For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்க வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா முழுமையும் கோடிக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிபதிகளின் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், காலியான பதவிகளை நிரப்பும் பொழுது அதில் சமூகநீதி இடஒதுக்கீடு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய நாடு முழுவதும் பைசலாகாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை மூன்றேகால் கோடிகளாகும். இவற்றில் இரண்டே முக்கால் கோடி வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 45 லட்சம் உச்சநீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் எண்ணிக்கை ஏறத்தாழ 60 ஆயிரம் ஆகும்!!

statement issued by dravida kala leader k.veeramani

இதற்குக் காரணம், அடி முதல் உச்சி வரை நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமையே! இந்த ஆண்டு இறுதியில் தேக்கமடைந்து கிடக்கும் இந்த வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியைத் தொடுமாம்!

வழக்குகள் தேக்கம், தேக்கம்!

நீதிபதிகள் நியமன முறைபற்றி மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த ஓராண்டில் நடைபெற்றிருக்க வேண்டிய நீதிபதிகள் நியமனங்கள் நடைபெறாமையால், இப்படி தேக்கம் அடைந்துள்ள வழக்குகள் ஏராளம்! ஏராளம்!!
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற அறிவுரை, மதிப்பின்றி கிடக்கும் அவலம் ஒருபுறம் உள்ளது.

இந்தியா முழுவதும் 445 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளனர். உச்சநீதிமன்றத்திலும் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களும் (மொத்தம் 31இல் சில உள்ளன) இவை பொதுப் பார்வையின்மூலம் ஏற்படும் கண்ணோட்டம் ஆகும்!

சமூக நீதி என்ற இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை முன்னுரிமை பெற்றுள்ள இடஒதுக்கீடு ஏனோ, மாவட்ட நீதிபதிகள் நியமனம் வரைவந்து, மேல் மட்டமான உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்குக் கடைப்பிடிக்கப்படாத தந்திரங்களும், சூழ்ச்சிகளும் தவறான சட்ட விளக்கங்களும் தொடர்ந்துள்ளன!

உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிகூட இல்லை

மொத்தம் 31 நீதிபதிகள் எண்ணிக்கை உள்ள நாட்டின் உச்சநீதிமன்றத்தில், ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிகூட இல்லை என்பது சமூகநீதியை உருக்குலைக்கும் கேலிக் கூத்து அல்லவா!

மேலும் தாழ்த்தப்பட்ட (sc/st பிரிவு) நீதிபதிகள் இந்தியா முழுவதிலும் வெறும் 18 பேர்தான் தற்போது உள்ளனர் என்பதை, மதுரையில் சமூகநீதியை வலியுறுத்திய ஜஸ்டீஸ் அரிபரந்தாமன் அவர்களும், ஜஸ்டீஸ் சிவக்குமார் அவர்களும் வேதனையுடன் குறிப்பிட்டு, நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு, சமூக நீதி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் வற்யுறுத்தியுள்ளனர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சுமார் 80 ஆகும். இதில் 33 முதல் 35 வரை (அடுத்த மாதம் கணக்கில் கொண்டால்) ஓய்வு பெற்றவர்கள் போக சரி பகுதிக்கும் குறைவாகவே நீதிபதிகள் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கின்றனர். வழக்குகளை அவர்கள் எப்படி - அதிவேகத்தில் விசாரிக்க முடியும்? அவர்களும் தங்கள் சக்திக்கேற்ப வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பளிக்கவே செய்கின்றனர்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகளா?

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் வாய்ப்பற்ற சமூகத்தின் திறமையான வழக்குரைஞர்களையும், மாவட்ட நீதிபதிகளாக்கி உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களையும் நியமிக்கும் போது சமூக நீதிக் கண்ணோட்டம் அவசியம் நியமனம் செய்யும் முறையில் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது தங்களின் விகிதாச்சாரத்திற்குப் பன் மடங்கு அதிகமாகவே சுமார் 5,6 பார்ப்பனர்கள் நீதிபதிகளாக உள்ளனர்! இதுவே அதிகம்.

அடுத்து மேலும் பல பார்ப்பனர்களை நீதிபதிகளாக (சுமார் 10 பேர்களை) நியமிக்க பலத்த முயற்சிகள் நடைபெறுவதாகக் கேள்விப்படுகிறோம். இச்செய்தி உண்மையானால், அது தமிழ்நாடெங்கும் - கட்சிகளுக்கு, அரசியலுக்கு, அப்பாற்பட்டு பெருந்திரள் மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுப்பது நிச்சயம்! சமூகநீதியை அரசியல் சட்டம் வற்புறுத்துகிறது. அந்த உரிமைப்படிதான் நாம் இதைக் கேட்கிறோமே தவிர, எவரிடமும் பிச்சையோ, சலுகையோ அல்ல!

திராவிடர் கழகத்தின் கிளர்ச்சியால்...

திராவிடர் கழகம் கிளர்ச்சி, பேரணி நடத்திய பிறகுதான், அலெக்சாண்டர் தமிழக ஆளுநராக இருந்தபோது ஆளுநர் ஆட்சி - ஒரு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதிகூட சென்னை உயர்நீதிமன்றத்தில் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய பின்னரே, வருமான வரித்துறையிலிருந்து ஒருவர் நியமனம் பெற்றார். பிறகு அது வளர்ந்தது. இந்நிலை பிற மாநில உயர்நீதிமன்றங்களில் இல்லை என்பது - இன்றும்கூட மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

தமிழ் மண்ணின் மனோபாவம்!

தமிழ்நாட்டிற்கென ‘மண்ணின் மனோபாவம்‘ - உண்டு; இதை மத்திய அரசும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளும் பரிந்துரை, நியமனங்களில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்ட ஞானமும், அனுபவமும் உள்ள வாய்ப்பற்ற சமூக வழக்குரைஞர்களும் மாவட்ட அளவில் உள்ள நீதிபதிகளும் இன்று ஏராளம் உள்ளனர். அவர்களுக்கு ஒன்றும் பஞ்சமே இல்லை. இவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது அவசியம்.

‘பசியேப்பக்காரர்களுக்கு'பந்தியில் முன்னுரிமை என்பதே சமூக நீதியின் சரியான பொருளாகும். ‘புளியேப்பக்காரர்களே' மேலும் மேலும் பிறர் உணவைப் பறித்துச் சாப்பிடுவது சமூக அநீதியாகும். அரசுக்கு வழிகாட்டும் அரசியல் சட்ட நெறிமுறையிலே 46வது பிரிவின்படி இந்த சமூக அநீதியை அடியோடு களையும் விதத்தில் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் நடைபெற வேண்டும்.

ஆட்சி மாற்றம் முக்கியமல்ல - சமூக மாற்றமே தேவை!

ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சிமாற்றமோ, காட்சி மாற்றமோ ஆகாது. மாறாக, சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். ‘அனைவர்க்கும் அனைத்தும்‘ என்ற தத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் நீதித்துறை அப்பாற்பட்டதாகி விடக் கூடாது - எல்லா மக்களின் பங்களிப்பும் இதிலும் முக்கியம்.
எனவே இவற்றை மனதிற்கொள்ளும் வகையில் நீதித்துறை - நீதியமைப்புகள் மத்திய, மாநில மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்கள் நடந்து, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவது - அவசரம், அவசியம் ஆகும்.

இவ்வாறு வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Dravida kala leader k.veeramani statement issued about in the appointment of judges Reservation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X