For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகை-போதை பாக்கு விவகாரம்: ராஜஸ்தான் அரசை தமிழக அரசு பின்பற்றலாமே- ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பாக்கு பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்கும் நோக்குடன் ராஜஸ்தான் அறிவித்துள்ள திட்டத்தை இன்னும் கடுமையான ஒழுங்கு முறைகளுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றவும், உடல்நலனைக் கெடுக்கும் தீய பழக்க வழக்கங்களில் இருந்து அவர்களை மீட்கவும் உன்னதமான திட்டம் ஒன்றை ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்திருக்கிறது.

போதைப்பாக்கு மற்றும் புகைப் பிடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது என்பது தான் அத்திட்டம் ஆகும். இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பணிகளில் சேருபவர்கள், தாங்கள் பணியில் இருக்கும் காலத்தில் போதைப் பாக்குகளை மெல்லுதல், புகைப்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அரசுக்கு உத்தரவாதக் கடிதம் எழுதித் தர வேண்டும்.

இந்த உத்தரவாதத்தை மீறும் அரசு ஊழியர்களுக்கு தொடக்கத்தில் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும்; தொடர்ந்து இதே தவறுகளை செய்பவர்கள் அரசு பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். தொடக்கத்தில் எவ்வளவு அபராதம் விதிப்பது? எத்தனை முறை தவறு செய்தால் பணி நீக்கம் செய்வது என்பது குறித்தெல்லாம் விரைவில் நடைபெறவிருக்கும் புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

அரசு பணிகளில் சேருபவர்கள் புகை மற்றும் போதைப்பாக்குப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே இது தான் முதல் முறையாகும்.

அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் புகைப்பிடிக்காமலும், போதைப் பாக்குகளை மெல்லாமலும் இருக்கிறார்களா? என்பதைக் கண்காணிப்பது மிகவும் கடினமானது; புகைப் பழக்கத்திற்கும், போதைப்பாக்கு பழக்கத்திற்கும் ஆளாவர்கள் அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வசதிகள் அரசுத் தரப்பில் இருந்து ஏற்படுத்தி தரப்படவில்லை என்ற போதிலும் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ராஜஸ்தான் அரசின் இந்த புதிய முயற்சியை மனதார வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

அதேநேரத்தில் தமிழகத்தில் காணப்படும் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தார். 02.10.2008 அன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் தடை உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது.

ஆனால், இப்போது பொது வெளிகளில் நடமாடும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றவர்கள் விடும் புகையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக முதல்-அமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி ராமதாசு பலமுறை கடிதம் எழுதி, எனது தலைமையில் பல போராட்டங்கள் நடத்திய பிறகுதான், கடந்த மே மாதத்தில் குட்கா மற்றும் போதைப் பாக்குகளுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் தடை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் போதைப் பாக்குகள் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. புகைப் பிடிப்பதால் மட்டும் தமிழகத்தில் ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர். வாய் புற்றுநோயின் தலைநகராக சென்னை உருவெடுத்திருக்கிறது

பொது இடங்களில் புகைப்பிடிப்பதையும், போதைப் பாக்குகளின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பாக்கு பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்கும் நோக்குடன் ராஜஸ்தான் அறிவித்துள்ள திட்டத்தை இன்னும் கடுமையான ஒழுங்கு முறைகளுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss told that TN government can follow Rajasthan government's action to curb the habit of smoking and chewing pan among youngsters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X