For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும்...ஆனால் முடியாது... உச்ச நீதிமன்றத்தின் 'குழப்பமான' தீர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் தமிழக அரசாணைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இருதரப்பினருமே 'கொண்டாடுகிற' வகையில் குழப்பமானதாக இருக்கிறது.

2006ஆம் ஆண்டு தமிழக அரசு, 'தகுதி படைத்த அனைத்து இந்துக்களும் அர்ச்சகராகலாம்' என்ற அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட உடனேயே இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

SC's balance verdict between right to religion and social reform

அதன் பின்னர் கடந்த 8 ஆண்டுகாலம் நடைபெற்ற வழக்கில் இறுதித் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்; அதே நேரத்தில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகராக முடியும் என்ற ஒரு குழப்பமான தீர்ப்பை அளித்துள்ளது.

"ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; ஆகையால் இந்த தீர்ப்பு கடும் கண்டனத்துக்குரியது" என பெரும்பாலான தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது ஒன்று; அனைத்து ஜாதியினரும் இனி அர்ச்சகராகவே முடியாது என்று மற்றொரு தரப்பும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை வட இந்திய ஊடகங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் அல்லது தங்கள் ''வசதிக்கேற்ப'' புரிந்து கொண்டு இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றன.

இந்த தீர்ப்பு விவரத்துக்குள் செல்வதற்கு முன்னர் 'அனைத்து ஜாதியினர் அச்சகராதல்' என்ற பிரச்சனையின் வரலாற்றை முதலில் பார்க்க வேண்டும்.

