For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 கண்டெய்னர்களில் சிக்கியது ரூ. 5000 கோடியாக இருக்கும்.. மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: திருப்பூரில் 3 கண்டெய்னர்களில் பிடிபட்டது ரூ. 570 கோடி அல்ல, மாறாக ரூ. 5000 கோடி பணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. இது யாருடைய பணம், யாருடைய கருப்புப் பணம் என்பது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் நடந்த திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திருமண விழாக்களில் அரசியல் பேசுவது முறையாக இருக்காது. ஆனால் இது கழக திருமணம் என்ற உரிமையோடு தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பேசியவர்கள் எடுத்து சொன்னார்கள். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் எந்த முடிவை தந்திருக்கிறது. தமிழக மக்கள் தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும், 6-வது முறையாக தலைவர் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்பார் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.

Stalin comments on Rs 570 crore issue

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமில்லாமல் உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த முடிவைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. தோல்வி ஏற்பட்டால் தி.மு.கழகம் சோர்ந்து போய் முடங்கி போகவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாவிட்டாலும் கம்பீரமாக எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து இருக்கிறது.

1971-ம் ஆண்டு தி.மு.க. 184 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதைபோல இப்போது அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்ற எதிர்க்கட்சி என்ற பெருமையும் நமக்குதான் உண்டு. வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் நாட்டு மக்களுக்காக உழைப்பதுதான் நமது கடமை என்று தி.மு.க. தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் திருவாரூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் கலைஞர், இந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மே-16ம் தேதி தேர்தல் முடிந்து 19ம் தேதி காலை 8 மணிக்கு தி.மு.க. முன்னணியில் இருப்பதாக செய்திகள் வந்தது. சிறிது நேரம் கழித்து சரிசமமாக வரும் சூழ்நிலை ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பே காலை 10.30 மணியில் இருந்து 11 மணிக்குள் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அங்கேதான் சதித்திட்டம் உருவாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாக 13ம் தேதி திருப்பூரில் நடந்த சோதனையில் கண்டெய்னர் லாரியில் ரூ. 570 கோடி பிடிபட்டதாக தகவல் வந்தது. அது ரூ.570 கோடி அல்ல ரூ. 5 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

திருப்பூரில் பிடிபட்ட பணத்தை ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்பட்டது. அந்த பணம் யார் பணம், யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்று தெரியவில்லை. 18 மணி நேரம் கழித்து மத்திய அமைச்சர் அது ரிசர்வ் வங்கி பணம் என்று சொன்னதாக செய்தி வருகிறது. அங்கேதான் மர்மம் இருக்கிறது, ரகசியம் இருக்கிறது, சந்தேகப்படுகிறோம்.

இதுகுறித்து தலைவர் கலைஞர் அறிவுரைப்படி டி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மனு கொடுத்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 தினங்களுக்கு முன்பு ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக போலீஸ் துறையை நம்ப முடியவில்லை. இந்த ஆட்சியை நம்ப முடியவில்லை என்று தான் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைவிட இந்த ஆட்சிக்கு கேவலம் இருக்க முடியாது. 3 மாதத்தில் சி.பி.ஐ. விசாரணையில் உண்மை வெளிவரும். யாருடைய பணம் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். இந்த ஆளுங்கட்சியினர் ஆந்திராவிற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ அனுப்பிய கருப்பு பணம் என்பது விசாரணையில் தெரியவரும். இந்த உண்மையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

English summary
DMK leader MK Stalin has said that the captured amount from the 3 containers in Tirupur may be Rs 5000 crore, not Rs 570 cr.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X