For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிக்கு முன் அரசியலில் குதித்த சினிமா ஸ்டார்கள் நிலை என்ன ஆனது தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து தனிக்கட்சி ஆரம்பித்த பிரபலங்கள் குறித்த ஒரு ரவுண்ட் அப் பார்வை.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    கொள்கையை பற்றி கேட்ட ஊடகங்களை கலாய்த்த ரஜினி

    சென்னை : தான் அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்கபோவதாக ரஜினி இன்று தனது ரசிகர்களிடத்தில் அறிவித்து உள்ளார். இதன் மூலம் அவரது தொண்டர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

    விரைவில் தனிக்கட்சி அறிவிப்பதாக ரஜினி அறிவித்து உள்ளதை அடுத்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டு இருந்த குழப்பத்தை நடிகர் ரஜினிகாந்த் தீர்த்து வைத்து உள்ளார். இதை பலரும் ஆதரித்து, எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    ரஜினிக்கு முன்பே சினிமாவில் அரசியலுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். எஸ்.எஸ்.ஆர்., தொடங்கி நெப்போலியன், கருணாஸ், குஷ்பு என நட்சத்திர பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவரக்ள் எல்லோரும் குறிப்பிட்ட கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

    இவர்கள் இல்லாமல் நேரடியாக அரசியல் களத்தில் குதித்தவர்கள் யார் ? அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி பெற்றவர்கள் யார் ? தோல்வியடைந்தவர்கள் யார் என்பது குறித்த சின்ன அலசல்.

     வெற்றி வாகை சூடிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

    வெற்றி வாகை சூடிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

    அண்ணாவால் திமுகவிற்கு அழைத்து வரப்பட்ட அப்போதைய உச்ச நடிகர் எம்.ஜி.ஆர் அங்கு ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதனையடுத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரில் 1972ம் ஆண்டு தனிக்கட்சி ஆரம்பித்தார். மக்களின் நீடித்த ஆதரவால் தொடர் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக இருந்தார். இவருக்கு இருந்த பெருந்திரளான மக்கள் ஆதரவே இவருக்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவையும் முதல்வராக்கியது.

     சிவாஜி நிலை

    சிவாஜி நிலை

    திரைத்துறையில் நடிப்பில் கோலோச்சிய சிவாஜியால் தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்த்தபடி சோபிக்க முடியவில்லை. முதலில் திமுகவில் இருந்தவர், அடுத்து அங்கு மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து காமராஜர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இந்திரா காந்திக்கு பிறகு ராஜீவ் காந்தியின் செயல்பாடு பிடிக்காததால், தமிழக முன்னேற்ற முண்ணனி என்கிற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். ஜானகி அணியை ஆதரித்து 1989 தேர்தலில் திருவையாறு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், கட்சியை கலைத்துவிட்டார் சிவாஜி.

     பாக்யராஜ் கதி

    பாக்யராஜ் கதி

    1980களில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராக இருந்த பாக்யராஜ் தீவிர எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். ருத்ரா திரைப்படம் வெளியான சமயத்தில் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்தார். ஆனால், அதற்கு சரியான வரவேற்பு இல்லாததால் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த பாக்யராஜ். இப்போது அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாத அளவிற்கு அமைதி காக்கிறார்.

     டி.ராஜேந்தர் பரிதாபம்

    டி.ராஜேந்தர் பரிதாபம்

    அடுக்குமொழி வசனம் என்றாலே தமிழ் மக்களுக்கு நினைவுக்கு வருபவர் டி.ராஜேந்தர். திரைப்படங்களில் அரசியல் பேசும் இவரது தனி ஸ்டைலால் மக்களிடையே தனக்கென ஒரு முத்திரையை உருவாக்கியவர். இதனையடுத்து 1991ம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்து, 1991 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு கட்சியை கலைத்து விட்டு திமுகவில் ஐக்கியமானார். அங்கும் மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து, இவர் 2004ம் ஆண்டு லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் கட்சி ஒன்றை துவக்கினார். திமுக கூட்டணியில் இருந்த போது ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு பின் கட்சி பெரிதாக இயங்கவில்லை.

