குடிக்க தண்ணீர் இல்லை.. அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

செங்கம்: குடிநீர் வினியோகம் முறையாக செய்யாத ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

செங்கத்தை அடுத்து உள்ளது பரமனந்தல் காமராஜ் நகர் கிராமம். இங்கு 3000க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அக்கிராம மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Road Rokho for drinking water

இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவரை அணுகி கிராம மக்கள் குடிநீர் தேவை குறித்து பலமுறை முறையிட்டுள்ளனர். மேலும், குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதி பெண்கள் குடிநீருக்காக ஆங்காங்கே தேடி அலையும் சூழ்நிலையை எடுத்து கூறியும் அவர் கண்டு கொள்ளவில்லை.

இதனால், அப்பகுதியை சேர்ந்த டேங் ஆப்ரேட்டரை அணுகி குடிநீர் வினியோகம் செய்யுமாறு கிராம மக்கள் கேட்டுள்ளனர். அதற்கு டேங் ஆப்ரேட்டர், தனக்கு ஊராட்சி நிர்வாகம் 4 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் உள்ளது. கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறைப்படி கொடுத்தால்தான் பொது மக்களுக்கு முறையாக தண்ணீரை தர முடியும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, கிராமத்து பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவரை அணுகி டேங் ஆப்ரேட்டர் சொன்னதை கூறி குடிநீர் வினியோகத்தை சரி செய்யுமாறு கோரியுள்ளனர். அதற்கு, ஊராட்சி மன்ற தலைவர் காந்தாமணி, ஊராட்சி தொடர்பான பணிகளை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை என்றும், தேர்தல் முடிந்து அடுத்த தலைவர் வந்தால் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் இது தொடர்பாக செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு ஒன்றையும் கிராம மக்கள் அளித்தனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து தங்களது குறைகளை எடுத்துக் கூறினார்கள். அப்போதும் குடிநீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

இதனால் கோபமடைந்த கிராம மக்கள் செங்கம் குப்பனத்தம் செல்லும் கிராம சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்தை சிறைபிடித்தனர். பின்னர், சாலையில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் செய்தனர்.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், போலீசார் கொடுத்த வாக்குறுதியில்சமாதானம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், சிறை பிடிக்கப்பட்ட பேருந்துகள் விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Village people staged road rokho for drinking water in Sengam today.
Please Wait while comments are loading...