For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பரங்குன்றம் தொகுதியில் 'மாம்பழம்' சின்னம் கிடைக்காததால் பாமக வேட்புமனு திடீர் வாபஸ்!

திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாததால் வேட்புமனுவை பாமக வாபஸ் பெற்றது. இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பாமக விலகியுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாததால் வேட்புமனுவை திருப்பரங்குன்றத்தில் பாமக வாபஸ் பெற்றது.

நவம்பர் 19ம் தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரவக்குறிச்சியில் பி.எம்.கே. பாஸ்கரனும், தஞ்சாவூரில் ஜி. குஞ்சிதபாதமும், திருப்பரங்குன்றத்தில் டி. செல்வமும் போட்டியிடுவர் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் ஒப்புதலுடன் இவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

இவர்கள் மூவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் அவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் அதிமுக, திமுக, பாஜக, பாமக, சுயேட்சைகள் என 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்று தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவாவை, பாமக வேட்பாளர் சந்தித்தார். அப்போது தனக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படவில்லை என கேள்விப்பட்டதாகவும், அதனால் தனது வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் சின்னம் குறித்து தாங்கள் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அது போன்று எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை எனவும் தேர்தல் நடத்தும் அதிகாரி ஜீவா, செல்வத்திடம் கூறி உள்ளார்.

இதனையடுத்து வெளியே வந்த செல்வம், தேர்தல் அதிகாரி கூறிய தகவல்கள் பற்றி கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். அவர்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன். எனக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கினால் தேர்தலில் போட்டியிடுவேன். அப்படி மாம்பழ சின்னம் ஒதுக்கவில்லை என்றால் வேட்புமனுவை வாபஸ் பெறுவேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கணிக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் இம்மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 3 தொகுதி தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, மூன்று தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவற்றை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், 3 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜேஷ் லக்கானி கூறி விட்டார். இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ஏதேதோ கூறி சமாளிக்கப் பார்த்தாரே தவிர, திருப்தியளிக்கும் வகையில் விளக்கமளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் பேசிக் கொள்ளுமாறு கூறி இராஜேஷ் லக்கானி ஒதுங்கிக் கொண்டார்.

பாட்டாளி மக்கள் கட்சி புதுவை மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு ஆணையின் பத்தாவது பத்தியின்படி, ஓர் அரசியல் கட்சி ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், பிற மாநிலங்களில் அக்கட்சி போட்டியிடும் போதும் அதற்குரிய சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் 3 தொகுதி தேர்தலுக்கும் பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு சின்னம் ஒதுக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நிலையில், பொதுத் தேர்தலுக்கு பொறுப்பு வகிக்கும் தேர்தல் ஆணைய சார்பு செயலாளர் பிரமோத் குமார் சர்மா தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். ஆனால், இடைத்தேர்தல்களுக்கு பொறுப்பு வகிக்கும் சார்பு செயலாளர் அஷ்விணி குமார் மொகல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க மறுத்து விட்டார்.

3 தொகுதி இடைத்தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் அதிகாரிகளிடம் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 3 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று கூறி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது. அனைத்துத் தேர்தலுக்கும் ஒரே விதிமுறைகள் தான் எனும் போது இரு தொகுதிகளுக்கு சின்னம் ஒதுக்கிவிட்டு, ஒரு தொகுதிக்கு மட்டும் மறுப்பது எந்த வகையான நியாயம்? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆணையத்தின் ஒருதரப்பான செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாத திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று அறிவித்துள்ளார்.

English summary
DR.Ramadoss announced his statement PMK not contest in Tiruparankundram by election. PMK candidate from the Assembly constituency in Thiruparankundram withdrew nomination on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X