For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முற்றாக பாஜகவின் பினாமி அரசாகவே மாறிப் போன தமிழக அரசு!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இதுவரையில் தமிழ் நாட்டின் வரலாற்றில் நடக்காத காரியங்கள் எல்லாம் தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன.

மே 14, 2017 ம் நாள் தமிழக அரசின் நிர்வாக வரலாற்றில் 'பொன் எழுத்துக்களால்' பொறிக்கப்பட வேண்டிய நாள். நேற்று, ஞாயிற்றுக் கிழமை, ஒரு விடுமுறை நாளில் மத்திய நகர்ப்புற மற்றும் செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சர் எம்.வெங்கய்யா நாயுடு, தமிழக அரசின் தலைமை செயலகத்தில் மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இதர அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எப்படி செயற்படுத்தப் படுகின்றன என்பது பற்றி பேசினார். இது வெறும் ஆய்வுக் கூட்டம் மட்டுமல்ல, மாறாக மாநில அரசுக்கு எந்தளவுக்கு எச்சரிக்கை விடுக்க முடியுமோ அந்தளவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்த துர்பாக்கியமான நாளாகவும் அமைந்து விட்டது.

Tamil Nadu Govt is now BJP's shadow govt

தமிழக அரசுக்கு கீழ்கண்ட வார்த்தைகள் மூலம் இப்படி எச்சரிக்கை விடுத்தார் வெங்கய்யா நாயுடு:

"மாநில அரசின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை ஒதுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிதியை நியாயமான முறையில், உகந்த விதத்தில் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். உங்களது (தமிழக அரசு) ஒத்துழைப்பைப் பொறுத்தே மத்திய அரசின் நிதி உதவி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயற்பட உழைத்தால்தான் எங்களது ஒத்துழைப்பு உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். நீங்கள் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே மத்திய அரசின் உதவி உங்களுக்கு கிடைக்கும். இல்லையென்றால் மத்திய அரசின் நிதி உதவிகள் உள்ளிட்ட பலவும் நின்று போகும்,'' என்று வெளிப்படையாகவே மிரட்டும் தோரணையில், தொனியில் நாயுடு பேசியிருக்கிறார். அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் முதலமைச்சர் முன்னிலையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.

நாயுடுவின் இந்த வெளிப்படையான மிரட்டல் விவரம் அறிந்தவர்கள் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. "இதுவரையில் நாடு விடுதலை அடைந்ந இந்த 69 ஆண்டு கால வரலாற்றில் ஒரு மத்திய அமைச்சர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை, அதுவும் அந்த மாநிலத்தின் தலைமை செயலகத்துக்கு உள்ளேயே அமர்ந்து கொண்டு இந்த மிரட்டலை விடுத்திருப்பது என்பது முக்கியமான ஒரு நிகழ்வுதான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது எந்தளவுக்கு இன்று பாஜக, தமிழக அரசை உருட்டி, மிரட்டி காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு சரியான உதாரணம்,'' என்கிறார் சமீபத்தில ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

அப்படியென்றால் மாநில அரசிடம் மத்திய அரசு தான் வழங்கிய நிதி உதவி சரியாக செயற்படுத்தப்பட்டதா என்றெல்லாம் எந்த கேள்வியும் கேட்க கூடாதா?

"கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு முறை இருக்கிறது. வழக்கமாக மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள்தான் இதனை விவாதிப்பார்கள். முக்கியமான திட்டங்கள் பற்றிய பேச்சுக்களின் போது மட்டுமே முதலமைச்சரும், மத்திய அமைச்சர்களும் வருவார்கள். அந்த கூட்டங்களும் தலைமை செயலகத்தில் நடக்காது. மாறாக ஒரு பொது இடத்தில்தான் நடக்கும். ஆனால் பரவலாக இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் நடக்காத அவலமான காரியம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது,'' என்று மேலும் கூறுகிறார் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி.

நாயுடுவின் வார்த்தைகள் பலரையும் அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கின்றன.

"இது துரதிர்ஷ்டவசமானது. வெங்கய்யா நாயுடு நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவர். நீண்ட அனுபவம் வாய்ந்தவர். தன்னுடைய கண்ணியம் கருதியும், மத்திய, மாநில அரசுகளின் கண்ணியம் கருதியும் அவர் இந்த தொனியையும், இந்த வார்த்தைகளையும் அவர் தவிர்த்திருக்கலாம்,'' என்று ஒன் இந்தியாவிடம் கூறுகிறார் மேற்கு வங்க அரசில் கூடுதல் தலைமை செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழருமான பாலசந்திரன்.

