சின்னாபின்னமாகிறது தமிழக தொழிற்துறை.. ஒரு ஷாக் ரிப்போர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- ஆர். மணி

தமிழகத்தின் செல்வாக்கு மிக்க முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 ல் காலமானார். ஜெ வின் பூத உடல் அவர் சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அவரது வீடான போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப் படுவதற்கு முன்பே முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்.

வழக்கமாக ஒரு முதலமைச்சர் மரணமடைந்தால் ஒருவர் இடைக்கால முதலமைச்சராக பொறுப்பேற்பது தான் வழக்கம். 1969 ல் அண்ணா மறைந்த போதும், 1987 ல் எம்ஜிஆர் மறைந்த போதும் இதுதான் நடந்தது. அதற்கு பிறகு சில நாட்கள் கழித்துத் தான் முறையாக ஒரு முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டார். 1969, 1987 ல் இவ்வாறு இடைக்கால முதலமைச்சராக பொறுப்பேற்றவர் மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் தான். ஆனால் ஓபிஎஸ் பதவியேற்ற போது அவர் நிரந்தர முதலமைச்சராக பொறுப்பேற்றது மட்டுமின்றி, ஜெ அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அத்தனை அமைச்சர்களும் ஓபிஎஸ் அமைச்சரவையிலும் அமைச்சர்களாயினர். இதுவே விவரம் அறிந்த பலரின் புருவங்களையும் உயர்த்தியது.

Tamil Nadu's political instability

பிப்ரவரி 5 ம் தேதி வரையில் சுமுகமாக ஓடிக் கொண்டிருந்த ஓபிஎஸ் அமைச்சரவைக்கு அன்றுதான் கிரகணம் பிடிக்கத் துவங்கியது. 2016 டிசம்பர் 30 ல் அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா அஇஅதிமுக வின் சட்டமன்ற குழுத் தலைவராக, அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக அஇஅதிமுக எம்எல்ஏ க்களால் பிப்ரவரி 5 ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டார். ஓபிஎஸ் உடனே தன்னுடைய ராஜினாமாவை தமிழக ஆளுநர் சி.வித்தியா சாகர் ராவுக்கு அனுப்பி, அந்த ராஜினாமாவும் அடுத்த நாள் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

ஆனால் பிப்ரவரி 7 ம் தேதியே ஓபிஎஸ் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். ஜெ சமாதியில் பிப்ரவரி 7 ம் தேதி இரவு 9 மணிக்கு அரை மணி நேர தியானத்தில் அமர்ந்த ஓபிஎஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தன்னை நிர்ப்பந்தித்து தான் தன்னுடைய ராஜினாமா கடிதம் வாங்கப் பட்டதாக கூறி விட்டார். அதன் பிறகு நடந்தது என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். பிப்ரவரி 14 ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ஜெ உட்பட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்றே தீர்ப்பளித்தது. பிப்ரவரி 15 ம் தேதி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூர் பரப்பனஹாரா சிறையில் அடைக்கப் பட்டனர். புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி விமர்சையாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த கதை எல்லோருக்கும் தெரியும் தான். ஆனால் ஜெய ல லிதாவின் மரணமும், அஇஅதிமுக வில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் பெருங் குழப்பமும் தமிழ் நாட்டின் தொழிற் துறையை எந்தளவுக்கு சீரழிவுக்கு உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது என்ற செய்திதான் தற்போது கொஞ்சங் கொஞ்சமாய் வெளியில் வந்து கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் கைது செய்யப் பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தததும் இந்தக் குழப்பம் பெருங் குழப்பமாய் வடிவெடுத்து தமிழகத்தின் தொழிற் துறையை திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கிறது.

தென் கொரியாவின் புகழ் பெற்ற 'கியா' என்கின்ற ஆட்டோ மொபைல் நிறுவனம் தன்னுடைய 10,000 கோடி ரூபாய் முதலீட்டிலான தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டிருந்தது. இதற்கான பல கட்ட பேச்சு வார்த்தைகளும் ஜெ அப்பல்லோ மருத்துவ மனையில் சேரும் வரையில் தமிழக அரசுடன் நடத்தப் பட்டது. ஆனால் ஜெ மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக தன்னுடையை தொழிற்சாலையை ஆந்திர மாநிலத்துக்கு இந் நிறுவனம் கொண்டு சென்று விட்டது. இதன்காரணமாக தமிழகத்தில் சில ஆயிரம் பேருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பும் பறி போய் விட்டது.

