For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாவோயிஸ்டுகள் கொலை- சந்திரபாபு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்: மனித உரிமை பாதுகாப்பு மையம்

ஆந்திராவில் 28 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மனித உரிமை பாதுகாப்பு மையம் கடுமையாக கண்டித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டதன் மூலம் சொந்த நாட்டு மக்கள் மீது அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிகழ்த்தியுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் குற்றம்சாட்டியுள்ளது.

மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Rights movment slams AP govt on Maoists encounter

கடந்த 24-10-2016 அன்று ஆந்திரா-ஒரிசா எல்லைப் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 28 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கிறார் ஆந்திர மாநில டி.ஜி.பி. சம்பாசிவராவ். ஒடிசா முதல்வர் காவல்துறைக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

மாவோயிஸ்டுகள் மீது சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களும் திருப்பிச் சுட்டதாகவும் சொல்கிறது காவல்துறை. மாவோயிஸ்டுகளை முன்பே பிடித்துவைத்து நிராயுதபாணிகளான அவர்களை போலி மோதலில் போலீசு சுட்டுக் கொன்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார் எழுத்தாளர் வரவரராவ்.

மாவோயிஸ்டுகளுக்கு உணவு கொண்டு செல்பவர் மூலம் உணவில் நஞ்சு கலந்து அவர்களை வீழ்த்திவிட்டு, அதன்பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக மாவோயிஸ்டு அமைப்பினைச் சார்ந்த ஷ்யாம் அளித்துள்ள பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

துப்பாக்கிச் சண்டை எதுவும் நடக்கவில்லை, தூங்கிக் கொண்டிருந்த நிலையிலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையிலோதான் இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம். தனது உயிருக்கு ஆபத்து வரும்போதுதான், எவர் ஒருவரையும் சுட்டுக் கொல்லும் உரிமையை போலீசாருக்கு சட்டம் வழங்குகிறது.

கைது செய்து வழக்கு நடத்தினால், தாங்கள் விரும்புகின்ற வகையில் அவர்களுக்கு எதிரான மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தினால்தான், தண்டனையை தாங்களே நிறைவேற்றுவதற்கு இத்தகைய படுகொலைகளை போலீசார் நடத்துகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் மீது வழக்கு இருந்தது, அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்ற கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல், மாவோயிஸ்டு என்றாலே சுட்டுக் கொன்றுவிடலாம் என்பது எழுதப்படாத சட்டமாகி வருகிறது. மாவோயிஸ்ட் அமைப்பில் இருப்பதாலே ஒருவரைக் கைது செய்ய முடியாது, அவ்வாறு கைது செய்ததற்கு அரசு இழப்பீடு தரவேண்டும் என சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியுள்ளது. இருந்தபோதிலும், இத்தகைய தீர்ப்புகள் விதிவிலக்குகள். மாஜிஸ்டிரேட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு எல்லா கைதிகளையும் ரிமாண்டுக்கு அனுப்புவது போல, மாவோயிஸ்டு என்றால் சுட்டு விடலாம் என்பதுதான் நீதித்துறையின் அணுகுமுறையாகவும் மாறி வருகிறது. "போலீசு என்கவுண்டர்களுக்கு கொலை வழக்கு பதிய வேண்டும்" என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவெல்லாம் குப்பைக் கூடையில்தான் எறியப்படுகிறது.

ஆயுதங்கள் வைத்திருந்தார்கள், தாக்க முயன்றார்கள் என்று சொல்லி தனது குற்றத்தை போலீசு நியாயப்படுத்துகிறது. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகளே அளிக்கிறார்கள்; சக இந்திய குடிமக்களைக் கலவரம் செய்து கொல்வதற்கும் பெண்களை வல்லுறவு செய்வதற்கும்தான் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள். போலீசுத்துறை அவர்கள் மீது எங்கேயும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

மாறாக, மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்படக் காரணம், மத்திய இந்தியாவின் வனப்பகுதியிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றி விட்டு அவற்றை ஆக்கிரமித்து பல லட்சம் கோடி மதிப்புள்ள தாதுப்பொருட்களை இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு உதவுவதுதான்.இந்திய அரசும், மாநில அரசுகளும், ஒப்பந்தங்கள் மூலம் அவற்றை ஏற்கனவே தாரைவார்த்து விட்ட போதிலும், அந்த ஒப்பந்தகளை நிறைவேற்ற மாவோயிஸ்டுகள் தடையாக இருப்பதுதான் அரசும் போலீசும் அவர்கள் மீது இத்தகைய படுகொலைகளை நடத்துவதற்குக் காரணம்.

கொல்லப்பட்டவர்கள் யாரும் அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் அல்ல. மாறாக, ஆந்திர மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள்தான்.

ஆனால், இத்தகைய அநீதியை கட்சிகளும் ஊடகங்களும் கண்டிக்க முன்வராதது இந்தியாவில் ஜனநாயகத்திற்கான வெளி மென்மேலும் சுருங்கி வருவதைக் காட்டுகிறது.

தாங்கள் சட்டத்தின் ஆட்சி நடத்தி வருவதாகவும், மாவோயிஸ்டு அமைப்பினர் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதுதான், அவர்கள் மீது அரசு கூறும் குற்றச்சாட்டு. ஆனால், போலி மோதல் கொலை சம்பவங்களில் மட்டுமின்றி, தனது எல்லா நடவடிக்கைகளிலும் அரசும், போலீசும், நீதித்துறையும், கட்சிகளும்தான் சட்டத்தை மீறி வருகின்றன. ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று யார் கூச்சல் போடுகிறார்களோ அவர்கள்தான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் கொலையாளிகளாக இருக்கின்றனர். சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான இந்தப் படுகொலையை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கொல்லப்பட்ட போராளிகளில், மாவோயிஸ்டு அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் ராமகிருஷ்ணாவின் மகனும் ஒருவர். தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் ராமகிருஷ்ணாவின் மனைவி பத்மா, மக்களுக்காகப் போராடி மடிந்த தனது மகனை எண்ணிப் பெருமை கொள்வதாகப் பேட்டியளித்திருக்கிறார். ஆனால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசியல் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சரோ, அக்லக் என்ற இசுலாமிய முதியவரைக் கொலை செய்த கிரிமினலின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி மரியாதை செய்து கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் எளிய மக்களுடைய வாழ்வுரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை பத்மாவைப் போன்ற தாய்மார்களிடமிருந்துதான் நாம் பெறவேண்டியிருக்கிறது.

இவ்வாறு வாஞ்சிநாதன் அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
Human Rights Protection movement slammed the AP govt's encounter claim with Maoists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X