
தமிழக போலீசின் கைது நடவடிக்கை... ராஜ்யசபா உரிமை மீறல் குழுவிடம் சசிகலா புஷ்பா தஞ்சம்
சென்னை: பாலியல் புகார் வழக்கு, வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு என்று ஏதாவது ஒரு வழக்கில் சசிகலா புஷ்பாவை ஒருமுறையாவது கைது செய்து விடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது தமிழக காவல்துறை. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடி தடை உத்தரவு பெற்று தப்பித்து வருகிறார் புஷ்பா.
பாலியல் புகார் வழக்கு, வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு என்று மாறி மாறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்கிறார். உயர்நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் உச்சநீதிமன்றம் ஆபத்பாந்தவானாக இருக்கிறது சசிகலா புஷ்பாவிற்கு.

இந்த நிலையில், தமிழக காவல்துறையின் தனக்கு எதிரான நடவடிக்கைக்குறித்து பா.ஜ.க.தலைவர்களிடம் பேசினார் சசிகலா புஷ்பா. அப்போது அவர்கள் வேறு ஒரு புது யோசனை கூறியுள்ளார்களாம்.
அதன்படி ராஜ்யசபாவின் உரிமை மீறல் குழுவின் சேர்மனுக்கு ஒரு கடிதம் தந்துள்ளார் புஷ்பா. அதில் பல விபரங்களை சொல்லியிருக்கிறாராம். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்குள், தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கவிருக்கிறதாம் உரிமை மீறல் குழு.
அதே நேரத்தில் ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடாளுமன்றமே முடக்கப்பட்டு வரும் சூழலில், புஷ்பாவின் கோரிக்கை சாத்தியப்படாது என்கிறது அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம்.