For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா கட்சியை கைப்பற்றினால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்- துக்ளக் தலையங்கம்

சசிகலா நடராஜனின் ஒரே தகுதி அவர் மறைந்த ஜெயலலிதாவிற்கு 30 ஆண்டுகளாகப் பணிவிடை செய்தார் என்பதுதான்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: துக்ளக் ஆசிரியராக எஸ். குருமூர்த்தி பொறுப்பேற்ற பின்னர் துக்ளக் தலையங்கத்தில் சசிகலாவிற்கு எதிராக அனல் பறந்துள்ளது. பெரும்பான்மையான தொண்டர்களின் அதிருப்திக்கும், கோபத்திற்கும் ஆளான சசிகலா நடராஜன், தன்னைக் கட்சி மீது திணித்துக்கொள்வது, நாளடைவில் அதிமுகவை வீழ்ச்சிப் பாதைக்குத்தான் கொண்டு செல்லும் என்று துக்ளக் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் முழுவடிவமும் உங்களுக்காக தருகிறோம்.

'அரசியலிலோ, பொது வாழ்விலோ, கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க வேண்டும் என்ற எனக்கு துளியும் ஆசையில்லை. இனியும் எனக்கென்று வாழாமல், அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்கு பணி செய்து இருக்க விரும்புகிறேன். '

Thuglak magazine says ADMK will collapse if Sasikala becomes General Secretary

இது சசிகலா நடராஜன் தான் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் உள்ளே வர அனுமதி கோரி, ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதம். இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஜெயலலிதா மறைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில் என்ன நடந்தது என்பது பற்றி 15.12.16ஆம் தேதி 'ஹிந்து' ஆங்கில பத்திரிகை வெளியிட்ட செய்தி இதோ.

'6ஆம் தேதி காலை ஜெயலலிதா உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் போதே, பெரிய அளவில் ஜெயலலிதா படம் பொறித்த 25000 தினசரி காலண்டர்களை அச்சடிக்கக் கொடுத்த ஆர்டர்களை, அதிமுக முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரத்து செய்தனர். பிறகு சசிகலா நடராஜன் படத்தைப் பெரிதாகவும், ஜெயலலிதா படத்தை சிறியதாகவும் போட்டு அச்சடிக்க ஆர்டர் கொடுத்தனர். '

இது நடந்தது டிசம்பம் 6ஆம் தேதி. செய்தி வெளியானது டிசம்பம் 15ஆம் தேதி. ஜெயலலிதாவை அடக்கம் செய்து ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை. இதற்கிடையில் சசிகலா நடராஜனை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் உட்பட அமைச்சர்களும் கையெழுத்திட்டு கொடுக்கத் துவங்கினர். மற்றவர்களிடமும் கடிதங்களை வாங்கும் வேலை மும்முரமானது.

பத்திரிகையாளர்களையும், தொழிலதிபர்களையும், இதர முக்கிய நபர்களையும் அழைத்து, அவர்கள் தாங்களாகவே சசிகலா நடராஜனை சந்தித்தது போல புகைப்படங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டு பிரசுரமாகத் தொடங்கின. சசிகலா நடராஜன்தான் அதிமுகவை பிளவுபடாமல் காக்க முடியும் என்ற பேச்சு துவங்கியது.

பல இடங்களிலிருந்தும் வாகனங்களில் அதிமுக நிர்வாகிகள் வந்து, சசிகலா நடராஜன்தான் கட்சி தலைமையை ஏற்க வேண்டும் என்று கெஞ்சுவது, உண்ணாவிரதம் இருப்பது, போன்ற நாடகங்களும் நடந்து வருகின்றன.

