For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கும், ஏழு பேர் விடுதலையும்... என்ன தான் விரும்புகிறார் ஜெயலலிதா?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து விட்டது.

பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்து விட்டதாக தெரிவிக்கிறார் மாநில தலைமை செயலாளார் கே.ஞானதேசிகன்.

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த எழுவரும் ஏற்கனவே 24 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டார்கள், இவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு விண்ணப்பங்களைக் கொடுத்திருக்கிறார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435 ன் கீழ், மத்திய சட்டங்களின் கீழ் கைது செய்யப் பட்டவர்களையும், மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளிலும் தண்டிக்கப் பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமானால், அதற்கு மத்திய அரசின் அனுமதி அவசியம். ராஜீவ் வழக்கை விசாரித்தது சிபிஐ, இவர்கள் தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப் பட்டவர்கள் என்பதனால் மத்திய அரசின் அனுமதியை மாநில அரசு நாடியிருக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி, 2014 ல் இந்த எழுவரையும் இதே போன்று விடுதலை செய்ய ஜெயலலிதா முயற்சி செய்தார். இதற்காக அப்போதய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதினார். பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை, அவர்களது கருணை மனுக்களை பரீசீலனை செய்து தள்ளுபடி செய்ய நீண்ட காலத்தை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டார். இந்த காலதாமதத்தினால் அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அப்போதய உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. மேலும் நீண்ட காலம் இவர்கள் சிறையில் கழித்து விட்டதால், இவர்களது விடுதலையை குறித்து 'உரிய அரசுகள்' முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

Seven Tamils release issue and Jayalalithaa

அது மக்களவை தேர்தல்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முந்தய காலம். தேர்தல் மேகங்கள் கவியத் துவங்கியிருந்த நேரம். திடீரென்று வாராது போல வந்த மாமணியான இந்த வாய்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அப்போது தமிழக சட்டசபை கூட்டத் தொடரும் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று சட்டமன்றத்தில் காலையில் அவை கூடியதும் ஒரு அறிக்கையை ஜெயலலிதா வாசித்தார். அதில் ராஜீவ் கொலையாளிகள் எழுவரையும் விடுதலை செய்ய தன்னுடைய அரசு முடிவு செய்து விட்டதாகவும், இந்த முடிவு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தப் பட்டுவிட்டதாகவும் கூறினார். மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தன்னுடைய முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லா விட்டால், தமிழக அரசே இவர்களை விடுதலை செய்து விடுமென்றும் கூறியிருந்தார்.

இதில் பதறிப் போன மத்திய அரசு உடனடியாக இந்தக் கடிதத்திற்கு எதிராக, தமிழக அரசு எழுவரையும் விடுதலை செய்ய தடை கோரி உச்ச நீதிமன்றத்திற்கு ஓடியது. சுதந்திர இந்தியா வின் வரலாற்றில் ஒரு மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதி மன்றத்திற்குப் போனது இதுதான் முதல் முறை என்றும் அப்போது பேசப் பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதில் ஏராளமான சட்ட மற்றும் அரசியல சாசன சிக்கல்கள் இருப்பதால் இதனை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பியது. அரசியல் சாசன அமர்வு ஏழு விஷயங்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கேட்டுக் கொண்டது.

இதில் முக்கியமானவை

(அ) மத்திய சட்டங்களின் கீழ் நடத்தப்பட்ட வழக்குகளிலும், மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டா?

(ஆ) அவ்வாறு விடுவிக்கும் போது மத்திய அரசின் சம்மதம் என்பது மாநில அரசைப் பொறுத்த வரையில் வெறும் ‘ஆலோசனை' அதாவது consultation என்பது தானா அல்லது ‘சம்மதம்' அதாவது concurrence வேண்டுமா?

(இ) உரிய அரசு என்று நீதிபதி சதாசிவம் சொன்னதன்படி இதில் உரிய அரசு எது, மாநில அரசா அல்லது மத்திய அரசா?

(ஈ) ஒருவரது கருணை மனுவை ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ நிராகரித்து விட்டால் மீண்டும் அவரது மனுவைப் பரீசீலித்து அவருக்கு விடுதலை வழங்கும் அதிகாரம் உள்ளதா?

