For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக தேர்தலில் போட்டியிடக் கூடாது.. தடை செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: கரூரில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கிட்டங்கியிலிருந்து கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு எந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். எனவே அதிமுக இந்தத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

Ramadoss urges EC to ban ADMK from contesting

கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் அதிமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கிட்டங்கியிலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. பல கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், வெறும் ரூ.10.33 லட்சம் மட்டுமே பணம் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுகவினரை காப்பாற்றுவதற்கான இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.

கரூர்- சேலம் நெடுஞ்சாலையில் அய்யம்பாளையம் என்ற இடத்தில் உள்ள அதிமுக தொழிலதிபர் அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான கிட்டங்கியிலிருந்து வாக்காளர்களுக்கு தருவதற்காக ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்தும்படி கரூர் மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார். அதனடிப்படையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பணம் எண்ணும் எந்திரங்கள் 12, காலி பெட்டிகள், பணம் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ், 4 மகிழுந்துகள் ஆகியவற்றுடன் ரூ.10.33 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அன்புநாதன் இல்லத்தில் வருமானவரித்துறை நடத்திய ஆய்வில் ரூ. 4.70 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால், ரூ.10.33 லட்சம் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அன்புநாதனுக்கு சொந்தமான கிட்டங்கியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து கண்காணித்து வந்த சிலர் அளித்த தகவலின் பேரில் தான் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 12 பணம் எண்ணும் எந்திரங்களைக் கொண்டு கட்டுக்கட்டாக பணம் எண்ணப்பட்டுள்ளன, பணத்தைக் கொண்டு வருவதற்காக 4 மகிழுந்துகளும், பணத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்சும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் இதற்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்சின் பதிவு எண் போலியானது என்றும், அந்த எண் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு சொந்தமானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பணத்தை பெருமளவில் கடத்திச் செல்வதற்காகவே பல லட்சம் செலவு செய்து போலி ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது வெறும் ரூ.10.33 லட்சம் மட்டுமே பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதை குழந்தை கூட நம்பாது.

கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அங்கிருந்து பணம் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்றும், இதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தின் மதிப்பு பல கோடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்த பணமும் ஓட்டுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.4.70 கோடியை நோட்டுக்களாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு இருக்கும் போது அந்த பணத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்யாதது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமின்றி, இந்த சோதனை மற்றும் பறிமுதல் தொடர்பாக அன்புநாதன் உள்ளிட்டோர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜேஷ் லக்கானி ஆணைப்படித் தான் அன்புநாதனின் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததுடன், அவர்களை காப்பாற்றவும் முயற்சிகள் நடப்பதைப் பார்க்கும்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என தெரியவில்லை. பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரான அன்புநாதன் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி ஆவார். எனவே அவரையும், அமைச்சரையும், அமைச்சருக்கு மேல் உள்ள சக்திகளையும் காப்பாற்றுவதற்காகவே அனைத்து உண்மைகளும் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் இதுவரை பணியாற்றிய அனைத்து இடங்களிலும் அதிமுகவின் ஆதரவாளராகவே செயல்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் தேதி இரவு கிருஷ்ணராயபுரத்தில் அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி அன்பு செல்வம் நடத்திய வாகன ஆய்வில் கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வந்த வாகனத்தில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த கரூர் ஆட்சியர் ராஜேஷ் அந்த தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு மிரட்டி, அதிமுக வேட்பாளரை விடுவிக்கும்படி ஆணையிட்டிருக்கிறார். மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள ராஜேஷ் போன்றவர்களே அதிமுக நிர்வாகிகளாக மாறி முறைகேடுகளுக்கு துணை போவது ஜனநாயகத்தை அழித்து விடும்.

எனவே, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள் முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆலோசகர் வரை அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முயலும் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிட ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has urged the EC to ban ADMK from contesting in the assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X