For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை "ரிமோட் கண்ட்ரோலில்" ஆட்சி செய்யும் 'முகமூடி முதல்வர்': கருணாநிதி!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் "முகமூடி முதல்வர்" ஒருவர் தலைமையில் "ரிமோட் கண்ட்ரோல்" ஆட்சி நடைபெற்று வருவதாக அல்லவா அனைவரும் பேசிக் கொள்கிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நையாண்டியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 125 நாட்களுக்கு மேலான பிறகு, இப்போதுதான் கன்னி முயற்சியாக அவர் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

Tamil Nadu ruled by a 'Masked CM' through 'remote control'!: Karunanidhi

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் முடிவடைந்த பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துகிறார்.

இதற்குக் கூட நேற்றையதினம் முதல் அமைச்சர், ஜெயலலிதாவைச் சந்தித்து ஒப்புதல் பெற்ற பிறகுதான் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணம்!.

அதுவும்கூட விரைவில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க வேண்டிய நிலையில் அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் கூட்டுகிறார்களாம்!

தமிழகத்தில் "ரிமோட் கண்ட்ரோல்" ஆட்சி "முகமூடி முதல்வர்" ஒருவர் தலைமையில் நடைபெற்று வருவதாக அல்லவா அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்! என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: பெட்ரோல், டீசல் விலை குறைந்த போதிலும், பேருந்துக் கட்டணம் குறைய வில்லையே?

கருணாநிதி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய போது, அதைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினார்கள். ஆனால் தற்போது மத்திய அரசு படிப்படியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தபோதிலும், அ.தி.மு.க. அரசு வந்ததும் வராததுமாகத் தாறுமாறாக உயர்த்திய பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முன்வராமல், அதைப் பற்றியே வாய் திறக்காமல் இருந்து வருகிறார்கள்.

ஒடிசா மாநில அரசு டீசல் விலை குறைவு காரணமாக பேருந்துக்கட்டணத்தைக் குறைத்து அறிவித்திருக்கின்றது. தமிழகத்தில் டீசல் விலைக் குறைப்பால், லாரிகளின் வாடகைக் கட்டணத்தை, அதன் உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு 300 ரூபாய் வரை குறைத்துள்ள நிலையில் அ.தி.மு.க. அரசு பேருந்துக் கட்டணத்தை உடனடியாகக் குறைத்து அறிவிக்க முன்வருமா?

கேள்வி: தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்திருக்கிறாரே?

கருணாநிதி: இதைத்தான் நான் கடந்த மாதம் 9ம் தேதியன்றே விளக்கியிருந்தேன். நான் மாத்திரமல்ல; ஆங்கில நாளிதழ், "இந்து", 31-12-2014 அன்று "T.N. facing financial crunch - CM admits to Limited Sources of Revenue" என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரையே வெளியிட்டிருந்தது. மாநில அரசின் வரிவருவாயில் உள்ள பல்வேறு இனங்களின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, எந்தத் துறையும் எதிர்பார்த்தஅளவுக்கு வருவாயை ஈட்டவில்லை என்பதை அறியலாம்.

"ஜூனியர் விகடனில்" "நிதி நெருக்கடியில் தமிழக அரசு"என்ற தலைப்பில் விளக்கக் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருந்தது. அதில், "எந்த இலக்கையும் எட்ட முடியாமல் நிதித்துறை தடுமாறி வருகிறது. டாஸ்மாக் வருவாயை உயர்த்துவதில்தான் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டது.அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையை மற்ற துறைகளிலும் காட்டியிருந்தால், மொத்த வருவாய் அதிகரித்திருக்கும். அரசின் மெத்தனம்தான் இதற்குக் காரணம். அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

அப்போது வரி வருவாய் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் குறைவாகக் கிடைக்கும். அதைச் சமாளிக்க கடன் வாங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. கூவம் நதியைச் சீரமைக்க ரூ. 3,833.62 கோடியில் பெரும் திட்டம், ஆறுகள் இணைப்பு வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ. 5,166 கோடி, 3 வழித் தடங்களில் ரூ. 8,350 கோடியில் மோனோ ரெயில் திட்டம், ரூ. 1,075 கோடியில் நெமிலிச்சேரியையும் மீஞ்சூரையும் இணைக்கும் இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா, தேர்வாய்க்கண்டிகை, திருக்கண்டலம், ராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் என கடந்த பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகளை எப்போது நிறை வேற்றுவார்கள்? அவற்றுக்கெல்லாம் எங்கிருந்து பணம் கொண்டு வருவார்கள்?" என்றெல்லாம் எழுதியிருந்தது. ஆனால் எதற்கும் அ.தி.மு.க. அரசு பதிலே கூறவில்லை.

எதிர்க்கட்சிகள் கூறுவதை இந்த அரசு கேட்காவிட்டாலும், அரசு அலுவலர் சங்கத்தின் பேச்சையாவது கேட்பார்கள் என்றாவது எதிர்பார்ப்போம்! வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அரசின் நிதிநிலை பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிக்காவிட்டால், நடப்பது "திவாலான அரசு" என நாட்டு மக்கள் ஊர்ஜிதம் செய்து விடுவார்கள்.

அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டதிலிருந்து புதிதாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்திட வக்கில்லாமல், வக்கணை பேசி வாய் நீளம் காட்டு வதில் மட்டும் சாமர்த்தியம் காட்டுகிறார்கள். "தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு கூட சொந்த மின்சார உற்பத்தியில் காட்டவில்லையே, அதில் உள்ள "மர்மம்" என்ன?" என்று அனைவரும் தொடுக்கும் கேள்விக்கணை ஆள்வோர் செவிகளில் ஆழமாக நுழையவில்லையா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu ruled by a 'Masked CM' through 'remote control'!: Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X