(உ) கருணை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு அதாவது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்ட ஒருவரை சிறப்பு பிரிவினராக கருதி அவருக்கு மேலும் எந்த சலுகையும் காட்டக் கூடாதென்று இருக்கிறதா? என்பது உள்ளிட்ட ஏழு விஷயங்களை எழுப்பியது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச் எல் தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு டிசம்பர் 2 ம் தேதி கொடுத்த தீர்ப்பில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விட்டது. குறிப்பாக மத்திய சட்டங்களின் கீழ் கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது, ஆலோசனை என்பதன் பொருள் சம்மதம் என்பதுதான் என்று தீர்ப்பளித்தது. மேலும் எந்த ஓர் கைதியையும் எப்போது வேண்டுமானாலும் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 72 கீழும், ஆளுநருக்கு 161 ன் கீழூம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அப்படியேதான உள்ளன என்றும் கூறிவிட்டது.

இந்தப் பின் புலத்தில்தான் ஜெயலலிதா அரசு நேற்று எழுதியுள்ள கடிதத்தைப் பார்க்க வேண்டும். எழுவரின் விடுதலையை மன்மோகன் சிங் அரசு எதிர்த்ததை விட மூர்க்கமாக நரேந்திர மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்தது. அப்படியிருக்கையில் அதே மத்திய அரசிடம் போய் மீண்டும் அனுமதியை கோருகிறார் ஜெயலலிதா. மத்திய அரசு அனுமதி கொடுக்காதென்று தெரிந்துமே மீண்டும் போய் அனுமதி கேட்பது ஏன்?

இதில் மற்றோர் முக்கியமான விஷயம் 2014 பிப்ரவரியில் மத்திய அரசு தாக்கல் அந்த மூல வழக்கு, அதாவது மெயின் ரிட் மனு மூன்று நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளது. எழுவர் விடுதலையை பற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டியது இந்த அமர்வுதான். இதுவரையில் இந்த அமர்வுக்கு நீதிபதிகள் நியமிக்கப் படவில்லை. இந்த அமர்வை ஏற்படுத்தும்படி ஜெயலலிதா அரசும் இதுவரையில் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை. மேலும் நேற்றைய கடிதத்தில் ஹெச் எல் தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராக தாங்கள் மறு ஆய்வு செய்யும் அதிகாரம் இன்னமும் தமிழக அரசுக்கு இருப்பதாகவும் தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். ஆகவே மூன்று நீதிபதிகள் அமர்வில் விவகாரம் நிலுவையில் இருக்கையில் எழுவரை விடுதலை செய்ய நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று தமிழக அரசு கூறுவது ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காகவும் மாறலாம் என்றும் கருதப் படுகிறது.

இந்த விஷயத்தை இதன் உஷ்ணம் குறையாமல் அப்படியே வைத்திருக்க விரும்புகிறார் ஜெயலலிதா என்றுதான் தோன்றுகிறது. இப்போது இந்த விவகாரத்தை மீண்டும் மக்கள் மன்றத்தில், அரசியல் தளத்தில் அவர் எடுத்து வைத்திருக்கிறார், விரைவில் விவகாரம் பற்றியெரிய ஆரம்பிக்கும். கண்டிப்பாக அப்போது ஒவ்வோர் கட்சியும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தே ஆக வேண்டிய கட்டாயம் வரும். குறிப்பாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் வரலாம். தேர்தல் நேரத்தில் இது அதிகப்படியான சங்கடத்தை இரண்டு கட்சிகளுக்குமே கொடுக்கும். தேர்தல் பரப்புரையில் அப்போது இரண்டு கட்சிகளின் முரண்பாட்டை நார் நாராக ஜெயலலிதா கிழித்து எறியப் போகிறார்.

பாஜக வுக்கும் இது ஜெயலலிதா வைத்திருக்கும் செக் தான். காரணம் இதில் தமிழக பாஜக ஒரு நிலைப்பாட்டையும், மத்திய தலைமை ஒரு நிலைப் பாட்டையும் எடுக்க முடியாது. மத்திய அரசு தன்னுடைய கோரிக்கையை மறுதளிக்கும் போது, ஜெயலலிதா பாஜக வையும் தன்னுடையை தேர்தல் பரப்புரைகளில் வறுத்தெடுக்கப் போகிறார்.

