சென்னையில் காலையிலிருந்து விட்டு விட்டு வெளுத்த மழை.. பரிதவித்த மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழையாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

பள்ளி மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளார். பல சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. பள்ளி வாகனங்களும் சாலைக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

School students affected in rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் வட கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் கடந்த செவ்வாய்கிழமை முதலே பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று பகல் முழுவதும் மழை பெய்யாத காரணத்தால் மழை நீர் வெளியேற்றப்பட்டது. ஒருவார கால விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆயத்தமான நிலையில் காலை முதலே பலத்த மழை பெய்தது. மழையில் நனைந்து கொண்டேதான் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். மாலை வரை சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் மாலையில் வீடு திரும்பும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பள்ளி பேருந்துகள், வேன்கள், ஆட்டோக்களில் வீடு திரும்பியவர்களும், நடந்து சென்றவர்களும் நனைந்து கொண்டே வீடு திரும்பினர்.

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து கேரளாவின் தெற்கு பகுதியையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடலில் மேலடுக்கு சுழற்சியாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரலவமாக மழை பெய்துள்ளது.

இதனிடையே அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை பொறுத்தவரையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். மழையை பொறுத்தே பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
School were reopened in Chennai after a six day break due to rain but the students were affected in today's rain since morning.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற