For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூர் அருகே அருள்மிகு சித்தர் சதாசிவ பிரமேந்திராளின் 100வது ஆராதனை விழா

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் அருகே உள்ள நெரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சதாசிவ பிரமேந்திராளின் ஜீவசமாதியில் 100வது ஆராதனை விழா இன்று (மே 4ம் தேதி) துவங்கியது.

கரூர் அருகே உள்ள நெரூரில் புகழ் பெற்ற அருள்மிகு சதாசிவ பிரமேந்திராள் ஜீவசமாதி அமைந்துள்ளது. கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் உள்ளது நெரூர். காவிரி ஆற்றின் அருகில் அமைதியின் சின்னமாக அமைந்துள்ளது இந்த கிராமம்.

இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோவில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு அருணகிரிநாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அக்னீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் இயற்கை அழகுமிக்க அமைதியான சூழலில் அமைந்துள்ளது சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி.

சதாசிவ பிரமேந்திராள் மதுரை மாநகரில் 17-18ம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் அவதரித்தார். அவர் தந்தை பெயர் சோமநாத அவதானியார். தாயார் பெயர் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திராளின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார்.

பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார்.

இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.

உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், கடும் தவம் செய்து ஞானநிலை அடைந்தார்.

சதாசிவ பிரமேந்திராளின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றும் பல ஆன்மீக புருஷர்கள் ஆச்சர்யத்துடன் சொல்லும் விஷயம் என்ன வென்றால், ஒருமுறை சதாசிவ பிரமேந்திராள் உடல், மணம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் நிர்வாணமாய் சென்று கொண்டிருந்தார். அப்படியே ஒரு அரசன் ஒருவரின் அரண்மனைக்குள் நுழைந்துவிட்டாராம்.

இதை பார்த்த அந்த அரசன் பிரமேந்திராளைப் பற்றி அறியாததால் நிர்வாணமாய் தன் அவையில் நுழைந்த அவர் மீது கடும் கோபம் கொண்டு அவரின் கையை வாளால் வெட்டி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் பிரமேந்திராள் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால் தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டிருந்தாராம். பின்பு அந்த அரசன் தன் தவறை உணர்ந்து வருந்தி பிரமேந்திராளிடம் மன்னிப்பு கேட்டார் என்கின்றனர்.

சதாசிவ பிரமேந்திராளின் குருவான பரமசிவேந்திராளின் ஜீவ சமாதி புதன் கேந்திரம் என்று அழைக்கப்படும் திருவெண்காட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு லிங்கமும் காட்சி தருகிறது.

இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கின்றது. பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை, சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.

சதாசிவ பிரமேந்திராளின் உடல் நெரூரிலும், ஆவி மானாமதுரையிலும், ஜோதி கராச்சியிலும் அடக்கம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, காஞ்சி சங்கராச்சாரியார், சிருங்கேரி சுவாமிகள், கர்னாடகா முன்னாள் முதல்வர் கிருஷ்ணா, தமிழகத்தின் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் இளையராஜா, காமெடி நடிகர் எஸ்.வி. சேகர், முன்னாள் ஜெயலலிதா பேரவை செயலாளர் மகாதேவன், கரூர் திமுக எம்.பி.கே.சி. பழனிச்சாமி ஆகியோர் வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா இன்று காலை 8 மணிக்கு லட்சார்ச்சனையுடன் துவங்கியது.

ஒவ்வொரு நாளும் காலை, 11 மணிக்கு நெரூர் அக்ரஹார தெருவில் இருந்து சதாசிவ பிரமேந்திராளின் படம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது ஜீவசமாதியில் வைத்து, லட்சார்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து மஹன்யாஸ அபிஷேகம், வேதபராயணம் ஆகியவை நடைபெறும். மாலையில் கர்நாடக இசை கச்சேரி, உபன்யாசம், இளம் கலைஞர்கள் அரங்கேற்றம் ஆகியவை நடைபெறுகிறது.

இதனையடுத்து மே 9ம் தேதி சதாசிவ பிரமேந்திராள் உற்சவம் நடக்கிறது. அன்று சிறப்பு ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

அப்போது, பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் நடைபெறும். பக்தர்களுக்கு, இலையில் அன்னதானம் வழங்கும் போது அதில் எதாவது ஒரு ரூபத்தில் சதாசிவ பிரமேந்திராள் அமர்ந்து சாப்பிடுவதாக ஐதீகம்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டும் இன்றி, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்கள் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sadasiva Brahmendral's 100th aaradhanai vizha has begun today near Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X