For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விவசாயத்திற்கு வேட்டு வைக்கும் உலக வர்த்தக மாநாடு- ராமதாஸ் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: உலக வர்த்தக மாநாட்டு முடிவில் ஏற்கப்பட்டுள்ள தீர்மானங்களால் இந்திய விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில், ''கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 10 ஆவது அமைச்சர்கள் மாநாட்டில் கடந்த 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக ஏற்கனவே இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்பட்ட காரணமாக இருந்த உலக வர்த்தக அமைப்பு, இப்போது இந்தியாவில் உழவுத் தொழிலையும், உணவுப் பாதுகாப்பையும் அடியோடு ஒழிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

Ramadoss statment about world trade confernece

உலக அளவில் வணிகத்தை பெருக்குவதற்காக 1995 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட உலக வர்த்தக அமைப்பு, உலகம் என்றால் அது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தான் என்ற எண்ணத்தில் அந்த நாடுகளின் வர்த்தக நலன்களை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. அத்தகைய செயல்திட்டத்துடன் தான் கென்யத் தலைநகர் நைரோபியில் அந்த அமைப்பின் 10ஆவது அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.

விவசாயத்திற்கு வளரும் நாடுகள் அளித்து வரும் மானியங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பது தான் உலக வர்த்தக அமைப்பின் நோக்கம் ஆகும். ஆனால், இத்திட்டத்திற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக, 2001 ஆம் ஆண்டில் தோகா வளர்ச்சி செயல்திட்டம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த தீர்மானிக்கப் பட்டது. இந்த செயல்திட்டத்தில் பெரும்பாலான அம்சங்கள் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக இருந்தாலும், சில அம்சங்கள் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருந்தன.

அதனால் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்களை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை வளரும் நாடுகளுக்கு இருந்து வந்தது. ஆனால், நைரோபி மாநாட்டில் தோகா வளர்ச்சி செயல்திட்டத்தின் அடிப்படையில் விவாதிக்காமல், 2005 ஆம் ஆண்டின் சிங்கப்பூர் அமைச்சர்கள் பிரகடனத்தின் அடிப்படையில் விவாதங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பாதகமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நைரோபி தீர்மானத்தின் இரு அம்சங்கள் இந்தியாவில் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் அழித்து விடும் ஆபத்து உள்ளது. முதலில் ‘‘இந்தியாவில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் வழங்கப்படும் கொள்முதல் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, விதைகள், மின்சாரம், உரம், பூச்சிமருந்து ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை இப்போதுள்ள அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதிகரிக்கக்கூடாது'' என நைரோபி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக இந்தியா உணவு தானியங்களை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது நிபந்தனையை நடைமுறைப்படுத்த இந்தியா 4 ஆண்டுகள் அவகாசம் பெற்றிருப்பதால் 2018 ஆம் ஆண்டில் தான் இது நடைமுறைக்கு வரும். ஒருபுறம் வேளாண் இடுபொருட்களுக்கு இப்போது வழங்கப்படும் மானியங்கள் இதேநிலையில் தொடரலாம் என்று கூறியுள்ள வர்த்தக அமைப்பு, 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு விளைபொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானியங்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; மானியத்தின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. இது இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி ஆகும்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் விவசாயத்திற்கு மறைமுகமாக ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் கொள்முதல் விலை மூலமாக மட்டுமே ஓரளவு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கும் தடை போடுவது முறையல்ல. அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி இந்தியாவில் ஓர் உழவருக்கு சராசரியாக மாதத்திற்கு ரூ.1000 மட்டுமே மானியமாக வழங்கப்படுக்கிறது.

ஆனால், அமெரிக்காவில் சராசரியாக மாதத்திற்கு ரூபாய் 2.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மானியம் பெறுவதில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தை கொண்டுள்ள இந்திய உழவனும், அமெரிக்க உழவனும் உலக சந்தையில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்பது டைனோசரையும், அப்பாவி ஆட்டுக்குட்டியையும் மோத விடும் அபத்தமான செயலுக்கு இணையானதாகவே கருதப்படும். இது இந்திய விவசாயிகளை மேலும் கடனாளியாக்கி தற்கொலை செய்து கொள்ளவே வழிவகுக்கும்.

அதேபோல் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்படவிருக்கும் நிலையில், எதிர்காலத் தேவைக்காக உணவு தானியங்களை சேமித்து வைக்கக்கூடாது என்பது ஏற்க முடியாத நிபந்தனை ஆகும். கிட்டத்தட்ட 125 கோடி இந்தியர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சாதாரணமான விஷயமல்ல. இயற்கை சீற்றங்களால் ஒருமுறை வேளாண் உற்பத்தி தடைபட்டால், உணவுக்காக உலக நாடுகளிடம் தான் இந்தியா கையேந்த வேண்டும். இது இந்தியாவில் பசியும், பட்டினிடும் பெருகுவதற்கே வகை செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder ramadoss states that World finance meet ends with big dangers for India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X