத்திற்கு கூடுதலாகவும் விதித்துள்ள மத்திய அரசை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டவில்லை என்பதைப் போல தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதில் மத்திய அரசு கடைபிடித்து வரும் இரட்டை நிலையால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் முதலீடு செய்வதற்காக தங்கப் பத்திரங்களை வாங்குவோருக்கு வரி குறைக்கப்பட்டு மறைமுக சலுகை வழங்கப்படுகிறது. இந்த இரட்டை நிலை கண்டிக்கத்தக்கது.

Ramadoss condemns for reducing excise duty on gold bond not jewellery

மத்திய, மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான வழிகள் ஏராளமாக இருந்தாலும் அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது வரிக்கு மேல் வரி விதிப்பதையும், வரிக்கான தேவை நீங்கி விட்டாலும் முடிந்தவரை வரியை வசூலித்து வருவாய் சேர்க்கும் வணிக அணுகுமுறையையும் தான் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் மீது ரூ.1.50 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி வரியை உயர்த்திய மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியுள்ள போதிலும், வரியைக் குறைக்க முன்வரவில்லை. தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட விஷயத்திலும் அதே அணுகுமுறையைத் தான் கடைபிடித்து வருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை தங்கம் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வில்லை. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்ததாலும், உலகின் பல நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலையால் இந்தியாவின் ஏற்றுமதி சரிந்ததாலும் நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது. 2012-13 ஆம் ஆண்டில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4.7% ஆக, அதாவது ரூ. 5.29 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில், அதைக்கட்டுப்படுத்தும் நோக்குடன் தங்கம் மீது 2% இறக்குமதி விதிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக 10% என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது. பின்னர் தங்கத்தின் இறக்குமதி குறைந்ததால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகும், இந்த சுங்க வரி நீக்கப்படவில்லை.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. 2013 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரியின் தேவை 6 மாதங்களில் நீங்கி விட்டாலும், கடந்த 4 ஆண்டுகளாக அந்த வரியை பயன்படுத்தி மத்திய அரசு அதிக வருவாயை ஈட்டி வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும், தங்க வணிகர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும் நிலையில், பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் இந்தியாவுக்குள் தங்கத்தை கடத்தி வருவது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. இதனால் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் மீதான் சுங்கவரியை நீக்கும்படி பலமுறை நான் வலியுறுத்தியும் அதனால் பயனில்லை.

தங்கம் மீது அதிக இறக்குமதி வசூலிக்கும் விஷயத்தில் இப்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுசேமிப்பு முதலீடுகளை திரட்டும் நோக்கத்துடன் ஆறாவது கட்ட தங்க பத்திரங்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கத்திற்கு இணையான தங்கப் பத்திரத்தின் விலை ரூ.3007-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இப்போது திடீரென தங்கப்பத்திரத்தின் விலை ரூ.50 குறைத்து ரூ.2957 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தங்கப் பத்திரங்களுக்கு இறக்குமதி வரி 2% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பது தான். ஆனால், இந்த வரிக்குறைப்பு நகைக் கடைகளில் வாங்கும் தங்க நகைகளுக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தீபஒளிக்கு பிறகு தங்கப் பத்திரங்களுக்கு மட்டும் மேலும் 2% வரிக்குறைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஆனால், சந்தையில் விற்கப்படும் தங்கத்திற்கு சுங்க வரிக்குறைப்பு செய்வது குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. தங்க பத்திரங்களுக்கு மட்டும் ஏதோ ஒரு பெயரில் வரிக்குறைப்பு சலுகையை வழங்கி விட்டு, சந்தையில் விற்கப்படும் தங்கத்திற்கு வரியை குறைப்பது குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடலாம் என அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் இந்த அணுகுமுறை நியாயமானதல்ல. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2% குறைக்கப்பட்டால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாயும், 4% குறைக்கப்பட்டால் 100 ரூபாயும் குறையும். மொத்தமாக நீக்கப்பட்டால் ரூ.250 குறையும். தீபஒளி மற்றும் அதைத்தொடர்ந்து வரும் விஷேசங்களுக்கு நகை வாங்கும் மக்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.

எனவே, தங்கம் மீதான வரியை நீக்குவதில் பாகுபாடு காட்டுவதை விடுத்து, தங்கப்பத்திரங்களுக்கு செய்யப்பட்டுள்ள 2% வரிக்குறைப்பை, சந்தையில் விற்கப்படும் தங்கத்திற்கும் நீட்டிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குள் தங்கம் மீதான 10% இறக்குமதி வரியையும் படிப்படியாக நீக்கி தங்கத்தின் விலை சவரனுக்கு 20,000 ரூபாய்க்கும் கீழ் குறைவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Ramadoss condemned Central government for offering discount of Rs. 50 per gram for gold bonds and not reduced excise duty for jewellery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X