2011 ம் ஆண்டு மூன்றாவது முறையாக பதவியேற்றதிலிருந்து ஜெயலலிதா இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எடுத்து வரும் நிலைப்பாட்டை பார்த்தால் அவரது அரசின் நேற்றைய கடிதத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த முறை முதலமைச்சாரனவுடனேயே இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கோரி சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். மொத்தம் இரண்டு முறை இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கோரி தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் ஆகஸ்ட் 2011 ல் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தனை தூக்கில் போட அப்போதய மத்திய அரசு முயற்சித்த போது அதற்கு எதிராகவும், அவர்களது விடுதலை கோரியும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்த மூலையில் பயிற்சி கொடுத்தாலும் அதனை கடுமையாக எதிர்த்தார். சென்னை தாம்பரத்திலும், ஊட்டி வெலிங்கடனிலும் பயிற்சிக்கு வந்த இலங்கை ராணுவத்தினர் பாதியிலேயே ஜெயலலிதா வின் கடுமையான எதிர்ப்பால் திருப்பி அனுப்பபட்டனர். தமிழகத்திற்கு கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்காக வந்த 14 வயதுக்குட்பட்ட இலங்கை சிறுவர் அணி திருப்பி அனுப்பபட்டது. இலங்கையிலிருந்து வந்த யாத்திரீகர்கள் குழு, இதில் சில யாழ்பாண தமிழர்களும் அடக்கம், திருப்பியனுப்பபட்டனர். இலங்கையுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் மட்டுமல்ல, அந்த நாட்டுடன் எந்த விதமான கலாச்சார மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமான உறவுகளும் கூட தமிழகத்திற்கும், ஏன் இந்தியாவுக்கும் கூட இருக்கக் கூடாதென்பதுதான் ஜெயலலிதா அரசின் கொள்கையாக கடந்த ஐந்தாண்டுகளாக இருந்து வருகிறது.

இது கடந்த கால ஜெயலலிதாவின் செயற் பாடுகளுக்கு முற்றிலும் முரணானது. 1991 முதல் 1996 ஆண்டு தனது முதல் ஆட்சிக் காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக மிக கடுமையான எதிர்ப்பைக் காட்டியவர் ஜெயலலிதா.

1993 ல் சென்னையை அடுத்த மாமண்டூரில் இரண்டு விடுதலை புலிகள் காவலில் இருந்து தப்பியபோது, இது மத்திய அரசின் சதி என்றும் (இதில் ஒருவர் பெயர் விக்டர்) தனது உயிருக்கு உலை வைக்கும் சதி வேலை இது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

2002 ம் ஆண்டு ஏப்ரல் 10 ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது சென்னையிலிருந்தும் சில பத்திரிகையாளர்கள் இதற்காக இலங்கையின் கிளிநொச்சிக்குச் சென்றனர். அதற்கடுத்த நாள் முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு பேட்டிக் கொடுத்தார். ‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரை கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட ஒருவர் கூட்டியிருக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களை நினைத்து நான் வெட்கப் படுகிறேன்', என்றார்.

மேலும் ‘பிரபாகரனை இந்தியாவுக்கு உயிருடம் பிடித்து வர இந்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். பல்லாயிரக் கானோர் கொல்லப் படுவதற்கு காரணமான, குற்றவாளியென்று இந்திய நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட ஒருவரை பெரிய ஹீரோவாக மீடியாக்கள் சித்தரிப்பது அதிர்ச்சிகரத்தக்க அவமானம். இந்தியாவில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் செய்தவற்றை யாரும் மறந்து விட முடியாது. கடந்த காலத்தை மறந்து விடவேண்டும் என்று பிரபாகரன் சொல்லுகிறார். எப்படி மறப்பது? தன்னுடைய குற்றங்களுக்கான உரிய தண்டனையை பிரபாகரன் பெற்றே தீர வேண்டும்,' என்றார் ஜெயலலிதா.

மேலும், விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆண்டன் பாலசிங்கம் அப்போது சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்கு வர வேண்டும் என்று விரும்பிய போது, இதற்கு மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் அனுமதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அவர், ‘உலகில் வேறு எத்தனையோ இடங்கள் இதற்கு இருக்கின்றன. விடுதலைப் புலிகள் தமிழகத்தில் கால் வைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்,' என்றார்.

2009 ஜனவரியில் இலங்கை போர் உச்ச கட்டத்தில் இருக்கும் போது ‘போர் என்றால் பலரும் சாகத்தான் செய்வார்கள்,' என்றுதான் முதலில் கூறினார் ஜெயலலிதா.
ஆனால் மூன்றே மாதங்களில் அப்படியே பல்டி அடித்தார். 2009 மக்களவைத் தேர்தலின் போது தனது பரப்புரையில் அஇஅதிமுக ஆதரவிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்து தனி ஈழத்தை அமைத்து தருவேன் என்றே தெருத்தெருவாக முழங்கினார்.

2011 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இலங்கை தமிழர் விவகாரத்தில் தான் மட்டுமே அவர்களின் ஒரே பாதுகாவலன் என்ற பிம்பத்தை திட்டமிட்டு ஜெயலலிதா கட்டமைத்துக் கொண்டது முக்கியமானது. இது மேலே விவரித்த அவரது கடந்த கால வரலாற்றுடன் ஒப்பிட்டால் மிகவும் சுவாரஸ்யமானது. ஆகவே இந்த பின்புலத்தில்தான் ஜெயலலிதா வின் நேற்றைய முடிவை நாம் விருப்பு, வெறுப்பிலாமல் ஆராய வேண்டும்.

