தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றி வரும் சீன கவிஞர் யூசிக்கு முது முனைவர் பட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அவ்வையாரின் ஆத்திசூடியை சீன மொழியில் மொழிபெயர்த்த சீன கவிஞர் யூசிக்கு முதுமுனைவர் பட்டம் வழங்க தமிழ் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தைவான் நாட்டை சேர்ந்த தலைசிறந்த கவிஞர் யூசி. இவர் உலகில் அதிகமானவர்கள் பேசும் மொழியான சீன மொழியான மாண்டரின் மொழியில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை சீன மொழியில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் புகழை உலகமெல்லாம் பரவச் செய்தார்.

Tamil University decided to confer Post doctoral degree to China Poet Yusi

அவ்வையாரின் ஆத்திசூடியை முழுமையாக படித்து அதன் விழுமிய கருத்துகளை நாக்கு உணர்ந்து நுட்பமாகவும், திடமாகவும் உள் வாங்கிக் கொண்டு 2 மணி நேரத்தில் மிகச் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதுவரை இதுபோன்ற படைப்புகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்ய எவருமே முன்வராத நிலையில், கவிஞர் யூசியின் பணி சிறப்பு வாய்ந்தது ஆகும்.

கவிஞர் யூசி தற்போது, தைவான் நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் ஆசிரியராக பதவி வகிக்கிறார். அந்நாட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்.

அவரது சிறப்பான பணியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு 2014-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, ரூ.1 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. மொழியாக்கப் பணிக்காக இவருக்கு தமிழக அரசு ரூ.18 லட்சம் மதிப்பூதியம் வழங்கியது. அந்த தொகையை தானே வைத்துக் கொள்ளாமல், தமிழ்ப் பல்கலைக்கழகம், உலக தமிழ்ச் சங்கம், உலக தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு தலா ரூ.6 லட்சத்தை வழங்கியுள்ளார். மேலும், தைவான் நாட்டின் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டின்போது தன் சொந்த செலவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான திருவள்ளுவர் சிலையை அங்குள்ள மலையின் உச்சியில் நிறுவியுள்ளார். இவரது செயல் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும், பெருமை சேர்த்துள்ளது.

இந்தநிலையில், நேற்று நடந்த தமிழ் பல்கலைக்கழத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், தமிழ் மொழிக்காக அளப்பரிய பணிகளை செய்து வரும் கவிஞர் யூசிக்கு, ‘முது முனைவர்' பட்டத்தை வழங்கி சிறப்பிக்க தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil University decided to confer a Post Doctoral degree to China poet Yusi for his tremendous service to Tamil Language.
Please Wait while comments are loading...