இதுபோன்று பல தொழிற்சாலைகள் சத்தமின்றி தமிழகத்தை விட்டு விலகிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களின் ஒன்றான முருகப்பா குழுமத்தின் செயற் தலைவர் ஏ.வெள்ளையன், ''பிசினஸ் ஸ்டாண்டர்டு'' பத்திரிகைக்கு கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்; ''தமிழ் நாட்டில் தொழில் நடத்துவது என்பது மிகவும் சவாலானதாக மாறி விட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிச்சயமற்ற தன்மை தான் இதற்கு முக்கியமான காரணம். ''நிலைமை சீக்கிரமாக முன்னேற்றம் அடைய வேண்டும். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் எங்களுடைய வர்த்தகமும், லாபமும் சீரான விதத்தில் குறைந்து கொண்டே வருகின்றன''.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் சில புகழ் பெற்ற நிறுவனங்கள், கடந்த எட்டு மாதங்களில் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. சில தொழிலதிபர்கள் தங்களுடைய புதிய தொழில் முதலீடுகளை கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா குஜராத் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். ''எப்படி பார்த்தாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் தான் புதிய முதலீட்டாளர்களுக்கான உகந்த மாநிலங்களாக கணிக்கப்பட்டிருக்கின்றன''என்கிறார்கள் பல முதலீட்டாளர்கள்.

''முருகப்பா குழுமத்துக்கு மட்டும் இந்தப் பிரச்சனை எழவில்லை. அஷோக் லேலண்டு, எம்ஆர்எஃப், செயிண்ட் கோபென், அப்பல்லோ டையர்ஸ், ஃபோர்டு மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது புதிய முதலீடுகளை தமிழகத்தை தவிர்த்த அண்டை மாநிலங்களுக்கு கொண்டு சென்று விட்டார்கள். இதற்கு முக்கியமான காரணம் நாம் மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் புதியதாக தொழில் துவங்க வருபவர்களுக்கு கொடுக்கும் சலுகைகள்தான். இந்த மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநில முதலமைச்சர்களே நேரடியாக முதலீட்டாளர்களுடன் பேசுகிறார்கள், அவர்களது பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்துகிறார்கள். இவை எதுவுமே தமிழகத்தில் இல்லாததுதான் முதலீட்டாளர்கள் தமிழ் நாட்டை விட்டு ஓடிப் போவதற்கு முக்கியமான காரணங்கள்'' என்கிறார் சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

இதில் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பது திருப்பூரின் பின்னலாடை உற்பத்தியாளர்கள். ஆண்டு ஒன்றுக்கு 35,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியை அவர்கள் தமிழகத்துக்கு கொண்டு வருகிறார்கள். இவ்வாறு பாதிக்கப் பட்ட பின்னலாடை உற்பத்தியாளர்களை ஒரிஸ்ஸா அரசு இரு கரம் கூப்பி வரவேற்கிறது. ''ஓரிஸ்ஸா அரசு திருப்புரிலிருந்து வரும் முதலீட்டாளர்களை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றுக்கு பெரிய அளவில் மான்யங்களை வழங்குகிறது. 200 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான செலவுகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒரிஸ்ஸா அரசே ஏற்றுக் கொள்ளுகிறது. இதனால் ஏற்கனவே திருப்பூரின் சில முதலீட்டாளர்கள் ஒரிஸ்ஸாவுக்கு சென்று விட்டார்கள்'' என்கிறார் திருப்பூரின் முன்னணி தொழிலதிபர் ஒருவர்.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு தமிழகத்தின் தொழிற் துறை சந்தித்து வரும் இன்னல்களும், இடர்பாடுகளும், ஒரு முக்கியமான சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஐடி துறை சந்தித்து வரும் பிரச்சனைகளால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழகத்திற்கு வர வேண்டிய பல புதிய தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு போய் விடுவது என்பது வேலை வாய்ப்பு விவகாரங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

பருவ மழை பொய்த்து போனது, கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி போன்ற விவகாரங்களால் ஏற்கனவே பெரியதோர் சிக்கலை தமிழகம் எதிர் கொண்டிருக்கிறது. இதில் புதிய தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது என்பது தமிழகத்தின் துயரை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இப்போதாவது நம்முடைய ஆட்சியாளர்கள் விழித்துக் கொண்டால் ஓரளவுக்கு நாம் சமாளிக்கலாம். இல்லையெனில் மிகப் பெரியதோர் சமூக கொந்தளிப்பை தமிழகம் சந்திக்க நேரிடலாம். எல்லா முன்னேற்றங்களுக்கும் அடிப்படை அரசியல் ஸ்திரத்தன்மை. அது இல்லையென்றால் எந்த மாநிலமும் முன்னேற முடியாது என்பதற்கான சமகால உதாரணமாக தமிழகம் மாறிப் போகலாம். அந்த நிலைமை, வாக்களித்த மக்களுக்கு அஇஅதிமுக அரசு கொடுக்கும் பரிசாக அமைந்து போகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu is facing a big challenge for the last few months and the instability of the govt is causing so many issues.
Please Wait while comments are loading...