சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியராக இருந்தவருமான ம. நடராசன் சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.
நோய்த் தொற்றின் காரணமாக சென்னை குளோபல் ஹெல்த் சி்ட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி மார்ச் 20ஆம் தேதியன்று அதிகாலை ஒன்று முப்பத்தைந்து மணியளவில் மரணமடைந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
2017ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடராசன், செப்டம்பர் மாதம் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதாக அப்போது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு மாற்று சிறுநீரகமும் கல்லீரலும் பொருத்த முடிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்த 19 வயது இளைஞரான கார்த்தி என்பவரது கல்லீரலும் சிறுநீரகமும் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பொருத்தப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த வி.கே. சசிகலா, அக்டோபர் 12ஆம் தேதியன்று சிறைவிடுப்புப் பெற்று நடராஜனை சந்தித்தார். இதற்குப் பிறகு நவம்பர் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடராஜன், விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில்தான் நோய்த் தொற்று ஏற்பட்டு, மார்ச் 16ஆம் தேதியன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிலைமை மோசமானதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. இருந்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
தற்போது சிறையில் உள்ள சசிகலா, சிறைவிடுப்பு கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடராசனின் உடல் தற்போது பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- யார் இந்த விளாடிமிர் புதின்? சுவாரஸ்ய கேள்விகளும், பதில்களும்
- குறைந்த அளவு விந்தணுக்கள் நோய்களுக்கு வழிவகுக்குமா?
- சாதித்த இளம்படை: 'சாம்பியன்' இந்தியா - 5 முக்கிய அம்சங்கள்
- ராஜிவ் காந்தியின் தோல்வியை ஈடுகட்டுவாரா ராகுல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்