     கார்த்திக் நிலைமை

    கார்த்திக் நிலைமை

    'நவரச நாயகன்' என்று அழைக்கப்பட்ட கார்த்திக், திடீரென்று அகில இந்திய பாஃர்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்தது அரசியல் திருப்பம். அந்தக் கட்சியின் மாநில செயலாளராக இருந்தார். ஆனால், அங்கு சில அவரது செயல்பாடுகள் சரி இல்லாததால், அவரை கட்சியில் இருந்து தலைமை நீக்கியது. அதன் பின் நாடாளும் மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி ஆரம்பித்து விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அடிக்கடி அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த நிலையில் தற்போது மனிதர் அமைதியாக இருக்கிறார்.

     சோபிக்காத சரத்குமார்

    சோபிக்காத சரத்குமார்

    திமுகவின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு 1996 தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்தார். 1998ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு எதிர்பாராத விதமாக திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அங்கு சில காலமே இருந்த சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை 2010ம் ஆண்டு தொடங்கினார். அதிமுக கூட்டணியில் 2011ம் ஆண்டு தேர்தலில் இரண்டு இடங்களில் இவரது கட்சி வெற்றி பெற்றது. ஆனால், 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கட்சியில் இருந்த பலர் வேறு கட்சிகளில் தங்களை இணைத்து கொண்டாலும் கட்சியை நடத்தி வருகிறார் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்.

     சீமான் அரசியல்

    சீமான் அரசியல்

    பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தம்பி திரைப்படத்தின் மூலம் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தியவர் சீமான். இவர் தீவிர தமிழ் தேசியவாதியாக அறியப்படுபவர். ஈழ போருக்கு பிறகு அரசியல் களத்தில் நேரடியாக இறங்கினார் சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக 2010ம் ஆண்டு கட்சியை துவக்கினார். இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், தமிழக அளவில் முக்கியமான அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கிறார் அண்ணன் சீமான்.

     உயரம், தாழ்வை பார்த்த விஜயகாந்த்

    உயரம், தாழ்வை பார்த்த விஜயகாந்த்

    இவர்கள் எல்லோரையும் விட திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து இடம் விஜயகாந்த் எனும் நடிகனுக்கு மட்டுமே. திராவிட கட்சிகளின் மீது இருந்த கோபத்தால் 2006ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கினார். 2006ம் ஆண்டு முதல் தேர்தலிலேயே தனித்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின், 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து எதிர்கட்சி தலைவர் ஆனார். ஆனால், அதன் பின் அவரது செயல்பாடுகள் குறையத் துவங்கின, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதிமுக, விசிக, தமாகா,கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படுதோல்வி அடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், இன்னமும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார் கேப்டன்.

     கமல் ஒரு கேள்விக்குறி

    கமல் ஒரு கேள்விக்குறி

    இதுநாள் வரை தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், திடீரென்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தானும் அரசியல் களத்தில் குதிக்க உள்ளதாகவும், தனிகட்சி ஆரம்பிக்கபோவதாகவும் ட்விட்டரில் அறிவித்தார் நடிகர் கமலஹாசன். ஆனால், திடீரென்று கடந்த ஒரு மாதமாக சைலண்ட் மோடுக்கு மாறிவிட்டார். இன்னமும் இவரும் ரஜினியை போல அரசியல் கணக்கை துவங்காமலே இருக்கிறார்.

    தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் நுண்ணிய இழைகளால் பின்னப்பட்டவை. மக்கள் எப்போதும் சினிமா பிரபலங்களுக்கு தங்கள் ஆதரவை மறுக்காமல் கொடுத்து வந்து இருக்கிறார்கள். அதனால் தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போதும் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், களத்தில் வெற்றி பெறுவாரா? செயல்பாடு எப்படி இருக்கும் என்பது இனி மேல் தான் தெரியும்.

    English summary
    The list of Tamil Cinema Actors who turned to be a Party Chief History of Tamilnadu Politics . From MGR to Now Rajini the List will give you a Detailed outlook of Cine Stars In Tamilnadu Politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X