  • 1969ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு நபர் கமிஷனாக 'இளைபெருமாள் கமிட்டி' அப்போதைய மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
  • தமிழகத்தைச் சேர்ந்த இளையபெருமாள், முதுபெரும் தலித் சமூக தலைவராவார்.
  • மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட இளையபெருமாள் கமிட்டியில், பாரம்பரியமாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படும் முறையை ஒழித்து கல்வி, பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் ஒன்று.
  • 1970ஆம் ஆண்டு தந்தை பெரியார், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை அறிவித்தார்.
  • இந்த கோரிக்கையை ஏற்று 1970ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல்வராக இருந்த கருணாநிதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்டத்தை தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.
  • இந்த அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து மொத்தம் 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சேஷம்மாள் என்பவரும் ஒருவர். ஆகையால் இவ்வழக்கே இந்திய நீதித்துறையில் சேஷம்மாள் vs தமிழக அரசு என்ற வழக்காக நிலைபெற்றுள்ளது.
  • இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ம் ஆண்டு மார்ச் 14ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.
  • அத்தீர்ப்பில் 2 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்று:
  • "அர்ச்சகரும் கோவிலின் ஊழியர்தான். வாரிசுரிமைப் படியான அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து தமிழக அரசு இயற்றிய சட்டத் திருத்தம் செல்லும். இது மத சார்பற்ற முறையில் அர்ச்சகர் பணி நியமனம் செய்வதற்கான அரசின் நடவடிக்கை இது. இதனை மத நடவடிக்கையாகக் கருத முடியாது.
  • தீர்ப்பின் மற்றொரு அம்சம்:
  • ஆகமங்களின் படி குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகராக முடியும். மேற்படி இனத்தவர்கள் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டாகிவிடும்; இதனைக் கருத்தில் கொண்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறியது. இதனால் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக முடியாத நிலை உருவானது.
  • இத்தீர்ப்பு குறித்து அப்போது கருத்து தெரிவித்த தந்தை பெரியார், ஆபரேசன் சக்சஸ்.. நோயாளி மரணம் என்று விமர்சித்திருந்தார்.
  • இதனைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு வேத ஆகம கல்லூரிகளை திறப்பதாவும் சமூக நீதி அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவர் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
  • 2002ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்தவர் அர்ச்சககராக நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து ஆதித்யன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இது நீதித்துறை வரலாற்றில் ஆதித்யன் வழக்கு என்று நிலை பெற்றுள்ளது.
  • இவ்வழக்கில் அரசியல் சாசனத்தின் 17வது பிரிவின்படி, பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது மனித உரிமைக்கு எதிரானது; தீண்டாமைக் குற்றம் எனக் கூறியதுடன் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும் என்பதை ஏற்க முடியாது எனக் கூறியது. இது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் தீர்ப்பு.
  • 2006ம் ஆண்டு தமிழக அரசு ஆணை
  • இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் 2006ம் ஆண்டு தமிழக அரசு, அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்கும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • இத்தீர்ப்பை எதிர்த்து 1972ம் ஆண்டு சேசம்மாள் வழக்கில் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு தொடர்ந்து உடனே இடைக்கால தடை வாங்கினர்.
  • இறுதித் தீர்ப்பு சொல்வதுதான் என்ன?
  • தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு 1972ம் ஆண்டு தீர்ப்பைப் போல பட்டவர்த்தனமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என சொல்லவில்லை. அதையே பூசிமழுப்பும் வகையில் சொல்லியிருக்கிறது.
  • அதாவது 2006ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணைக்கு எதிராகத்தான் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று தீர்ப்பளிக்கவில்லை. மாறாக அரசாணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோரின் மனுக்களைத்தான் தள்ளுபடி செய்துள்ளது.
  • ஆகையால் 2006ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயிர் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தலாம். அதாவது அனைத்து ஜாதியினரையும் அரசால் அர்ச்சகராக நியமிக்க முடியும்.
  • மேலும் பிறவி அடிப்படையில், ஜாதி அடிப்படையில்தான் நியமனங்கள் இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்கிறது உச்சநீதிமன்றம். அதாவது அரசியல் சாசனத்தின் 17 வது பிரிவை இந்த தீர்ப்பு வழிமொழிகிறது.
  • அதேநேரத்தில் "ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்கள்" நியமன முறை இருக்க வேண்டும். அப்படி அர்ச்சகர்கள் (பிராமணர் அல்லாதார்) நியமனம் செய்யப்படுகிற போது தங்களுடைய உரிமை பாதிக்கப்படும் என அர்ச்சகர்கள் கருதினால் கீழ்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
  • அதாவது தமிழக அரசின் அரசாணைக்கோ அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதற்கோ நாங்கள் தடை விதிக்கவில்லை.. அப்படி நியமிக்கப்பட்டால் நீங்கள் போய் நீதிமன்றத்தில் முறையிட்டுக் கொள்ளுங்கள் என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு. இதனால் ஒவ்வொரு முறையும் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும்போதும், அதை எதிர்த்து கீழ் நீதிமன்றத்தில் புதிது புதிதாக வழக்குகள் தொடரப்படும் சூழல் உருவாகியுள்ளது.
  • இதனால்தான் தற்போதைய தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரை அர்ச்சகராக நியமிக்க முடியும்; அரசு இதனை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் வாதிட்டு வருகின்றனர்.
  • ஆனால் உச்சநீதிமன்றமே, ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்கிறது; பிராமணர்களிலேயே கூட குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்ச்சகராக முடியும்; அனைத்து பிராமணர்களுமே ஆகிவிட முடியாது என்கிற நிலையில் பிற ஜாதியினரை எப்படி அர்ச்சகராக நியமிக்க முடியும்? அது அரசியல் சாசனம் 25,26வது பிரிவு வழங்கியிருக்கும் மத சுதந்திரத்துக்கு எதிரானது என மற்றொரு தரப்பு கூறுகிறது.
  • இதில் மிகவும் வேடிக்கையானது அரசியல் சாசனத்தின் 25,26வது பிரிவின் கீழ்தான் சிறுபான்மை மதத்தினருக்கான உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறபோது, இந்து மதவாதிகள் இந்த அரசியல் சாசனப் பிரிவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்போது அதே மதவாதிகள் இந்த அரசியல் சாசனப் பிரிவின் கீழ் தங்களுக்கு அடைக்கலம் தேடிக் கொள்கின்றனர்.
  • தற்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது 1972ம் ஆண்டு நிலைதான்... ஆபரேசன் சக்சஸ்; நோயாளி மரணம் என்பதாகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும்; அப்படி நியமித்தால் பிராமண அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்கிறது தீர்ப்பு.
  • அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் நிச்சயம் அதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு போகும்போது, அரசியல் சாசனத்தின் 25,26வது பிரிவுகள், 1972ம் ஆண்டு சேஷம்மாள் வழக்கு தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 'தடை' விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்கப்பட்டப்படுகிறது.
  • அரசியல் சாசனத்தின் 25,26வது பிரிவுகளில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் மட்டுமே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது உச்ச நீதிமன்றத்தின் இந்த 'சர்ச்சை' தீர்ப்பு.
English summary
The Supreme court said that temple priests should be appointed as per Agamas. It also said that such appointments in accordance with Agamas do not violate the right of equality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X