For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒத்துழைப்பு கொடுக்காத போலீஸ்… ஓயாத சகாயம் ஐ.ஏ.எஸ்… அறிக்கையில் வெடிக்கப் போகும் வெடிகுண்டுகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கிரானைட் முறைகேடு பற்றி 20கட்ட விசாரணை நடத்தியுள்ள சகாயம், அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரகாலம் அதாவது அக்டோபர் 15 வரை அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 10 மாத விசாரணையில் 12000 பக்க அறிக்கைகளை தயாரித்துள்ளார் சகாயம். கிரானைட் கொள்ளையோடு நரபலி கொலைகளும் தோண்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிரானைட் முறைகேடு விசாரணை.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பாக, சட்ட ஆணையரும், தனி அலுவலருமான உ.சகாயம் 2014, டிசம்பர் 3 முதல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மதுரையில் தங்கி ஆய்வு செய்த சகாயம் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். குவாரிகளில் நேரடியாக கள ஆய்வு செய்தனர். இதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டி எடுத்தது, புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது, புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டது, மலையையே வெட்டி எடுத்தது, நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் பாழாக்கியது என புதிய முறைகேடுகள் தொடர்ச்சியாக வெளிவந்தன.

கனிம வளம், பொதுப்பணித் துறை, வேளாண்மை, வருவாய், காவல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து விசாரணை செய்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகவைத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் தமது இறுதி அறிக்கையைத் தயார் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 15ம் தேதி விசாரணை அறிக்கையை சகாயம் தாக்கல் செய்யப்போவதாகக் தகவல் பரவியதும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு போன் செய்த ஒருவர், ‘சகாயம் சேகரித்து வைத்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் கொளுத்திவிடுவோம்; அவருடைய விசாரணை எங்களை ஒன்றும் செய்துவிடாது' என்று பேசியுள்ளார். இந்தத் தகவலை காவல் துறையினர் சகாயத்திடம் தெரிவித்து அவருடைய அலுவலகத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளித்தனர். இதுபோல் வழக்குகள் நடந்துவரும் மேலூர் கோர்ட்டுக்கும் மிரட்டல் போன் வந்ததால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இதுவரை மிரட்டல் விடுத்த ஆசாமியை கண்டுபிடிக்கவில்லை.

300 ஏக்கர் தொழிற்சாலை

300 ஏக்கர் தொழிற்சாலை

கடந்த 9ம் தேதி மதுரை மாவட்டத்தில் பி.ஆர்.பி ஆக்கிரமித்து நடத்திவரும் குவாரிகளுக்கும், தெற்குத் தெருவில் இருக்கும் அவருடைய பாலிஷ் ஃபேக்டரிக்கும் ஆய்வு நடத்தச் சென்ற சகாயம், அங்கிருந்த பல கோடி மதிப்பிலான கிரானைட் கலைப்பொருட்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துதான் போனார். 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தொழிற்சாலைக்காக பெரியாறு பாசனத்தின் பிரதானக் கால்வாயை அடைத்து வேறு திசையில் திருப்பிவிட்டிருந்தனர். இந்த ஆக்கிரமிப்பு பற்றி எந்த அதிகாரிகளுக்கும் பதில் இல்லை என்பதுதான் உண்மை. கிரானைட் குவாரிகளில் களஆய்வுகளை முடித்தபோதுதான் நரபலி புகாரை தோண்ட முடிவெடுத்தார் சகாயம்.

நரபலி புகார்

நரபலி புகார்

கீழவளவு பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்கிற பிரபு கடந்த ஆண்டு, சகாயத்திடம் அளித்த புகாரில் கிரானைட் குவாரிகளில் மனநோயளிகள் பலர் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக புகார் அளிக்கவே, அதனை தோண்ட முடிவு செய்து கடந்த சனிக்கிழமையன்று மேலூரை அடுத்த சின்னமலம்பட்டிக்கு தனது குழுவினரை அழைத்துக்கொண்டு வந்தார். ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரவவே பரபரப்பு பற்றிக்கொண்டது. சேவற்கொடியோன் சொன்ன இடத்தை இப்போது அந்தப் பகுதி மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

இழுத்தடித்த அதிகாரிகள்

இழுத்தடித்த அதிகாரிகள்

சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டப்போவதாக போலீசில் முறைப்படி புகார் அளித்தும் அந்த இடத்துக்கு போலீஸ் உள்பட சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து சேரவில்லை. அதிகாரிகள் வரும்வரை ஏன் சும்மா காத்திருக்கவேண்டும் என்று கருதிய சகாயம், புதுத்தாமரைப்பட்டிக்கு போய் விசாரணை நடத்திவிட்டு மேலும் சின்னமலம்பட்டிக்கு வந்தார்.