இதலிருந்து ஒன்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 'அக்கா சேவைக்கே அர்ப்பணிப்பு. பதவி ஆசையே இல்லை' என்று பொய் கூறித்தான் போயஸ் தோட்டத்தில் சேர்ந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா நடராஜன் குடும்பம் சதி செய்தது அம்பலமானதால்தான் அவர், போயஸ் தோட்டத்திருந்து வெளியேற்றப்பட்டார். இது பற்றி சோ அவர்களிடம் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். சோ, தனது நெருங்கிய நண்பர்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தார்.

சசிகலா நடராஜன் மூடி மறைத்திருந்த அவருடைய பேராசை இப்போது வெளிப்பட்டிருக்கிறது. அப்படி இல்லை என்றால் 'எனக்கு பதவி ஆசை இல்லை. யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று அவர் கூறவில்லையே?. பதவி ஆசையால் தூண்டப்பட்டு கட்சியைக் கைப்பற்ற சசிகலா நடராஜன் காய்களை ரொம்பவும் ஜாக்கிரதையாக நகர்த்துகிறார். கட்சியை வந்து காலில் விழுந்ததால்தான் நான் சம்மதிக்கிறேன் என்று காட்டிக்கொள்ளவும். 'என்னை முக்கிய பிரமுகர்கள் வந்து பார்க்கிறார்கள், பாருங்கள்' என்று கட்சித்தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் காண்பிக்கவும் நாடகம் ஆடுகிறார். எல்லாம் பத்து நாட்களுக்குள்.

இந்த நாடகமெல்லாம் எதற்கு? அதிமுக தொண்டர்களிடையே சசிகலா நடராஜன் மீது கோபமும், அவரைப்பற்றிய பல கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன என்பது உலகமறிந்த விசயம். எந்த நடராஜன், திவாகரன் ஆசியோரைச் சதியாளர்கள் என்று ஜெயலலிதா வெறுத்து ஒதுக்கினாரோ, அவர்கள் சகிதமாகத்தானே சசிகலா நடராஜன் ஜெயலலிதாவிற்கு ஈமச்சடங்குகளை நடத்தினார். அதைப்பார்த்து லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மேலும் கொதிப்படைந்து இருக்கின்றனர் என்பது வெளிப்படை உண்மை.

இந்த கோபத்தை சமாளிக்கத்தான் இத்தனை நாடகங்கள். அமைச்சர்களும், கட்சித்தலைவர்களும் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதற்காக கட்சியைச் சசிகலா நடராஜனிடம் எழுதிக் கொடுக்கின்றனர். அவர்கள் எல்லோருமே' நாங்கள் ஸைபர்கள். ஜெயலலிதா என்கிற ஒன்று இல்லை என்றால் நாங்கள் ஒன்றுமே இல்லை. என்று கூறிக்கொண்டவர்கள். அவர்களைப் போன்ற நூறு, ஏன் ஆயிரம் ஸைஃபர்கள் சேர்ந்து சசிகலா நடராஜன் என்கிற ஸைஃபரைத் தேர்ந்தெடுத்தால் அவர் ஸைஃபர் இல்லை என்று ஆகிவிடுமா?

சசிகலா நடராஜனின் ஒரே தகுதி அவர் மறைந்த ஜெயலலிதாவிற்கு 30 ஆண்டுகளாகப் பணிவிடை செய்தார் என்பதுதான். எந்தவிதமான அரசியல், அரசு நிர்வாகம், பொது வாழ்க்கை, அனுபவம் இல்லாத அவர் எப்பபடி கட்சித் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர்?.ஜெயலலிதாவின் அறிவுக் கூர்மை, அனுவம், அரசியல் சாதுர்யம் எதுவும் சசிகலா நடராஜனுக்கு இல்லையென்பது தெரிந்ததே. சசிகலா நடராஜன் பொதுச் செயலாளராக வரவேண்டும் என்று கூறுகிறவர்களில் பலர் அவரை விட அதிகத் தகுதி, அனுபவம் பெற்றவர்கள்.

ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுக நிராதரவாக ஆகிவிட்டது என்பது உண்மைதான். அந்த நிலையை மாற்ற அதிமுகவின் எந்தத் தலைவர்களாலும் முடியாது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அதிமுகவின் அடிப்படை பலம் என்ன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிமுகவின் ஆதார பலமே அதனுடைய தொண்டர்கள்தான்.

இப்போதுள்ள சூழ்நிலையில் தொண்டர்களின் மனநிலையையும், கருத்தையும் அறிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். அது மாவட்டங்களில் பயணம் செய்து , தொண்டர்களின் கருத்துக்களை அறிய வேண்டும். பின்பு, கட்சியை நடத்த ஒரு தலைமைக் குழுவை அமைக்க வேண்டும்.

தனியொருவராக எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதாவைப் போல கட்சியை நடத்துவது கடினம். காலில் விழும் பழக்கம் நீக்கப்பட்டு கட்சியை நடத்தும் கலாசாரத்தை உருவாக்க அதிமுகவிற்கு இது ஒரு வாய்ப்பு.

ஆனால் அம்மாவிற்குப் பதில் சின்னம்மா அவர் காலுக்குப் பதில் இவர் கால் என்கிற வழிமுறை இனி அதிமுகவிற்கு ஒத்து வராது. இவற்றையெல்லாம் சிந்திப்பது அதிமுக மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் கடமை. எந்த கட்சியால் இவ்வளவு அதிகாரமும், செல்வாக்கும், செல்வமும் சசிகலா நடராஜனுக்கு கிடைத்ததோ, அவர் அந்த கட்சிக்கு ஆற்றக்கூடிய ஒரே கடன், தான் போட்டியிடாமல் ஒரு தலைமைக் குழுவை அமைக்க வகை செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் நான்தான் சின்னம்மா, என் காலில் விழுங்கள் என்கிறபாணியில் சசிகலா நடராஜன் முனைந்தால் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போலத்தான் ஆகும். அது அதிமுகவின் வீழ்ச்சிக்குத்தான் வழி வகுக்கும்.

எங்கள் கட்சியை நாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்துவோம் அதைக் கேட்க நீங்கள் யார்? என்று யாராவது கேட்கலாம். தமிழக அரசியலில் அதிமுக பெரும் திருப்பத்தைக் கொண்டு வந்த கட்சி. நாத்திகத்தை நாகரீகமாகக்கிய,தேசியத்தை எள்ளி நகையாடிய, நாட்டு ஒற்றுமையை குலைத்த தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

அதிமுக என்பது ஒரு தனி நபரின் அல்லது சிலரின் சொத்து அல்ல திமுக ஒரு குடும்ப சொத்தானது போல. அதிமுக சசிகலா நடராஜனின் குடும்பச் சொத்தாக ஆகிவிடக்கூடாது. சசிகலா நடராஜன் பொது செயலாளரானால், அவருடைய குடும்பம் அதிமுகவின் பட்டாவைத் தன் பெயருக்கு மாற்ற முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதற்கான அறிகுறிகள் உள்ளங்களை நெல்லிக்கனி போல் தெரிகிறது. ஆகவே சசிகலா நடராஜன் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியைக் கைவிடுவது அவருக்கும் நல்லது அதிமுகவிற்கும் நல்லது.

ஆனால் அந்த விதமான மாற்றத்திற்கு அவர் முயற்சி செய்வார் என்று தோன்றவில்லை. பெரும்பான்மையான தொண்டர்களின் அதிருப்திக்கும், கோபத்திற்கும் ஆளான சசிகலா நடராஜன், தன்னைக் கட்சி மீது திணித்துக்கொள்வது, நாளடைவில் அதிமுகவை வீழ்ச்சிப் பாதைக்குத்தான் கொண்டு செல்லும். அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய முக்கியமான கால கட்டம் இது. இல்லையென்றால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.

English summary
Thuglak editorial says Sasikala is waiting to taste the power. But if Sasikala becomes the head of the ADMK party, it will split, it adds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X