சரி. இனி என்ன நடக்கப் போகிறது? ஒன்றும் நடக்காது.

இப்போதைக்கு. 2014 ல் மன்மோஹன் சிங் அரசுக்கு எழுதிய கடிதத்தைப் போல் கெடு நிர்ணயித்து இந்த முறை ஜெயலலிதா கடிதம் எழுதவில்லை. ஆகவே மத்திய அரசு இந்தக் கடிதத்தை அப்படியே கிடப்பில் போடலாம். இதற்குத்தான் வாயப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இன்று நாடாளுமன்றத்தில் இது பற்றிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விஷயத்தில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப் படும் என்று கூறிவிட்டார்.

உண்மையிலேயே இந்த எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினால் ஆளுநருக்கு இருக்கும் அரசியல் சாசன அதிகாரமான பிரிவு 161 ன் கீழ் மாநில அரசே இவர்களை விடுதலை செய்து விடலாம். ஏனெனில் ஹெச் எல் தத்து தலைமையிலான அரசியில் சாசன அமர்வு தெளிவாகவே இந்த அதிகாரத்தில் தாங்கள் தலையிடவில்லை என்றே கூறிவிட்டது. ஆகவே அதனை பயன்படுத்தாமல் மத்திய அரசின் முடிவு தெரிந்தும் ஜெயலலிதா மீண்டும் பழைய அணுகுமுறையையே கையில் எடுத்திருப்பது முக்கியமானது.

தன்னுடைய அரசு எழுவரையும் விடுதலை செய்ய முடிவு செய்து விட்டதென்ற நிலைப்பாட்டை இந்த தேர்தல் காலத்தில் ஜெயலலிதா பொது வெளியில் வைக்கிறார். இது பட்டவர்த்தனமான ஓர் அரசியல் முடிவுதான். மத்திய அரசின் முடிவு தெரிந்த பின் - அது எப்போது வேண்டுமானாலும் வரலாம் அல்லது ஜெயலலிதா வெளியில் சொல்லாத ஒரு காலக் கெடுவை வைத்திருக்கலாம்தான் - ஜெயலலிதா 161 ன் கீழ் இவர்களை விடுதலை செய்து விடலாம். ஜெயலலிதாவின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது இது போன்ற அதிரடியான அரசியல் முடிவுகள் அவருக்கு கைவந்த கலைதான்.

ஆனால் நிச்சயம் அந்த முடிவு அரசியல்ரீதியாக ஜெயலலிதா வுக்கும், அஇஅதிமுக வுக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கும். நாடு தழுவிய அளவிலும் அந்த முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தத்தான் செய்யும். அந்த முடிவை இந்த தேர்தல் அறிவிக்கை வருவதற்குள் ஜெயலலிதா எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான். எழுவர் விடுதலை பற்றிய முடிவை ஜெயலலிதா எடுப்பதென்பது அடிப்படையில் ஒரு சட்டரீதியான முடிவல்ல. மாறாக அது அரசியல்ரீதியிலான, கடுமையானதோர் அரசியல் முடிவு.

இந்திய அரசமைப்பு இயந்திரம் கட்டமைப்பு ரீதியாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலையை ஆக்கிரோஷமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. இது மன்மோகன் சிங், நரேந்திர மோடி அல்லது நாளைக்கு வேறெவராவது பிரதமராக வந்தாலும் நிரந்தரமானது. மாற்றம் இல்லாதது. ஆகவே இந்த வல்லாண்மை மிக்க எதிர்ப்பையும் மீறி, எழுவரின் விடுதலையை ஜெயலலிதா வால் சாதிக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

'உண்மையில் எழுவரின் விடுதலையை ஜெயலலிதா விரும்பவில்லை. மாறாக இவையெல்லாமே தேர்தல் காலத்து வாக்கு வங்கி அரசியல்தானோ' என்ற பார்வையும் சுலபத்தில் ஒதுக்கித் தள்ள முடியாத கோணம்தான்.

அல்லது ஜெயலலிதா 161 விதியை பயன்படுத்தி எழுவரின் விடுதலையை சாதிக்கவும் செய்யலாம். எது ஒன்றும் நடக்கும் வரையிலும் எழுவரின் விடுதலையில் ஜெயலலிதா என்னதான் விரும்புகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

English summary
R Mani's article analyzing the releasing of Seven Tamils in Rajiv Gandhi assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X