For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குமூலம் திருத்தம் எதிரொலி- பேரறிவாளன் உட்பட மூவர் தூக்கை ரத்து செய்க: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

Ramadoss wants goernment to cancel Rajiv killers' death sentence
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தியதாக சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் ஒப்புக் கொண்டிருப்பதால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அப்பாவித் தமிழர்கள் மூவருக்கு எதிராக பின்னப்பட்ட சதி வலையின் முடிச்சுகள் அறுபடத் தொடங்கியுள்ளன. இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட 3 தமிழர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றின் முடிச்சுகளும் அவிழும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் இந்த குற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் இருந்தே தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தி வந்தனர். பேரறிவாளனிடம் தடா சட்ட விதிகளின்படி, சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இருவருக்கும் இதேமுறையில் தான் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக குற்ற வழக்குகளில் குற்றஞ்சாற்றப்பட்டவரின் வாக்குமூலங்கள் சாட்சியங்களாக கருதப்படுவதில்லை. ஆனால், ராஜிவ் கொலை வழக்கில் மட்டும் பேரறிவாளனைக் கொடுமைப்படுத்தி பெறப்பட்ட வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொண்டு அவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது. ஆனால், இப்போது பேரறிவாளனின் வாக்குமூலமே திரித்து பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்ற நடுவண் புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) கண்காணிப்பாளர் தியாகராஜனே இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘‘இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிவந்து சிவராசனிடம் கொடுத்தேன். ஆனால் அவை எதற்காக வாங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியாது'' என்று பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை, ‘‘இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிவந்து சிவராசனிடம் கொடுத்தேன். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு இந்த பேட்டரிகளைத் தான் சிவராசன் பயன்படுத்தினார்'' என மாற்றி பதிவு செய்ததாக சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டிருக்கிறார். குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் வாக்குமூலம் இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்து விட்டதாகவும், அதற்காக இப்போது மிகவும் வருந்துவதாகவும் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் ஏற்கனவே பல வழக்குகளில் வாக்குமூலங்களை திரித்து பதிவு செய்து அப்பாவிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வரலாறு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் கொலை சதி குறித்து பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்குத் தெரியாது என்பதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்த போதிலும், அது முறையாக பதிவு செய்யப்படாததால் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. பேரறிவாளனுக்கு தண்டனை வழங்க எந்த சாட்சியம் அடிப்படையாக அமைந்திருந்ததோ, அதுவே தகர்ந்துவிட்ட நிலையில், இதற்குப் பிறகும் அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயன்றால் அது நீதியையே தூக்கிலிடுவதாக அமைந்துவிடும்.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனையையும் செயல்படுத்தினால் அது இரட்டைத் தண்டனையாக அமைந்துவிடும்; இதை அனுமதிக்கக் கூடாது என்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற முன்னாரி நீதிபதி கே.டி. தாமஸ் கூறியிருக்கிறார்.

எனவே, ராஜிவ் கொலை வழக்கில் அப்பாவிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இவ்வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை திரித்து பதிவு செய்த அதிகாரிகள், அவர்களுக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் விசாரணை நடத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss urges the state and centre to cancel the death sentence of Santhan, Murugan and Perarivalan. The trio were given death sentence for assassinating former PM Rajiv Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X