தஞ்சை, அரவக்குறிச்சியில் அவர்களை தவிர மத்தவங்க செலவழித்த பணத்தை திருப்பிக் கொடுங்க: ஈஸ்வரன்
சென்னை: தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மற்ற வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தர வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறோம்.

பணம்
தமிழகத்தின் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் வேட்பாளர்கள் பணம் கொடுத்திருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டதென்பதை அனைவரும் அறிவோம். தேர்தல் ஆணையம் இதை ஒப்புக் கொண்டு இருப்பதால் தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தேர்தல்
மறுபடியும் தேர்தல் அறிவிக்கப்படும்போது மீண்டும் அதே கட்சிகள் பணம் கொடுக்கத்தான் போகிறார்கள். தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது, வேடிக்கைதான் பார்க்கும் என்பது தமிழக மக்களின் கருத்து.

வேட்பாளர்கள்
தவறு செய்தவர்களுக்கு இது தண்டனையாகாது என்பது ஒருபுறமிருக்க, உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தான். மற்ற வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தர வேண்டும்.

திருப்பிக் கொடுங்கள்
மற்ற நேர்மையான வேட்பாளர்கள் எதற்காக தண்டிக்கப்பட வேண்டும். மற்ற வேட்பாளர்கள் செலவழித்த பணம் தவறான வழியில் சம்பாதித்ததும் அல்ல. தேர்தலில் செலவழித்த பணத்தை திருப்பிக் கேட்க அனைத்து வேட்பாளர்களுக்கும் உரிமையிருக்கிறது. அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் மற்ற எல்லா வேட்பாளர்களுக்கும் தேர்தலில் செலவழித்த பணத்தை திருப்பித் தருவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!