உளவு பார்த்த நபர்

உளவு பார்த்த நபர்

சடலம் புதைக்கப்பட்ட இடத்தைத் மர்ம நபர் ஒருபர் செல்போனில் படம் பிடித்து யாருக்கோ போனில் தகவல்களைச் சொன்னார். அந்த நபரை பிடித்த சகாயம் குழு உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்தபோது, தனது பெயர் முருகானந்தம் என்றும் பி.ஆர்.பி நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்துவிட்டு அங்கிருந்து அவரை கீழவளவு காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காவல்துறையோ மீண்டும் பி.ஆர்.வி நிறுவன ஆட்களிடமே அனுப்பிவிட்டனர்.

வராத மருத்துவக்குழு

வராத மருத்துவக்குழு

போலீசாரோ, மருத்துவக்குழுவினரோ வந்து சேரவில்லை. மதியம் மூன்று மணியளவில் கீழவளவு வந்த மருத்துவக் குழுவை அங்கிருந்த எஸ்.ஐ ஒருவர், மேலூருக்கு அழைத்துச் சென்று விட்டாராம். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தமக்கு ஒழுங்காக சப்போர்ட் செய்யவில்லை என்று அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறிவிட்டு, இங்கிருந்து நான் எங்கேயும் நகரமாட்டேன் என்று சுடுகாட்டில் உட்கார்ந்துகொண்டார்.

மின்சார வசதியில்லை

மின்சார வசதியில்லை

சுடுகாட்டில் மின்சார வசதி உட்பட எந்த வசதியும் இல்லை. சகாயத்துக்குப் பாதுகாப்புக்கு வரும் காவலர்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் மெதுவாக அங்கிருந்து போய்விட்டனர். அப்படியே இரவு ஏழு மணி ஆகியும் மின்விளக்கு வசதி இல்லாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஜெனரேட்டர் ஒன்றையும் அதை இயக்க ஆபரேட்டர் ஒருவரையும் மினி லாரியில் அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த கீழவளவு போலீஸ் எஸ்.ஐ அய்யனார், ஜெனரேட்டர் ஆபரேட்டரை அவருடன் விசாரணைக்கு வருமாறு அழைத்துச்சென்றதோடு ஜெனரேட்டரின் முக்கியமான பாகம் ஒன்றையும் கழற்றிக்கொண்டு போய்விட்டார்.

விடிய விடிய காவல்

விடிய விடிய காவல்

இரவில் பிணத்தைத் தோண்டி எடுக்க சதி நடக்கிறது என்று நினைத்த சகாயம், இரவில் அங்கேயே தங்கினார். இருளை விரட்ட பெட்ரோமாக்ஸ் லைட்டை கொண்டுவந்தனர். தாமதமாக வந்த மாவட்ட எஸ்.பி எஸ்.பி விஜயேந்திர பிதாரி, இரவில் பிணக்குழிகளை தோண்ட முடியாது என்பதால் யாரும் வரவில்லை. மற்றபடி போலீஸ் நன்றாகவே ஒத்துழைப்பு தருகிறது என்று கூறிவிட்டு மெதுவாக நடையைக் கட்டினார்.

 இட்லி பார்சல்

இட்லி பார்சல்

இட்லியை பார்சல் வாங்கி வந்து அங்கிருந்தவர்களோடு சாப்பிட்ட சகாயம், நள்ளிரவு வரை தூங்கவே இல்லை. வள்ளி திருமண நாடக வசனத்தைக் கேட்டவாரே தனது குழுவினரிடம் பேசிக்கொண்டிருந்தாராம். இரவு ஒரு மணியளவில் ஆம் ஆத்மி, சட்டப்பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரவே, அவர்களுடன் பேசிக்கொண்டே இரவு மூன்று மணியளவில் பிளாஸ்டிக் கயிற்றுக்கட்டிலில் உறங்கிப் போனார்.

உடனுக்குடன் அப்டேட்

உடனுக்குடன் அப்டேட்

சகாயம் நடத்திய தர்ணாவும், சுடுகாட்டில் சாப்பிட்டது, கட்டிலில் உறங்கியது என உடனுக்குடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் அப்டேட் செய்தனர் அவரது ஆதரவாளர்கள். இதை வைத்து சமூக வலைத்தளங்களில் பெரிய பஞ்சாயத்தே ஓடியது. சப்போர்ட் சகாயம் என்று ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டனர்.

கைகொடுத்த வேப்பங்குச்சி

கைகொடுத்த வேப்பங்குச்சி

ஒரு மணிநேரம் மட்டுமே தூங்கிய சகாயம் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தவர் அங்கிருத்த வேப்பங்குச்சியில் பல் துலக்கினார். இனி எதுவும் தவறாக நடக்காது என்று நினைத்த சகாயம், அங்கிருந்து கிளம்பினார். மறுபடியும் காலை ஒன்பது மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தார். ஒருவழியாக மருத்துவக் குழு சம்பவ இடத்துக்கு வந்ததும் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று கடப்பாரை மண்வெட்டியால் மார்க் செய்த இடத்தைத் தோண்டினார்கள். வரிசையாக எலும்புகள் வரவே அவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேகரித்தனர்.

சி.பி.ஐ விசாரணை கேட்ட பி.ஆர்.பி

சி.பி.ஐ விசாரணை கேட்ட பி.ஆர்.பி

மாலை ஐந்து மணி வரை ஆறு அடி ஆழம் வரை தோண்டினார்கள். அதில் ஒரு சிறு வயது குழந்தை மண்டைஓடு உட்பட நான்கு நபர்களின் மண்டை ஓட்டு எலும்புகளை எடுத்தனர். அவற்றை மதுரை தடய அறிவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து முழுப் பரிசோதனைகள் செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ‘சகாயம் சி.எம் ஆஃப் தமிழ்நாடு' என வரும் செய்திகளை வைத்து, அதற்கு அடித்தளம் அமைப்பது போல செயல்படுகிறார். அதனால் இந்த விஷயத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று ஸ்டண்ட் அடித்தனர் பி.ஆர்.பியின் வழக்கறிஞர்கள்.

பற்றவைத்த பரபரப்பு

பற்றவைத்த பரபரப்பு

பத்து மாதம் கழித்து இப்படி திடீரென நரபலி புகார் மீது கவனம் செலுத்த காரணம் என்ன என்றும் கேள்வி எழாமல் இல்லை. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்போது நரபலி பற்றியும் குறிப்பிடவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் சகாயம் எனவேதான் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முதல்நாளில் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் சகாயம்.

பல ஆயிரம் பக்க அறிக்கை

பல ஆயிரம் பக்க அறிக்கை

பத்துமாதகாலமாக மதுரை கிரானைட் குவாரிகள் பற்றி 20 கட்டமாக ஆய்வு நடத்தில் பல ஆயிரம் பக்க அறிக்கைகளை தயாரித்துள்ளார் சகாயம். மதுரை தொடங்கி தூத்துக்குடி வரை விசாரணை நடத்திய சகாயம், அக்டோபர் 15ம் தேதி அவர் தாககல் செய்யப்போகும் அறிக்கையில் என்னமாதிரியான வெடிகுண்டுகள் வைத்துள்ளாரோ? யார் யார் தலை உருளப்போகிறதோ? ஆனாலும் இதை ஆளுங்கட்சிக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.

சி.பி.ஐக்கு மாற வாய்ப்பு?

சி.பி.ஐக்கு மாற வாய்ப்பு?

அதேநேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கு இந்தப் பிரச்னையை பயன்படுத்துகிறார்' என்று போலீஸ் தரப்பில் புகார் பரப்பப்படுகிறது. நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் நான்கு பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், போலீசாரும், வருவாய்துறையினரும் அவற்றை தோண்ட முன் வரவில்லை. அக்டோபர் 15ம் தேதி சகாயம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கிரானைட் குவாரியில் இருந்து என்னென்ன பூதம் கிளம்ப போகிறதோ? அந்த சகாயத்திற்கே வெளிச்சம்.

English summary
Skeletons of four persons (three men and a child) allegedly killed as human sacrifice and buried by quarry owners were exhumed from the burial ghat near Melur in Madurai, IAS officer U Sagayam, appointed by Madras High Court as Legal Commissioner to probe "illegal granite quarrying" announced that his job was done.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X