For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி பற்றி பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?... தமிழிசைக்கு சீமான் சவால்!

ஜிஎஸ்டி குறித்து பொது மேடையில் விவாதிக்க தமிழிசை தயாரா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகாவில் மெர்சல் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு வரை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்திற்குக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, அப்படத்தின் வசனத்தை நீக்கக்கோருவதையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய தம்பி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கிற மெர்சல் திரைப்படத்தைக் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்பினரும், அப்படத்தில் வரும் வசனத்திற்காகப் பாஜக மற்றும் சில மதவாத அமைப்புகளும் எதிர்ப்புணர்வோடு அணுகுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கர்நாடக மாநிலத்தில் இத்திரைப்படம் வெளியான திரையரங்குகளில் நடைபெற்ற கலவரங்களைக் காணும்போது தமிழர்களுக்கு எதிரான இனவெறி பொழுது போக்கு திரைப்படம் வரை பாய்ந்திருப்பதை உணர முடிகிறது. ஏற்கனவே, காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சத்தில் இருக்கும் காலத்திலெல்லாம் தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகள் கர்நாடகாவில் சேதப்படுத்தப்படுவதும், திரைப்படம் காண வருகிற தமிழர்கள் தாக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்தேறிவரும் வன்முறை வெறியாட்டங்கள்தான் என்றாலும், அண்ணன் சத்தியராஜ் நடித்தததற்காகப் பாகுபலிக்கு நிறுத்த முற்பட்டதும், காரணமின்றி இப்பொழுது மெர்சல் படத்தை நிறுத்த முற்பட்டிருப்பதும் இனவெறியின் உச்சம் .

 ஏன் இத்தனை சிக்கல்?

ஏன் இத்தனை சிக்கல்?

ஆங்கிலப்படங்கள், சீனப்படங்கள் எல்லாம் எந்தத் தடையுமின்றி இந்தியா முழுக்க ஒரே நாளில் வெளியிடப்பட முடிகிறது. ஆனால், அண்டை மாநிலத்தில் ஒரு தமிழ்ப்படம் வெளியாக இத்தனை சிக்கல் உருவாகிறதென்றால் இது ஒரே நாடு நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் என்ற முழக்கங்கள் எல்லாம் வெற்று முழக்கங்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. "தமிழர் நாட்டைத் தமிழர் ஆள்வோம்" என்ற தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமையை முழக்கமாக நாங்கள் முன்வைக்கும் பொழுது அலறித்துடித்து இனவாதம், தூய்மைவாதம் என்று எங்களுக்குப் பாடம் எடுக்கும் அறிஞர் பெருமக்கள், ஒரு படத்தைக் கூட ஓடவிடாமல் தடுக்கும் இந்தச் செயலுக்கு வாய் மூடி மெளனமாக இருப்பதேன்? அதென்ன எப்பொழுதும் இனப்பிரச்சனை வரும்போதெல்லாம் தமிழர்களுக்கென்றால் ஒரு நியாயம் மற்றவர்களுக்கென்றால் ஒரு நியாயம் இங்கே வழங்கப்படுகிறது.

 ஜனநாயகத்திற்கு எதிரானது

ஜனநாயகத்திற்கு எதிரானது

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து அப்படத்தில் வரும் வசனங்களை நீக்க வேண்டுமெனத் தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியிருக்கிற கருத்துகள் நகைப்புக்குரியதாகவும், அறிவுக்கொவ்வாத வகையிலும் இருக்கிறது. தங்களுக்கு எதிராக யாரும் எதையும் பேசிவிடக்கூடாது என்று தடுப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல அடிப்படை கருத்துரிமைக்கு எதிரானது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையினாலும், பண மதிப்பிழப்பினாலும்தான் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவினை இந்தியா சந்தித்திருக்கிறது என்று உலக வங்கியின் தெற்கு ஆசிய பொருளாதார நோக்கம் என்ற தலைப்பில் வெளியான அறிக்கை சொல்கிறது.

 ஜிஎஸ்டியால் பாதிப்பில்லை என்பதா?

ஜிஎஸ்டியால் பாதிப்பில்லை என்பதா?

சிறு வணிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஜி.எஸ்.டி. வரியினைக் குறைப்போம் என்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அப்படியானால், இவ்வரிவிதிப்பு முறை சிறு குறுந்தொழில் செய்யும் வனிகர்களைப் பாதித்திருக்கிறது என்றுதானே பொருள்? மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்குக்கூட 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரிவிதித்துவிட்டு ஜி.எஸ்.டி.யால் மக்களுக்குப் பாதிப்பில்லை என்று கூறுவது அபத்தமாக இல்லையா? ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாதான் 28 விழுக்காட்டை வசூலிக்கிறது.

 யாரிடம் பதில் உள்ளது

யாரிடம் பதில் உள்ளது

இவ்வளவு வரியை மக்களிடமிருந்து வசூலிக்கும் மத்திய அரசு மக்களுக்கு எந்த வகையில் அதனைத் திருப்பித் தரும் என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு? திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிற ஒற்றைவரி வசனத்தால் சினமுறும் தமிழிசை, ஜி.எஸ்.டி., பணப்பதிப்பிழப்பு போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையால் மோடியும், அருண் ஜெட்லியும் இந்தியாவின் பொருளாதாரத்தைச் சவக்குழியில் தள்ளி விட்டார்கள் என்ற பாஜக தலைவர் யஷ்வந் சின்காவின் பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறார்?

 தமிழிசைக்கு சவால்

தமிழிசைக்கு சவால்

நாட்டின் வளர்ச்சியை முடக்கிப்போடும் பிழையான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றக்கோராமல் மெர்சல் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்தான ஒரு பொது விவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள்! மக்கள் முன் ஜி.எஸ்.டி குறித்தான குளறுபடிகளைத் தீமையை ஆதாரத்துடன் நான் பட்டியலிடுகிறேன். நீங்கள் நன்மைகளைப் பட்டியலிடுங்கள். மக்கள் தீர்ப்பெழுதட்டும்.

நாட்டின் முதன்மை அமைச்சரிலிருந்து கடைக்கோடி குடிமகன்வரை அனைவருக்கும் சரியான சமமான இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் அளிக்கப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்; அரசுப் பள்ளிக்கூடங்களிலேயே தங்களது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் எனவும் பல்வேறு மேடைகளிலும், நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரையிலும் நாங்கள் முன்வைத்தக்கருத்துகள் தான் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது .

 கர்நாடக வன்முறைக்கு கண்டனம்

கர்நாடக வன்முறைக்கு கண்டனம்

டெங்குவால் மரணங்கள் நிகழும் இந்நேரத்தில் தரமான இலவச மருத்துவத்தின் தேவையை வலியுறுத்தி வந்திருக்கிற மெர்சல் திரைப்படம் உலகம் முழுக்கத் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் மட்டும் அத்திரைப்படத்திற்கு எதிராக வன்முறை நிகழ்ந்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசை வலியுறுத்துகிறது.

 விஜய்க்கு வாழ்த்து

விஜய்க்கு வாழ்த்து

தடைகள் பல தாண்டி வெளிவந்திருக்கும் மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அன்பிற்குரிய தம்பி விஜய், இயக்குனர் தம்பி அட்லீ மற்றும் இப்படத்தை உருவாக்க உழைத்திட்ட அனைத்து படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Thamizhar party organiser Seeman has dared Tamilsai for a debate on GST. He has also condemned the attack on Vijay fans in Banagalore and Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X