சென்னை கட்டட விபத்து கோரமானது, துயரமானது, வருந்தத்தக்கது.. மு.க.ஸ்டாலின்

அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தை நேற்று மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த சம்பவம் மிகவும் கோரமானது, துயரமானது, மிகவும் வருந்தத்தக்கது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் இந்த மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்த வேண்டும். இதை நான் அரசியலுக்காக சொல்லவில்லை. மனிதாபிமான அடிப்படையில்தான் கூறுகிறேன்.
கட்டடத்திற்கு அனுமதி அளித்த முறைகேடு குறித்து பத்திரிகைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. இதை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும். கட்டட இடிபாடு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
தா.பாண்டியனும் வந்தார்
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் நேற்று வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அளித்த நிதி உதவி மட்டும் போதாது. எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் தாமாக முன்வந்து இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நன்கொடைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தினசரி யாராவது ஒரு அரசியல் தலைவர் சம்பவ இடத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.