இது கூட்டாட்சி தத்துவத்துக்கே உலை வைப்பதாகவும், தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மாநில அரசை எந்தளவுக்கு சிறமைப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சிறுமைப் படுத்தம் காரியம் தான் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

"ஒரு மாநில முதலமைச்சர் பதவி என்பது மிகவும் உயர்ந்த பதவி. ஒரு மத்திய அமைச்சர் ஒரு மாநில முதலமைச்சருடன் சேர்ந்து அரசின் திட்டங்கள் பற்றி கூட்டாக ஆய்வு நடத்த அவசியம் எதுவும் இல்லை. என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன். எப்போதாவது இது போன்ற கூட்டங்கள், அதாவது ஒரு மத்திய அமைச்சர் ஒரு மாநில அரசின் முதலமைச்சர் மற்றும் இதர அதிகாரிகளுடன் நடத்தும் கூட்டங்கள் என்பவை ஒருபோதும் தலைமை செயலகத்தில் நடைபெற்றதில்லை. முதலமைச்சர் பதவி என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த பதவி. அரிதான இத்தகைய கூட்டங்கள் தலைமை செயலகத்தில் இல்லாமல் வேறு பொதுவான இடங்களில்தான் நடந்திருக்கின்றன. ஒரு மத்திய அமைச்சர் ஒரு மாநில முதலமைச்சரின் மீது ஆதிக்கம் (dominate) செலுத்தும் காரியம்தான் இது. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கே இது எதிரானது," என்கிறார்' ஹரியாணா மாநிலத்தின் முன்னாள தலைமை செயலாளரும், ஓய்வு எற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.ஜி. தேவசஹாயம்.

ஆனால் இந்த அவலமான சூழல் உருவானதற்கு காரணமே தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அஇஅதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச் சாட்டுகளும், கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த யாரும் இல்லாமல் திசையறியாத பயணத்தில் சென்று கொண்டிருக்கும் ஆளுங் கட்சியும், தமிழக அரசு நிருவாகமும் தான் என்கிறார் பெயர் கூற விரும்பாத தற்போது தமிழக அரசு பணியில் இருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

"2011 ல் ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரையில் தமிழக அரசில் அமைச்சர்களாக இருந்து கோடி, கோடியாக சுருட்டியவர்கள் அனைவரது ஜாதகமும் இன்று மோடியின் விரல் நுனியில் இருந்து கொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சராலோ அல்லது இதர அமைச்சர்களாலோ மத்திய அரசின் வரம்பு மீறிய காரியங்களை எதிர்க்க முடியவில்லை. அதானால்தான் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் 'போடச் சொன்னால் போட்டுக்கிறேன், போடும் வரை கன்னத்திலே' என்ற கவியரசர் கண்ணதாசன் எழுதிய சினிமா பாடலுக்கு இலக்கணமாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,'' என்கிறார் பெயர் கூற விரும்பாத அந்த உயர் அதிகாரி.

அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் இந்த போக்கு மிகவும் அபாயகரமான போக்காகத்தான் பார்க்கப் படுகிறது. "இந்திய அரசியலமைப்பு சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியிருக்கும் அத்தனை உரிமைகளும் இன்று மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பறி போய் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் நாயுடுவின் செயலையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவை Union of States அதாவது பல மாநிலங்கள் சேர்ந்த ஒரு நாடாகத்தான் அரசியலமைப்பு சாசனம் வரையறுக்கிறது. ஆனால் இதனை unitary அரசாக, அதாவது 'ஒற்றை அரசாக' மோடி அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. அதனது ஒரு வெளிப்பாடாகத்தான் நாயுடுவின் நடவடிக்கையை நாம் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் அரசு என்பது மத்திய மோடி அரசின் கைப்பாவை அரசுதான் என்பது பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியக் கூடிய விதத்தில் நாயுடுவின் செயலால் இன்று நிருபிக்கப் பட்டிருக்கிறது,'' என்கிறார் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஆழி செந்தில்நாதன்.

2006 - 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசை ஜெயலலிதா அவர் அரசியல் ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த கடைசி நாள் வரையில் மைனாரிட்டி திமுக அரசு என்றே சொல்லிக் கொண்டிருந்தார். காரணம் திமுக வுக்கு வெறும் 96 எம்எல்ஏ க்கள் மட்டுமே இருந்தனர். காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் திமுக ஆட்சி நடந்தது.

ஆனால் தற்போதய நிலைமையை திமுக செயற் தலைவர் மு.க. ஸ்டாலின், "எடப்பாடி அரசு ஒரு பினாமி அரசு. அதாவது மோடி அரசின் தாளத்துக்கு எல்லாம் ஆட்டம் போடும் பினாமி அரசு," என்றே விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் சொல்லுவதை முற்றிலும் நிராகரிப்பது என்பது எந்த ஒரு அரசியல் விமர்சகருக்கும் கடினமான காரியம்தான். பினாமி அரசின் மூலம் காவிக் கட்சியின் கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பதுவும் உண்மைதான்.

மைனாரிட்டி திமுக அரசு சாதிக்காத பலவற்றையும் இன்றைய அஇஅதிமுக பினாமி அரசு சாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் பார்த்தால் மோடி மஸ்தான் வித்தை 'பினாமி ஆட்சி' மூலம் காவிக் கட்சியின் கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தில் நிறைவேற்றும் காரியம் கன கச்சிதமாக நடந்து கொண்டிருக்கிறது என்று நாம் நிச்சயம், அறுதியிட்டு உறுதியாக சொல்லலாம்!

English summary
R Mani's analysis says that the Govt of Tamil Nadu is now functioning as the benamy govt of BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X