For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 16 ஆம் தேதி நடைபெறும் பிரதமர் தலைமையிலான மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று மாநிலங்களுக்கு இடையிலான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் 11 ஆவது கூட்டம் வருகின்ற ஜூலை 16 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலின் தலைவராக பிரதமரும், அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களுமாக இருப்பதால், மாநிலங்களுக்கு இடையிலான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய முக்கியத் திட்டங்கள் குறித்தும் பேசுவதற்கு இக்கூட்டம் ஒரு அரிய சந்தர்ப்பமாக இருக்கும்.

stalin statement about Council meeting

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்டது என்பதும்; அவருடைய தலைமையில் அமைந்த தேசிய முன்னணியில் திமுகவும் பங்குபெற்றிருந்தது என்பதும் வரலாறு.

தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களுடன் பேசித் தீர்வு காண வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. காவிரி நதிநீர் இறுதித் தீர்ப்பு 19.2.2013 அன்றே அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் இன்னும் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. கர்நாடக மாநில அரசும் இதற்கு இன்னும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்பாசனத்திற்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்க முடியவில்லை. காவிரி இறுதி தீர்ப்பிற்கு புறம்பாக புதிய அணை கட்டும் முயற்சிகளிலும் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கவலையளிப்பதாக இருக்கிறது.

புதிய அணை கட்டும் கேரளாவின் விருப்பத்தை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த பிறகும், முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிடவில்லை. அதே போல் முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 152 அடியாக உயர்த்துவதும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை ஈவு இரக்கமின்றி தடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்கான 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை இதுவரை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு இடையில் தமிழகத்திற்குள்ள பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் கலந்து பேசுவதற்கு இந்த மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் பேருதவியாக அமையும்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவால் தமிழகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்துப் பேசுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். ஏனென்றால் முதல்வர் ஜெயலலிதா சென்ற 22.8.2011 அன்றே அனைத்து காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி 'மாநிலத்தின் நிதி சுதந்திரத்தை பாதுகாக்க ஓரணியில் நிற்போம்' என்று கடிதம் எழுதியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆகவே அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் தமிழகத்தின் வருவாய் இழப்பு பற்றி ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்து தமிழகத்தின் நலனைக் காப்பாற்ற இக்கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது தவிர, பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவு, தேங்கிக் கிடக்கும் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள், சிறப்புத் திட்டங்களுக்கு மாநில அரசு கோரியுள்ள நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் அனைவரையும் ஓரிடத்தில் சந்தித்துப் பேசுவதற்கு இந்த கூட்டம் பயன்படும்.

தற்போது அதிமுகவிற்கோ இரு அவையிலும் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆகவே, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில் நீண்ட நேரம் உரையாற்றவும், விவாதிக்கவும் முதல்வருக்கு போதிய நேரம் கிடைக்கும். அதிமுகவிற்கு கிடைத்துள்ள எம்.பி.க்களின் பலத்தை தமிழக நலன்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஜூலை 16 ஆம் தேதி நடைபெறும் பிரதமர் தலைமையிலான மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தை தமிழக நலனுக்கும், தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றவும் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK treasurer stalin urged jayalalithaa to attend the Council meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X