For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிவு உட்பட 7 தமிழரை 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய தமிழர் எழுவர் விடுதலை கூட்டியக்கம் கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரையும் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் எழுவர் விடுதலைக்கான கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழர் எழுவர் விடுதலைக்கான கூட்டியத்தின் சார்பில் பண்ருட்டி தி. வேல்முருகன், தியாகு, பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Tamil outfits demand Invoke Article 161 to release Rajiv case convicts

ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரின் விடுதலைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டதாக வந்துள்ள செய்திகள் சரியானவை அல்ல.

இந்தியக் குற்ற நடைமுறைச் சட்டத்தின் தண்டனைக் கழிவு விதிகள் தொடர்பாக சென்ற 2015 டிசம்பர் 2ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிமான்கள் அடங்கிய பெஞ்ச் வழங்கியுள்ள தீர்ப்புதான் இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி19ஆம் நாள் மேற்கூறிய எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை எதிர்த்து இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளின் படி மத்திய, மாநில அரசுகளுக்குள்ள அதிகாரம் தொடர்பாக ஒரு கேள்விப் பட்டியல் தயாரித்து, அந்தக் கேள்விகளுக்கு விடை காண ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட பெஞ்ச் அமைத்தது.

இந்த பெஞ்ச், டிசம்பர் 2ஆம் நாள் வழங்கியுள்ள தீர்ப்புதான் மேற்சொன்னவாறு எழுவர் விடுதலைக்குத் தடை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

Tamil outfits demand Invoke Article 161 to release Rajiv case convicts

உச்ச நீதிமன்ற முழு பெஞ்ச் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டோமானால் மாநில சுயாட்சி - இந்தியக் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி ஆகி விடும் ஆபத்தும் உள்ளது.

ஆனாலும், தண்டனைக் கழிவு தொடர்பாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாநில அரசுகளுக்குள்ள உரிமைகளை இந்தத் தீர்ப்பு பெரிதும் கட்டுப்படுத்தியுள்ள போதிலும்; அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 மாநில ஆளுநருக்கு வழங்கும் இறுதி அதிகாரத்தில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் பரிந்துரைப்படியே மாநில ஆளுநர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும் என்பதை ஏற்கெனவே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எனவே, தமிழர் எழுவர் தொடர்பாக மட்டுமின்றி, நீண்ட பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஆயுள் தண்டனைக் கைதிகள் தொடர்பாகவும் கூட, தமிழக அரசு ஒரு முடிவெடுத்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்ற அரசமைப்புச் சட்ட 161ஆம் உறுப்பைப் பயன்படுத்த இதுவே தக்க தருணம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதற்கும் மேலே, இராசீவ் கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்து பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த தியாகராஜன் தாம் செய்த பிழையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதையும் கருத்திற்கொண்டால் இந்த எழுவரின் விடுதலையை இனியும் தள்ளிப் போடுவது நீதியாகாது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவர்களின் நன்னடத்தை, விடுப்பே இல்லாத 24-ஆண்டுச் சிறைவாசம், புலனாய்வு அதிகாரியே இவர்கள் நிரபராதிகள் என்று முன்வைக்கும் சட்ட வாக்குமூலம், இதனால் இவர்களின் குற்றத் தன்மையின் மேல் எழுந்துள்ள சந்தேகம், இவர்களின் தூக்கை உறுதி செய்த நீதியரசர் கே.டி தாமஸ் அவர்களே "விலங்குகளைப் போல் அடைபட்டு கிடக்கும் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று இப்பொழுது கொடுக்கும் அழுத்தம் என இவர்கள் பக்கத்து நியாயங்கள் மானுடம் போற்றும் எவரையும் பதற வைக்கும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்சொன்ன காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அறிவு உள்ளிட்ட எழுவரையும், மிகநீண்ட காலமாகச் சிறையில் வாடும் ஆயுள் தண்டனைக் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்யக் கருணையோடு ஆய்வு செய்ய வேண்டுகிறோம்.

வருகிற சனவரி 17-ந் நாள் தொடங்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை இதற்குரிய நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வாறு வேல்முருகன், தியாகு உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

English summary
Tamil movements federation has demanded that TN govt should invoke Article 161 to release Rajiv case convicts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X