"சிதம்பரம்" கோயில்ல,திருமாவளவன் விழுந்து விழுந்து கும்பிட்டாரே.. இப்ப என்னவாம்? கேட்பது யார் பாருங்க
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின்போது சிரத்தையோடு சிதம்பரம் கோயிலுக்கு சென்று, பரிவட்டம் எல்லாம் கட்டிகொண்டு விழுந்து வணங்கினாரே, அப்போது நந்தியும் சிதம்பரம் கோயிலும் மத அடையாளமாக தெரியவில்லையா? இவர் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியின் பெயரே மத அடையாளம் தானே?" என்று விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளது இந்து முன்னணி.
புதிய நாடாளுமன்றம் நாளை மே 28 ம் தேதி திறக்கப்படுகிறது.. ஆனால், இந்த நாளை துக்க நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுசரிக்க முடிவு செய்துள்ளது..
அன்றைய தினம் விசிக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.. காரணம், "சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்காதவர். அரசமைப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானவர். பாசிச கொள்கையை மண்ணில் விதைத்தவர். அவரது பிறந்தநாளில் இது திறக்கப்படுவது உள்நோக்கம் கொண்டது" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்..

நந்தி சிலை:
அதுமட்டுமல்ல, "செங்கோலில் மதம் சார்ந்த அடையாளம் இருந்தால் அது அரசமைப்புக்கு எதிரானது. அதில் நந்தி சிலை உள்ளது. எனவே அது அரசமைப்புக்கு எதிரானது. அதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அரசமைப்பு சட்டத்தின் பக்கம் நிற்கிறோம்" என்றும் திருமாவளவன் விளக்கம் தந்திருந்தார்..
திருமாவின் இந்த கருத்தைதான் இந்து முன்னணி கடுமையாக எதிர்த்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "நந்தி சின்னம் இருப்பதால் எதிர்க்கிறோம் புதிய மக்களவை திறப்பு விழாவில் பங்குபெறவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
சிவாலயம்:
திருமாவளவன் அவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல சைவர்கள் என மிக சமீபகாலத்தில்தான் முழங்கினார். அவரின் முழக்கபடி பார்த்தால் சைவத்தின் அடையாளம் நந்திதேவன்/நந்தி சிலை ஆனால் அது மதம் சார்ந்தது என்று தற்போது எதிர்க்கிறார். சைவத்தின் தலைமை பீடமாக விளங்கும் சிதம்பரம் சிவாலயம் இடம்பெற்றுள்ள மக்களவை தொகுதியில்தான் இவர் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
அந்த வகையில் தன் தொகுதியின் பிரதான அடையாளமான நந்தியை இவர்தான் உயர்த்தி பிடித்திருக்க வேண்டும்.. சொந்தம் கொண்டாடியிருக்கவேண்டும்.. தேர்தல் பிரச்சாரத்தின்போது சிரத்தையோடு சிதம்பரம் கோயிலுக்கு சென்று, பரிவட்டம் எல்லாம் கட்டிகொண்டு விழுந்து வணங்கினாரே, அப்போது நந்தியும் சிதம்பரம் கோயிலும் மத அடையாளமாக தெரியவில்லையா? இவர் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியின் பெயரே மத அடையாளம் தானே?
சைவ அடையாளம்:
திருமாவளவன் மட்டுமல்ல யார் புறக்கணித்தாலும் இனி இந்த மண்ணின் புராதன அடையாளமான நந்தி எப்போதும் மக்களவையில் பிரதானமாக வீற்றிருக்க போகிறார்.. ஆகவே திருமாவளவன் இனி மக்களவை பக்கமே செல்லமாட்டாரா? எப்போது ராஜினாமா செய்ய போகிறார்? சைவ அடையாளம் நந்தியை எதிர்பதன் மூலம் தன்னை திராவிட மாடலாக பறைசாற்றிகொள்ளும் இவர் நந்தியை வழிபடும் பக்தர்களின் வாக்கு வேண்டாம் என்று கூறும் திண்மையும் திராணியும் இருக்கிறதா?
ஆக, திராவிட மாடல் என்பது இந்த மண்ணின் மான்பையும் பெருமையையும் மறைத்து இறக்குமதி கலாச்சாரத்தை முன்னிறுத்துவது என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது. ஓட்டுவேட்டைக்கு சிதம்பரம் கோயிலும், தொகுதியும் வேண்டும் - ஆனால், வெற்றிக்கு பிறகு திராவிடமும் பிறமதங்களை உயர்த்தி பிடிக்கும் போலி மதசார்பின்மை வேண்டும் என்பது நிறம் மாறும் உயிரினத்தைவிட மோசமான செயல்.
பதவியை துறப்பாரா:
ஓட்டு வங்கி அரசியலுக்காக தமிழக மண்ணின் பெருமையை பறைசாற்றும் பாராளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள மறுக்கும் திருமாவளவன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க சிதம்பரம் தொகுதி மக்கள் வலியுறுத்த வேண்டும்" என்று காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications